Monday, 15 September 2014

21ஆம் நூற்றாண்டின் முதல் சர்வதேச கிரிக்கெட் வீராங்கனை

21ஆம் நூற்றாண்டின் முதல் சர்வதேச கிரிக்கெட் வீராங்கனை என்ற பெருமையை அயர்லாந்து வீராங்கனை கேபி லூயிஸ் பெற்றுள்ளார்.

13 ஆண்டுகள் 166 நாட்களே நிரம்பிய கேபி லூயிஸ் சீனியர் கிரிக்கெட் அணிக்கு ஆடிய, 21ஆம் நூற்றாண்டில் பிறந்த முதல் கிரிக்கெட் வீராங்கனை ஆவார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 20 ஓவர் கிரிக்கெட் சர்வதேச போட்டியில் இவர் அயர்லாந்துக்காக தன் முதல் போட்டியில் ஆடினார். இவரது முதல் போட்டி அபாரமாக அமையவில்லை. இவர் 5 ரன்கள்தான் அடித்தார். தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிராக அயர்லாந்து மகளிர் அணி படுதோல்வியைச் சந்தித்தது.

அடுத்த போட்டியில் 12 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். அந்தப் போட்டியிலும் அயர்லாந்து மகளிர் அணி தோற்றது.

இதற்கு முன்பாகவும் அவர் அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணிக்காக சில போட்டிகளில் விளையாடினார். ஆனால் அந்தப் போட்டிகளுக்கு சர்வதேச தகுதி இல்லை.

சிறிய வயதில் சர்வதேச கிரிக்கெட் ஆடிய சாதனை பாகிஸ்தானைச் சேர்ந்தது. இவரும் மகளிர் அணி வீராங்கனைதான். சஜிதா ஷா என்ற அந்த வீராங்கனை பாகிஸ்தானுக்காக முதல் சர்வதேச கிரிக்கெட்டை ஆடும்போது அவரது வயது 12 ஆண்டுகள் 171 நாட்களே. ஆகவே கேபி லூயிஸ் அதனை முறியடிக்கவில்லை. பாக். வீராங்கனை சஜிதா ஷா 2000ஆம் ஆண்டில் தன் முதல் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடினார்.

1989ஆம் ஆண்டு சச்சின் டெண்டுல்கர் பாகிஸ்தானுக்கு எதிராக முதல் டெஸ்ட்டை ஆடும்போது 16 வயது. கேபி லூயிஸ் அதைவிடவும் 3வயது முன்னதாக சர்வதேச கிரிக்கெட்டிற்குள் நுழைந்துள்ளார்.

சிறிய வயதில் டெஸ்ட் கிரிக்கெட்டிற்குள் நுழைந்த வீரர் என்ற சாதனையையும் பாகிஸ்தான் வைத்திருக்கிறது. அந்த அணியின் ஹசன் ராசா என்பவர் 1996ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிராக முதல் போட்டியில் விளையாடும் போது வயது 14 ஆண்டுகள் 227 நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்த வரிசையில் 21ஆம் நூற்றாண்டில் பிறந்து முதன் முதலாக சர்வதேச கிரிக்கெட்டிற்குள் நுழைந்த வீராங்கனை என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார் கேபி லூயிஸ்.

No comments:

Post a Comment