பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள மக்களுக்கு நீ்திமன்றத்தில் வாதாடுவதற்கு வழக்கறிஞர்களை ஏற்படுத்தி தருதல், அதில் அளிக்கப்படும் சலுகைகள் குறித்து சட்டப்பணிகள் குழுவினர் விளக்குகின்றனர்.
சட்டப்பணிகள் குழு மூலம் மக்களுக்கு என்ன பயன்?
நாடு முழுவதும் அந்தந்த மாவட்டத்தில் உள்ள வட்ட மற்றும் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சட்டப் பணிகள் குழு அமைந்துள்ளது. பொருளாதாரரீதியாக பின்தங்கியுள்ள அனைவருக்கும் சட்டரீதியான அனைத்து உதவிகளையும் வழங்க சட்டப்பணிகள் குழு ஏற்படுத்தப்பட்டது. மேலும், தகவல் அறியும் உரிமைச் சட்டம், கல்வி உரிமைச் சட்டம் குறித்தும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சட்டப் பணிகள் குழு மூலம் முகாம் நடத்தப்படுகிறது.
பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு, தங்களது வழக்கு சம்பந்தமாக நீதிமன்றத்தில் வாதாட வழக்கறிஞர் நியமனம் செய்து தரப்படுகிறதா?
அதில் நிபந்தனைகள் உள்ளன. தாழ்த்தப்பட்டோர் (எஸ்.சி), பழங்குடியினர் (எஸ்.டி.,), முன்னாள் ராணுவத்தினர், பெண்கள், குழந்தைகள் மற்றும் இயற்கை பேரழிவால் பாதிக்கப்பட்டோர் ஆகிய பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு, வழக்கறிஞர் வசதி ஏற்படுத்தி தர வருமான உச்சவரம்பு எதுவும் இல்லை. வழக்கறிஞர் கட்டணம், தட்டச்சு கட்டணம், நீ்திமன்ற கட்டணம் போன்ற அனைத்தும் சட்டப் பணிகள் குழு மூலம் வழங்கப்படும். மேற்குறிப்பிட்ட பிரிவு நீங்கலாக முற்பட்ட வகுப்பினராக இருந்தால், அவர்களுக்கு வருமான உச்சவரம்பு உள்ளது. சிவில், கிரிமினல் என வழக்குகளுக்கு தகுந்தாற்போல் நீதிமன்ற கட்டணம் மாறுபடும்.
சட்டப்பணிகள் குழுவில் எந்த விதமான வழக்குகள் விசாரணை செய்யப்படுகிறது?
சட்டப்பணிகள் குழு மூலம் நடத்தப்படும் மக்கள் நீ்திமன்றத்தில் குடும்ப பிரச்சினை போன்ற சமாதானம் ஆகக்கூடிய வழக்குகள் விசாரணை செய்யப்படுகிறது. விவாகரத்து, கொலை போன்ற வழக்குகள் மக்கள் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்படுவதில்லை. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கின் மீது, மக்கள் நீதிமன்றத்தில் தீர்வு காணப்பட்டால், வழக்கு சம்பந்தப்பட்ட நபர் செலுத்திய நீதிமன்ற கட்டணம் முழுவதும் திரும்ப பெற்றுத்தரப்படும்.
நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட நபர்களுக்கு சட்டப்பணிகள் குழு மூலம் சட்ட உதவி வழங்கப்படுகிறதா?
விசாரணைக் கைதிகள், நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட நபர்கள் பெயிலில் வரவும், மேல்முறையீடு செய்யவும் இயலாதவர்களாக இருப்பர். அவர்களை பெயிலில் எடுக்க உதவுவது, மேல்நீதிமன்றத்தில் முறையீடு செய்வது போன்ற உதவிகள் செய்யப்படுகின்றன. சட்டப் பணிகள் குழுவில் உள்ள பட்டியல் வழக்கறிஞர் மூலம் நேரடியாக வட்ட, மாவட்ட சிறைச்சாலையில் உள்ளவர்களிடம் மனு பெற்று மேற்குறிப்பிட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வட்ட, மாவட்ட மற்றும் உயர், உச்ச நீதிமன்றம் வரை மேல் முறையீடு செய்ய உதவி செய்யப்படுகிறது.
No comments:
Post a Comment