Thursday, 30 October 2014

வேட்டையாடு... விளையாடு...

சில உயிரினங்கள் இரையைப் பிடிக்க வசதியாக விசேஷ உடல் அமைப்பையும், பண்பையும் கொண்டுள்ளது. அப்படிப்பட்ட சில உயிரினங்களைப் பார்ப்போம்.
குத்தி வீழ்த்தும் உயிரி
பல வண்ணங்களில் கண்ணைக் கவரும் பீக்காக் மாண்டிஸ் ஷ்ரிம்ப் (peacock mantis shrimp) என்ற இந்த இறால், இரையை வித்தியாசமாக வீழ்த்தும். இரை அருகில் வந்ததும் கால்களால் குத்த ஆரம்பிக்கும். அதாவது நாம் ஒரு முறை கண் சிமிட்டும் நேரத்துக்குள் 50 தடவை குத்தி விடும் அளவுக்கு வேகமாகச் செயல்படும் ஆற்றல் பெற்றது. இரை சுதாரிப்பதற்குள் ஓடுகளை இழந்து, உயிரை விட்டுவிடும். கடினமான கண்ணாடியையும் இப்படிக் குத்தியே இந்த இறாலால் உடைத்துவிட முடியும்.
வாயிலிருந்து வரும் வில்லு
ஆர்ச்சர் மீனின் (archer fish) இரை எது தெரியுமா? கரைகயோரம் இருக்கும் தாவரங்களில் வசிக்கும் பூச்சிகள்தான். இவற்றை நீரில் வசிக்கும் இந்த மீனால் எப்படிப் பிடிக்க முடியும்? தண்ணீரின் மேல் மட்டத்துக்கு வந்து தாவரங்களைக் கவனிக்கும். ஏதாவது பூச்சியைக் கண்டவுடன் வாய் நிறைய நீரை உறிஞ்சும்.
பூச்சியை நோக்கி வில்லில் இருந்து அம்பு எய்வது போல, தண்ணீரைப் பீய்ச்சி அடிக்கும். பூச்சி பயந்து போய் தண்ணீரில் விழும். வேகமாக நீந்திச் சென்று பூச்சியைச் சாப்பிட்டுவிடும். 16 அடி உயரம் வரை கூட இப்படித் தண்ணீரைப் பீய்ச்சி அடிக்க இந்த மீன்களால் முடியும். ஆனால், 3 முதல் 6 அடி வரையே பெரும்பாலும் குறி வைத்து இரையைப் பிடிக்கிறது. முதல் முயற்சியில் இரை கிடைக்காவிட்டால், தொடர்ந்து முயன்று பிடித்துவிடும்.
ஷாக் கொடுக்கும் உயிரி
குறைவான பார்வைத் திறன் கொண்டது எலக்ட்ரிக் ஈல் (electric eel). தன்னுடைய உடலிலிருந்து 10 வோல்ட் மின்சாரத்தை வெளிப்படுத்தி, இரை அருகில் இருப்பதை உறுதி செய்துகொள்ளும் இது. இரை நெருங்கியவுடன் 600 வோல்ட் மின்சாரத்தைப் பாய்ச்சுகிறது. உடனே இரை இறந்துவிடும். சராசரியாக 8 அடி நீளம், 20 கிலோ எடையும் கொண்ட எலக்ட்ரிக் ஈல், மீன்களையும் தவளைகளையும் விரும்பிச் சாப்பிடும்.
டன் கணக்கு உணவு
ஹம்பேக் திமிங்கிலத்தின் (humpback whale) உணவு எது தெரியுமா? சிறிய மீன்கள், இறால் ஆகியவைதான். இது டன் கணக்கில் உணவை விழுங்கும். மீன்கள் கூட்டத்தைக் கண்டவுடன் வேகத்தைக் குறைக்கும். காற்றை ஊதி, குமிழ்களை உருவாக்கும். குமிழ் வட்டங்களுக்குள் சிக்கிய மீன் கூட்டத்தைப் பெரிய வாயைத் திறந்து அப்படியே விழுங்கிவிடும்.
வலை விரிக்கும் பூச்சி
சில உயிரினங்கள் இரையைப் பிடிக்க வசதியாக விசேஷ உடல் அமைப்பையும், பண்பையும் இயற்கை கொடுத்திருக்கிறது. அப்படிப்பட்ட சில உயிரினங்களைப் பார்ப்போமா?
மண்ணுக்குள் ஒரு சுரங்கத்தை அமைக்கும் ட்ராப் டோர் சிலந்தி (Trap-Door Spider). சுரங்கத்தின் வாயிலை வலை அல்லது நார்களைக் கொண்டு அடைத்துவிட்டு, உள்ளே காத்திருக்கும். அந்த வழியாக வரும் பூச்சிகளோ, சிறிய உயிரினங்களோ தெரியாமல் வலையைத் தொட்டால் அவ்வளவுதான். உள்ளிருக்கும் சிலந்தி வேகமாக வெளியே வந்து, இரையைப் பிடித்துவிடும். சிலந்தியின் சுரங்கம் யார் கண்களுக்கும் எளிதாகத் தெரியாது. வலை விரித்து இரையைப் பிடிக்கிறது இந்தச் சிலந்தி.
விஷத்தால் கிடைக்கும் உணவு
தென் அமெரிக்காவில் வாழும் ராட்சத பூரானின் பெயர் அமேசான் ராட்சத பூரான் (Amazonian Giant Centipede). ஒரு அடி நீளம் இருக்கும். சத்தம் இல்லாமல் குகையின் மேற்கூரைக்கு வேகமாகச் செல்லும். அங்கே தொங்கிக்கொண்டிருக்கும் வெளவாலைத் தன் கால்களால் பிடித்து, விஷத்தைச் செலுத்தும். வெளவால் இறந்தவுடன், ஒரு மணி நேரத்தில் இரையை முழுவதும் சாப்பிட்டு விடும். எலி, சிறிய பறவை, பல்லி, தவளை ஆகியவை இந்தப் பூரானின் விருப்ப உணவுகள்.

No comments:

Post a Comment