Tuesday, 2 September 2014

ஹிட்லரின் எழுச்சியும் வீழ்ச்சியும்

முதல் உலகப் போரில் கிடைத்த மாபெரும் தோல்வி ஜெர்மனியை நிலைகுலையச் செய்திருந்தது. அந்தப் போரின் முடிவில்,1919 ஜூன் 28-ல் ஜெர்மனிக்கும் நேசநாடுகளுக்கும் இடையில் கையெழுத்தான வெர்சைல்ஸ் ஒப்பந்தமும் ஜெர்மனிக்குக் கடும் நெருக்கடியை அளித்திருந்தது. வெற்றிபெற்ற நாடுகளுக்குப் பெரிய தொகையை ஜெர்மனி நஷ்ட ஈடாகத் தர வேண்டிவந்தது. 10% நிலப் பகுதியை ஜெர்மனி இழந்தது. இதற்கிடையே முதல் உலகப் போரின்போது பவேரியா ராணுவத்தில் பணியாற்றிய ஹிட்லர், 1930-களின் தொடக்கத்தில் ஜெர்மனி அரசியலில் அசாத்தியமான வளர்ச்சி பெற்றிருந்தார். 1933-ல் ஜெர்மனியின் அதிபரானதும் ஐரோப்பிய நாடுகளை வென்று தனது சாம்ராஜ்யத்தை விரிவாக்க வேண்டும் என்று முடிவுசெய்தார். அதன் ஒரு பகுதியாகத்தான் 1939 செப்டம்பர் 1-ல் போலந்து மீது போர் தொடுத்தார்.
தொடக்க வெற்றிகள்
போர் தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்கு ஜெர்மனியின் கைதான் ஓங்கியிருந்தது. மேற்கு ஐரோப்பாவின் பல பகுதிகளை ஜெர்மனி ராணுவம் கைப்பற்றியிருந்தது. இத்தாலியின் அதிபர் பெனிட்டோ முசோலினி, மத்தியத் தரைக்கடல் பகுதியில் ரோமானியப் பேரரசை நிறுவ வேண்டும் என்ற எண்ணத்தில், ஜெர்மனியுடன் இணைந்து போரில் ஈடுபட்டார். போரில் கிடைத்த ஆரம்ப வெற்றிகளால் ஊக்கம் பெற்ற ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன் நாடுகளையும் ஊடுருவித் தாக்கிக்கொண்டிருந்தது. பிரான்ஸ் மீதான தாக்குதலில் ஜெர்மனிக்கு இத்தாலி கைகொடுத்தது. ஆஸ்திரியா, செக்கோஸ்லோவேகியா, போலந்து, நார்வே, டென்மார்க், பெல்ஜியம், கிரேக்கம் என்று ஐரோப்பாவின் பல நாடுகளில் ஜெர்மனியின் போர் முரசு ஓங்கி ஒலித்துக்கொண்டிருந்தது.
போர்த் தளவாடங்கள்
போர் என்றால், ராணுவத் தளவாடங்கள் வண்டி வண்டியாகத் தேவை அல்லவா? போர் விமானங்கள், பீரங்கிகள், இயந்திரத் துப்பாக்கிகள், நீர்மூழ்கிக் கப்பல்கள் என்று குண்டூசி தொடங்கி வெடிகுண்டு வரை ஜெர்மனிக்கும் பிற நாடுகளுக்கும் தேவைப்பட்டன. பிரிட்டனின் நட்பு நாடான அமெரிக்கா நேரடியாகப் போரில் குதிக்கவில்லையே தவிர, பிரிட்டனுக்குத் தேவையான ராணுவத் தளவாடங்களை டன் கணக்கில் அனுப்பிக்கொண்டிருந்தது. அதே நேரம், ஜெர்மனியின் ராணுவத் தளவாட அமைச்சர் ப்ரிட்ஸ் டோட் ஜெர்மனியின் ஆயுதத் தேவைகளை நிறைவேற்றக் கடுமையாக உழைத்துக்கொண்டிருந்தார். 1942 பிப்ரவரி 8-ல் விமான விபத்தில் அவர் இறந்ததை அடுத்து ஆயுத உற்பத்தியில் நெருக்கடி ஏற்பட்டது. அப்போது ஹிட்லரின் நம்பிக்கைக்குரிய கட்டிடக் கலைஞரான ஆல்பர்ட் ஸ்பியர் ராணுவத் தளவாட அமைச்சரானார். அவரது பெரும் முயற்சியால் ஜெர்மனியின் போர் விமானங்கள், பீரங்கிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது.
அமெரிக்கா என்ற அசுரன்
அமெரிக்காவின் பேர்ல் ஹார்பர் மீது 1941 டிசம்பர் 7-ல் ஜப்பான் தாக்குதல் நடத்தியது. ஜப்பானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான மறைமுகமான சந்தைப் பொருளாதார மோதல்கள்தான் அமெரிக்கா மீதான தாக்குதலுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. முதல் உலகப் போரின்போதும் கடைசிக் கட்டத்தில்தான் அமெரிக்கா களமிறங்கியது. ஆனால், போரைக் கச்சிதமாக முடித்தும் வைத்தது. அதேபோல், இந்தப் போரிலும் அதுவரை பார்வையாளராக இருந்த