அலெக்சாண்டரின் படைத் தளபதி செல்யூகஸ் நிகாடரின் இந்தியாவுக்கான தூதராகச் சந்திரகுப்தரின் அரசவைக்கு மெகஸ்தனிஸ் வந்தபோதுதான், இண்டிகா புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்களை நேரில் பார்த்தார். அரசவைத் தூதராக இருந்த மெகஸ்தனிஸ், அரசரைப் பற்றியோ, ஆட்சியைப் பற்றியோ எதுவுமே குறிப்பிடாமலா இருந்திருப்பார்? நிறைய குறிப்பிட்டிருக்கிறார். மெகஸ்தனிஸின் கடைசிப் பகுதிக் குறிப்புகளை இந்த முறை காண்போம்.
போக்குவரத்தும், பொழுதுபோக்கும்
அந்தக் காலத்தின் போக்குவரத்து முறைகள் பற்றி மெகஸ்தனிஸ் குறிப்பிட்டுள்ளார். மக்கள் குதிரைகளின் மீது சவாரி செய்துள்ளனர். வசதியிருந்தவர்கள் ஒட்டகங்களின் மீதும்கூட சவாரி சென்றுள்ளனர். ஆனால், கழுதை மேல் ஏறிச் செல்வது அவமானமாகவும் பழிக்கத்தக்கதாகவும் கருதப்பட்டிருக்கிறது. செல்வந்தர்கள் யானைகளையும், சில நேரம் ரதங்களையும் பயன்படுத்தியுள்ளனர்.
மரத்தால் ஆன வீடுகள் இரண்டு, மூன்று மாடிகளுடன் இருந்திருக்கின்றன. தீ விபத்து நேராத வண்ணம் பாதுகாப்பதற்கு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
சூதாட்டம், எருது பந்தயம், விலங்குச் சண்டைகள், மற்போர் போன்றவை அந்நாளில் மக்களின் முக்கியமான பொழுதுபோக்குகளாக இருந்துள்ளன.
பாடலிபுத்திரம்
மெகஸ்தனிஸ் தங்கியிருந்த மவுரியத் தலைநகர் பாடலிபுத்திரம் புகழ்பெற்றது. கங்கைக் கரையில் அமைந்திருந்த அந்த நகரத்துக்கு மரத்தால் மதில் சுவர் கட்டப்பட்டிருந்தது. அந்த நகரத்துக்குள் செல்ல 64 சங்கிலிப் பாலங்களும், 570 கொத்தளங்களும் அமைக்கப்பட்டிருந்தன. அதைச் சுற்றிலும் ஆழமான அகழி இருந்ததால், வெளியாட்கள் யாரும் நுழைய முடியாமல் இருந்துள்ளது.
பாடலிபுத்திரத்தில் வாழ்ந்த அயல் நாட்டினர் நன்கு பராமரிக்கப்பட்டுள்ளனர். பிறப்பு-இறப்புக் கணக்கும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
மன்னரின் பாதுகாப்பு
மன்னர் அதிகாரமும் செல்வாக்கும் பெற்றிருந்தாலும், எந்த நேரமும் கொல்லப்படும் ஆபத்தும் இருந்திருக்கிறது. அதனால் மன்னர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளத் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். அரசரின் முன்னாலேயே உணவு பரிசோதிக்கப்பட்டது. ஒரே அறையில் அடுத்தடுத்த நாட்களில் அரசர் உறங்குவதில்லை. வேட்டைக்குச் செல்லும்போதுகூட அவருக்குப் பலமான பாதுகாப்பு வழங்கப்பட்டது. ரகசியச் செய்திகளை ஒற்றர்கள் உடனுக்குடன் மன்னருக்குத் தெரிவித்தனர்.
போர் முறை
அந்நாளில் போர் புரியும் முறை இன்றைய காலம் போல விதிமுறைகள் வகுக்கப்பட்டதாக இல்லை. அதேநேரம் நாட்டிலுள்ள அனைவரும் போரில் ஈடுபடவில்லை. போர்க் காலங்களிலும் விவசாயிகள் விவசாயம் செய்துள்ளனர்.
போர் திட்டமிடப்பட்டதாக இருந்தது. யானைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. குதிரை வீரர்கள் சேணம் பூட்டாமல் குதிரையில் சென்றுள்ளனர். போர்க்களத்தில் நேருக்கு நேர் மோதும்போது, பதப்படுத்தப்படாத எருதுத் தோலில் செய்யப்பட்ட நீண்ட, குறுகலான கேடயத்தை இடது கையில் பிடித்துக்கொண்டே காலாட் படை வீரர்கள் போரிட்டுள்ளனர். சிலர் வேல்கம்பைப் பயன்படுத்தியுள்ளனர். எல்லோரிடமும் அகன்ற வாளும் இருந்திருக்கிறது. அதை இரண்டு கைகளாலும் பிடித்துப் பயன்படுத்தியுள்ளனர்.
காலாட்படை வீரர்கள், அவர்களுக்கு இணையான உயரமுள்ள வில்லையும் நீளமான அம்பையும் பயன்படுத்தியுள்ளனர். குறிபார்த்து அம்பு எய்வதில் வல்லவர்களாக இருந்துள்ளனர். கேடயமோ, மார்புக் கவசமோ, பாதுகாப்புக் கவசமோ அணிந்திருந்தாலும் இந்த அம்புகளில் இருந்து தப்புவது கடினம்தான் என்கிறார் மெகஸ்தனிஸ். செல்யூகஸ் நிகாடரின் படைகள் சந்திரகுப்த மவுரியரிடம் தோற்றதை இந்த இடத்தில் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்.
போர் இல்லாத காலங்களில் போர் விலங்குகளும் படைக் கலங்களும் அரண்மனை லாயங்களிலும் ஆயுதச் சாலைகளிலும் இருந்துள்ளன.
No comments:
Post a Comment