இயற்கைச் சீற்றங்கள் நிகழலாம்; நாம் தயாராக இருப்பது முக்கியம்.
இந்த மாதத் தொடக்கத்தில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மழை பெய்யத் தொடங்கியபோது யாருமே எதிர்பார்க்கவில்லை, இது கேதார்நாத்தைப் புரட்டிப்போட்ட மழைச் சேதத்தை மிஞ்சிவிடும் என்று. இந்திய வானிலை ஆய்வு நிலையம்கூட ‘மிக பலத்த’ மழை பெய்யும் என்றுதான் கூறியதே தவிர, பேரழிவுதரும் பலத்த மழையாக இருக்கும் என்று கணிக்க முடியவில்லை.
கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஒரே நாளில் 200 முதல் 300 மில்லிமீட்டர் வரையில் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மழை பெய்தது. ஜீலம் உட்பட மாநிலத்தின் எல்லா நதிகளும் பொங்கி வழிந்தன. கரையை உடைத்துச் சமவெளிகளிலும் பள்ளத் தாக்கிலும் பாய்ந்தது வெள்ள நீர். மழை, வெள்ளம் ஆகியவற்றுடன் நிலச்சரிவும் சேர்ந்துகொண்டது.
250-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ள நீரால் சூழப்பட்டன. மழை உச்சத்தை அடைந்தபோது வீடுகள், கட்டிடங்களுடன் சாலைகள், பாலங்கள், நடை மேம்பாலங்கள், மின்கம்பங்கள், ரயில் பாதைகள், தங்கும் விடுதிகள் என்று சகலமும் அடித்துச் செல்லப் பட்டன. மின் வசதி, சாலைத் தொடர்பு, தகவல் தொடர்பு ஏதும் இல்லாமல் ஜம்மு காஷ்மீர் துண்டிக்கப்பட்டது. சுற்றுலா வந்தவர்களும் அமர்நாத் யாத்திரை பக்தர் களும் இந்த வெள்ளத்தில் சிக்கிக்கொண்டனர்.
உதவிக்கு வந்த ராணுவம்
இந்த நிலையில்தான் இந்திய ராணுவம் , எல்லைப் பாதுகாப்புப் படை, தேசியப் பேரிடர் மேலாண்மைப் படை ஆகியவை மீட்புப் பணியில் ஈடுபட்டன. ராணு வத்தின் முப்படைகளையும் சேர்ந்த 30,000-க்கும் மேற்பட்டோர் கிட்டத்தட்ட எட்டு நாட்கள் இரவு பகலாக மீட்பு, நிவாரண நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டனர்.
ஜம்மு பகுதியில் மேற்கொண்ட மீட்பு நடவடிக் கைக்கு ‘ஆபரேஷன் ரஹத்’ என்றும் காஷ்மீர் பகுதிக்கு ‘ஆபரேஷன் சஹாயதா’என்றும் ராணுவம் பெயரிட்டிருந்தது. விமானப்படையினர் 2,500-க்கும் மேற்பட்ட முறை சரக்கு விமானங்களிலும் ஹெலி காப்டர்களிலும் பறந்துசென்று மீட்டனர், நிவாரணப் பொருட்களைக் கொண்டுபோய் இறக்கினர். குடிநீர் மட்டும் 5 லட்சம் லிட்டருக்கு மேல் விமானங்கள் வழியாகவே வழங்கப்பட்டன. 1,054 டன் உணவுப் பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டன. கடற்படையும் தரைப்படையும் சேர்ந்து 224 படகுகளையும் தேசியப் பேரிடர் நிவாரணப் படை 48 படகுகளையும் பயன்படுத்தின. சாலை வழியாகப் பொருட்களைக் கொண்டுசெல்ல முடியாது என்பதால், கடற்படையின் கமாண்டோக்கள் வெள்ளம் வடியாத ஆற்றிலேயே வழியமைத்துச் சென்றனர்.
எல்லைப்புற சாலை நிறுவனம் (பி.ஆர்.ஓ.) என்ற ராணுவச் சாலை அமைப்பின் 5,700 பேர் இரவு பகலாக உழைத்து, பதோட்-கிஸ்த்வார், கிஸ்த்வார்-அனந்தநாக், ஜம்மு-பூஞ்ச், ஜம்மு-நகர் சாலை இணைப்பை ஏற்படுத்திவிட்டனர். யு.எஸ்.டி., டி.எஸ்.பி.டி. என்ற வகைகளில் தகவல் தொடர்பை ராணுவத்தின் தகவல் தொடர்புப் பிரிவு ஏற்படுத்திவிட்டது. பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் மூத்த பொறியாளர்களும் தொழில்நுட்பப் பணியாளர்களும் உரிய கருவிகளுடன் போய்ச் சேர்ந்து பணிகளைத் தொடங்கிவிட்டனர்.