அமெரிக்கா, பேர்ல் ஹார்பர் தாக்குதலுக்குப் பின்னர் ஆவேசத்துடன் களமிறங்கியது. அந்த நேரம் பார்த்து, அமெரிக்காவின் கவனம் ஜப்பான் மீதுதான் இருக்கும் என்று நினைத்து, ஹிட்லர் அந்த நாட்டின் மீது போர்ப் பிரகடனம் செய்தார். அதுவே ஜெர்மனியை வீழ்ச்சியை நோக்கி அழைத்துச் சென்றது. அமெரிக்காவின் தொழில்துறை காட்டிய அசுர உழைப்புக்கு ஜெர்மனியால் ஈடுகொடுக்க முடியவில்லை. ஜெர்மனி 1944-ல் மட்டும் 40,000 போர் விமானங்களைத் தயாரித்தது என்றால், அமெரிக்கா அந்த ஆண்டில் 1,14,000 விமானங்களைத் தயாரித்தது. பிரிட்டன், ரஷ்யா ஆகிய நாடுகளும் ஆயுத உற்பத்தியில் ஜெர்மனியைத் திணறச் செய்தன.
ஆப்பிரிக்காவில் காத்திருந்த அதிர்ச்சி
போர் வாகனங்களுக்குத் தேவையான எரிபொருளும் ஜெர்மனியின் கையிருப்பில் இருந்து குறைந்துகொண்டே வந்தது. வடக்கு ஆப்பிரிக்காவைக் கைப்பற்றினால், அங்கிருந்து மத்தியக் கிழக்கு நாடுகளின் எண்ணெய் வளத்தைப் போருக்காகப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று ஜெர்மனி திட்டமிட்டிருந்தது.
1942-ல் லிபியாவின் டோப்ருக் துறைமுகத்தை ஜெர்மனியின் ஃபீல்டு மார்ஷல் இர்வின் ரோமெல் கைப்பற்றினார். ஆனால், அவர் தொடர்ந்து முன்னேறியபோது பிரிட்டன் படைகளின் கடுமையான தாக்குதலைச் சந்திக்க நேரிட்டது. மொராக்கோ மற்றும் அல்ஜீரியாவிலும் பிரிட்டன் படைகள் ஜெர்மனி மற்றும் இத்தாலி வீரர்களை ஓட ஓட விரட்டின.
ரஷ்யர்களின் தீரம்
இந்தப் போரில் சோவியத் ஒன்றியத்தின் பலத்தைப் பற்றி ஹிட்லர் தப்புக்கணக்கு போட்டிருந்தார். அதிபர் ஸ்டாலினின் உறுதிமிக்க வார்த்தைகளால் ஊக்கம்பெற்ற ரஷ்யர்கள் தீரத்துடன் போர் புரிந்தனர். 1941-ல் மாஸ்கோவைக் கைப்பற்ற ஹிட்லர் போட்டிருந்த திட்டம் பலிக்கவில்லை. தொடர்ந்து போரிட்டதால் களைத்திருந்த ஜெர்மன் வீரர்கள் ரஷ்யாவின் கடும் குளிரைச் சமாளிக்க முடியாமல் திணறினர். இதைப் பயன்படுத்திக்கொண்டு, ரஷ்யர்கள் ஜெர்மன் படைகளைச் சிதறடித்தனர். அதே போல் ஸ்டாலின்கிராடு பகுதியில் நடந்த சண்டையின் முடிவில் 2,35,000 ஜெர்மன் வீரர்கள் கைதுசெய்யப்பட்டனர். 2,00,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
இறுதி வீரம்
தோல்வி உறுதியான நிலையில், ரஷ்யாவின் கர்ஸ்க் பகுதியில் நடந்த சண்டையில் ஜெர்மன் வீரர்கள் தங்களிடம் மிச்சமிருந்த வீரத்தை வெளிக்காட்டினர். நிலத்தில் நடந்த மிகப் பெரிய டாங்க் சண்டை என்று வர்ணிக்கப்படும் இந்தச் சண்டையில், மொத்தம் 40 லட்சம் வீரர்கள் கலந்துகொண்டனர். 13,000 டாங்குகள், 12,000 போர் விமானங்கள் என்று பிரம்மாண்டமாக நடந்த அந்தப் போரில், ஜெர்மன் வீரர்கள் தீரத்துடன் போரிட்டாலும் வெற்றி ரஷ்யர்கள் பக்கம் இருந்தது.
1943-ல் ஜெர்மனி மீது நேச நாடுகளின் படைகள் கடும் தாக்குதலில் இறங்கின. பலர் கொல்லப்பட்டனர். போரில் தோற்றுவிட்டோம் என்பதை ஜெர்மனி மக்கள் புரிந்துகொண்டனர். நாஜிப் படைகள்மீது அந்நாட்டு மக்கள் கடும் கோபமடைந்தனர். மே 7, 1945-ல் ஜெர்மனி நேச நாடுகளிடம் சரணடைந்தது. அதற்கு முன்பாக, ஏப்ரல் 30-ல் ஹிட்லர் தற்கொலை செய்துகொண்டார்.
ஹிட்லரைப் பகடி செய்து, சார்லி சாப்ளின் இயக்கி நடித்த ‘தி கிரேட் டிக்டேட்டர்’ படத்தில், சர்வாதிகாரி ஹைங்கல் கண்களில் ஆதிக்க வெறி மின்ன, உலகப் பந்து போன்ற பலூனை, தட்டித் தட்டி விளையாடுவார். திடீரென்று பலூன் வெடித்துவிடும். கிட்டத்தட்ட அதே நிலைதான் ஹிட்லருக்கு ஏற்பட்டது.

No comments:

Post a Comment