கணிதத்திற்கு நோபல் பரிசு வழங்கப்படுவதில்லை. ஆனால் நோபல் பரிசின் புகழுக்கு இணையானதாக, நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சர்வதேசக் கணித மாநாட்டின் தொடக்க விழாவில் “பீல்ட்ஸ் பதக்கம்” (“Fields Medal”) எனும் தலைசிறந்த பரிசு 1936 முதல் வழங்கப்பட்டு வருகிறது.
கவுரவம்
இந்த அகில உலகக் கணித மாநாடு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறையே நடைபெறும். உலகெங்கிலும் உள்ள தலைசிறந்த கணிதவியலாளர்கள் ஒரே இடத்தில் குழுமியிருப்பது மிக முக்கியமானதானது. அரிதானது. எனவே, கணித மாநாடுகளில் முதன்மை பெற்றதாக இந்த மாநாட்டைக் கணித அறிஞர்கள் கருதுகிறார்கள். இதில் பங்கேற்பதையே பெரிய கவுரவமாகக் கருதுவர்.
இம்மாநாட்டில் “பீல்ட்ஸ் பதக்கம்” தவிர நெவன்லினா பரிசு, கவுஸ் பரிசு, செர்ன் பதக்கம், லீலாவதி பரிசு போன்ற ஏனைய மிகச் சிறந்த கணிதப் பரிசுகளும், பதக்கங்களும் தலைசிறந்த கணிதச் சாதனை படைத்த அறிஞர்களுக்கு அகில உலகக் கணிதக் கழகம் (International Mathematical Union – IMU) என்ற அமைப்பு வழங்கிக் கவுரவிக்கிறது.
இந்த ஆண்டு ஆகஸ்ட் 13 முதல் 21 வரை ஒன்பது நாட்கள் சர்வதேசக் கணித மாநாடு தென் கொரியாவில் அமைந்த சியோல் நகரில் நடந்தது.
வெற்றியாளர்கள்
நாற்பது வயதிற்கு உட்பட்டு மிகச் சிறந்த கணிதப் பங்களிப்பை அளிக்கும் இளம் கணிதவியலாளர்களுக்கு பீல்ட்ஸ் பதக்கம் வழங்கப்படும். ஆர்தூர் அவிலா, மஞ்சுல் பார்கவா, மார்டின் ஹைரேர், மர்யம் மிர்சாகாணி என்ற நான்கு இளம் கணிதவியலாளர்கள் 2014-ம் ஆண்டுக்கான பீல்ட்ஸ் பதக்கத்தைத் தட்டிச்சென்றனர்.
கணிதப் பயன்பாடு சார்ந்த கணினி மற்றும் தகவல் தொழில்நுட்ப அறிவியல் பங்களிப்பிற்கு வழங்கப்படும் நெவன்லினா பரிசை சுபாஷ் கோட் என்பவர் வென்றார். கணிதத்தில் வாழ்நாள் சாதனை படைத்த அறிஞருக்கு வழங்கப்படும் கவுஸ் பரிசை ஸ்டான்லி ஒஷர் தட்டிச்சென்றார். அதிக அளவில் அங்கீகாரம் பெற்ற கணிதக் கருத்துகளைப் படைத்திருக்கும் கணிதவியலாளருக்கு வழங்கப்படும் செர்ன் பதக்கத்தை பிலிப் கிரிப்பித்ஸ் வென்றார்.
கணிதத்தை உலகெங்கும் பிரபலப்படுத்தி அதனைப் பொதுமக்களுக்கு எளிமையாகக் கொண்டு சேர்த்து, கணிதப் புகழ் பரப்பும் கணிதவியலாளருக்கு வழங்கப்படும் லீலாவதி பரிசை அட்ரியேன் பியான்சா வென்றார்.
இந்தியர்கள்
பீல் ட்ஸ் பதக்கத்தை வென்ற மஞ்சுல் பார்கவாவும், நெவன்லினா பரிசை வென்ற சுபாஷ் கோட் என்பவரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். எனவே மிக முக்கிய கணிதப் பரிசுகளை வென்றவர்களில் இருவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்று நாம் பெருமைப்பட்டுக்
கொள்ளலாம். அதேபோல் பீல்ட்ஸ் பதக்கம் வென்ற மரியம் மிர்சாகாணி என்ற பெண்மணியே அப்பதக்கத்தை வென்ற முதல் பெண் கணிதவியலாளர் என்ற பெருமையைப் பெற்றார்.
நான்கு ஆண்டுகளுக்கு முன் 2010-ல் இதே சர்வதேசக் கணித மாநாடு இந்தியாவில் அமைந்த ஹைதராபாதில் நடைபெற்றது. 2018-ல் நடைபெற விருக்கும் அடுத்த சர்வதேசக் கணித மாநாடு பிரேசில் நாட்டில் உள்ள ரியோ - டி - ஜெனேரியோ என்ற நகரில் நடத்தப்படும்.
உலக மொழியான கணிதத்திற்கு இந்த மாநாடும், பரிசுகளும் பெருமை சேர்க்கின்றன. இப்பரிசுகள் சாதனை படைத்த கணிதவியலாளர்களுக்குத் தேவைப்படும் அமுதசுரபியாக அமைகின்றன. நீங்களும் அதற்கு முயலலாமே?
No comments:
Post a Comment