Tuesday, 28 October 2014

வ.ரா-வும் மீட்கப்பட்ட கடிதங்களும்

வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் வாங்க எத்தனை பேரால் முடிந்தது என்பது தெரியவில்லை. ஆனால், அறிஞர் அண்ணாவிடமிருந்து ‘அக்ரஹாரத்து அதிசய மனிதர்’ என்ற பட்டத்தை வாங்கியவர் வ. ராமசாமி ஐயங்கார் என்கிற வ.ரா.
விடுதலைப் போராட்ட வீரர், அலிப்பூர் சிறையில் துன்பத்தை அனுபவித்தவர், பெண் விடுதலை, விதவை மறுமணம், தாழ்த்தப்பட்டவர் நலனுக்காக ஓயாது எழுதியும் போராடியும் வந்தவர். மணிக்கொடியின் ஆசிரியர் என்ற முறையில், நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி என எல்லாத் துறைகளிலும் தடம் பதித்த வ.ரா-வுக்கு அவருடைய சமகாலத்தவர்கள் எழுதிய கடிதங்கள் தற்போது தொகுக் கப்பட்டு நூலாக வரவிருக்கின்றன. சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற பேராசிரியர் வீ. அரசு இந்தப் பணியை மேற்கொண்டிருக்கிறார்.
“நூற்றோடு நூற்றி ஒன்றாவது நூலாக நான் இதை வெளியிட விரும்பவில்லை. வடிவமைப்பில் பெரிய புத்தக மாக, எல்லாக் கடிதங்களுக்கும் தனியாக ஒரு விளக்கம் எழுதி, வ.ரா. என்ற ஆளுமையை வெளிப்படுத்துவதே என்னுடைய நோக்கம்” என்கிறார் அரசு.
குப்பையில் கிடந்த வரலாறு
இக்கடிதங்களை அவர் கண்டெடுத்த கதையைக் கேட்கும்போது மனம் வேதனையடைகிறது. “வ.ரா-வின் மனைவி இறந்ததை அறிந்து நுங்கம்பாக்கத்தில் உள்ள அவருடைய இல்லத்துக்குச் சென்றிருந்தேன். அங்கே ஒரு மூலையில் குப்பையாகக் குவிக்கப்பட்டு, சில காகிதங்கள் கிடந்தன. அவற்றைக் கூர்ந்து நோக்கியதில், முதலில் தென்பட்டது, பாரதிதாசன் வ.ரா-வுக்கு எழுதிய கடிதம்” என்று விளக்கினார் அரசு.
வைணவ ஆசாரியரும் சீர்திருத்தவாதியுமான இராமானுஜர் குறித்து வ.ரா. திரைப்படம் இயக்கினார். அந்தப் படத்துக்குப் பாடல் எழுதுவதற்கு பாரதிதாசனை ஏற் பாடு செய்திருந்தார். செய்யப்பட்ட ஏற்பாடுகள் சரியில்லை என்று கடுமையாகத் திட்டி எழுதியிருந்தார் அக்கடிதத்தில்.
“இருப்பினும் நீ என் நண்பன் என்பதால், எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்கிறேன்” என்று பாரதிதாசன் கடிதத்தை முடித்திருந்தாராம்.
வ.ரா. மணிக்கொடியின் ஆசிரியராக இருந்த கால கட்டத்தில், அதில் அதிகக் கவிதைகளை எழுதியவர் புதுக் கவிதை மரபுக்கு வழிகாட்டிய ந.பிச்சமூர்த்தி. அவருக்கு, அடுத்தபடியாக அதிகக் கவிதைகளை பாரதிதாசன்தான் மணிக்கொடியில் எழுதியிருக்கிறார். அத்துடன் புதுமைப் பித்தனின் பெரும்பாலான கதைகள் வ.ரா. காலத்தில்தான் மணிக்கொடியில் வெளியாகியிருக்கின்றன.
வ.ரா. என்ற முன்னோடி
‘பாரதியார் மகாகவியா?’ என்றும் ‘அவருடைய கவிதைகள் மகா கவிதைகளா?’ என்றும் கல்கி கிருஷ்ண மூர்த்தி போன்றோர் கேள்வி எழுப்பியபோது, மணிக் கொடியில் தொடர்ந்து எழுதி, பாரதி மகா கவிதான் என்று நிலைநிறுத்தியவர் வ.ரா.
“நவீன தமிழ் இலக்கியத்துக்குப் பங்களித்தவர்கள் எல்லோருமே வ.ரா-வின் எழுத்தின் தாக்கத்துக்கு உள்ளான வர்களே. அந்த அளவுக்கு அவருக்கு ஒரு சிறந்த எழுத்து நடை இருந்தது” என்கிறார் அரசு.
அவர் எழுதிய கோதைத்தீவு நாவல், பெண்களால் மட்டுமே ஆளப்படும் கற்பனை உலகம். வ.ரா. வாழ்ந்த காலத்தில் இப்படி ஒரு கருத்தை எண்ணிப் பார்த்திருக்க முடியுமா என்பது ஐயமே.
இருப்பினும் ஒரு கட்டத்தில் அவர், தன்னுடைய சொந்த ஊரான திருப்பழனத்துக்குச் சென்று தங்கிவிட்டார். திருவையாருக்கு அருகில் உள்ள இந்த ஊர் தேவாரத்தால் பாடப்பட்ட ஊர். ‘அன்னம் வைகும் வயல் பழனத்தனை’ என்கிறார் நாவுக்கரசர். அவர் சென்னையை விட்டுச் சென்றுவிட்டதைக் கேள்விப்பட்ட வ.உ.சி. தூத்துக்குடி யிலிருந்து மிகுந்த கோபத்துடன் ஒரு கடிதம் எழுதினார்:
“தாங்கள் தேசத்துக்குச் சேவை செய்து முடிந்துவிட்ட தென்று கருதித் திருப்பழனத்தில் போய்த் தூங்கத் தொடங்கிவிட்டீர்களா? அல்லது தாங்கள் பெரும் பொருள் மீதப்படுத்திவிட்டமையால் இன்பம் துய்க்கத் தொடங்கிவிட்டீர்களா? இரண்டில் எது நினைத்தாலும் தவறு. தேசம் அடிமைப்பட்டேயிருக்கிறது. என் போன்ற உண்மை தேசாபிமானிகள் பலர் வறுமையில் ஆழ்ந்திருக்கிறோம்” என்று தன்னுடைய கடிதத்தில் வ.உ.சி. தெரிவிக்கிறார்.
“தேசத்துக்குச் சேவை செய்ய வெளிக் கிளம்புக” என்று கூறும் வ.உ.சி., இலங்கையிலிருந்து வெளியாகும் வீரகேசரி பத்திரிகையின் தலைமையாசிரியர் பொறுப்பை ஏற்குமாறு வ.ரா-வைக் கேட்டுக்கொள்கிறார். அதை ஏற்றுக் கொண்டுதான் வ.ரா-வும் இலங்கை சென்றார்.
குப்பையிலிருந்து தப்பிப் பிழைத்த கடிதங்கள் வரலாற் றின் மீது வெளிச்சம் பாய்ச்சுகின்றன. இந்த அதிர்ஷ்டம் வாய்க்கப் பெறாத எழுத்தாளர்கள் தமிழில் ஏராளம் என்பது தான் நமது அவலம்.
- ப. கோலப்பன், தொடர்புக்கு: kolappan.b@thehindu.co.in

No comments:

Post a Comment