ராணுவம் 19 இடங்களில் மிகப் பெரிய நிவாரண முகாம்களை அமைத்தது. ஐந்து இடங்களில் மிகப் பெரிய மருத்துவ முகாம்கள் திறக்கப்பட்டன. மாநிலம் முழுக்க மொத்தம் 130 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன. வெள்ளநீர் வடிந்த பகுதிகளில் மக்கள் இப்போது தங்களுடைய வீடுகளும் கடை களும் எப்படியிருக்கின்றன என்று பார்த்துத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.
ராணுவ வீரர்கள் அதிகாலை 4 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையில் மக்களை மீட்பது, உணவு - குடிநீர் வழங்குவது, முகாம்களுக்குக் கொண்டுசெல்வது, இரவு வீடுகளுக்குத் திரும்ப நினைக்கும் குடும்பத் தலைவர்களைத் தங்களுடைய படகுகளில் பத்திர மாகக் கொண்டுபோய் இறக்குவது, சிகிச்சை தேவைப் படுவோரை மருத்துவ முகாம்களுக்குக் கொண்டு செல்வது என்று ராணுவத்தினர் பணி செய்தனர். நள்ளிரவுக்குப் பிறகு தங்களுடைய படகுகளை, வாகனங்களைப் பழுதுபார்த்துச் சீரமைத்தனர். நிவாரணப் பொருட்களை அடுக்கி, சீர்படுத்தி அடுத்த நாள் விநியோகத்துக்குத் தயார் செய்தனர்.
எதிர்ப்புக் குரல்கள்
இதற்கிடையே பல இடங்களில் மீட்பு மற்றும் நிவாரண உதவிகள் கிடைக்கவில்லை என்றும், உள்ளூர் மக்களைக் காப்பாற்றுவதைவிட சுற்றுலாப் பயணிகளைக் காப்பாற்றுவதில்தான் அதிக அக்கறை காட்டப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன. “1,000 படகுகள், 200 ஹெலிகாப்டர்கள் தேவைப்படும் இடங் களில் 60 படகுகளும் 21 ஹெலிகாப்டர்களும்தான் மீட்புப் பணியில் ஈடுபட்டன” என்று டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்கத் பவுண்டேஷன் என்ற அமைப்பினர் புகார் தெரிவித்தனர். நிவாரணப் பொருட்கள் விநியோகமும், பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் கிடைக்கவில்லை என்ற குரல்களும் எழுந்தன.
கடந்த ஆண்டு ஒடிசாவைப் பெரும் புயல் தாக்கிய போது, அதிக உயிர்ச்சேதம் இல்லாமல் தடுக்க முடிந்தது. அதற்கு முக்கியக் காரணம், உரிய நேரத்தில் வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கைதான். இதையடுத்து, கடற்கரை ஓரங்களிலும் தாழ்வான பகுதிகளிலும் வசித்தவர்களைப் புயல் பாதுகாப்பு மையத்துக்கு அழைத்துச் சென்று தங்கவைத்தது ஒடிசா அரசு. அப்படியொரு முன் எச்சரிக்கை நடவடிக்கை காஷ்மீரில் எடுக்கப்படவில்லை. கடந்த 100 ஆண்டுகளில் இப்படிப்பட்ட பேய் மழை பெய்யவில்லை என்று அதற்குக் காரணம் கூறப்படுகிறது. இருந்தாலும், உத்தராகண்ட் மாநிலத்துக்கு ஏற்பட்ட சேதத்துக்குப் பிறகும், மலைப் பிரதேசங்களை அதிகம் கொண்ட மாநில அரசுகள் விழித்துக்கொள்ளவில்லை என்பது தெளிவு. அதை மத்திய அரசு கவனிக்காததும் பெரிய குறையே. வெள்ளத்தில் தகவல் தொடர்பு கடுமையாகச் சேதமடைந்ததால், அதிகாரிகளையும் அமைச்சர்களையும் தொடர்புகொள்ள முடியாமல் முதல்வர் உமர் அப்துல்லா திணறிவிட்டார்.
கற்க வேண்டிய பாடங்கள்
சமீபத்தில் மகாராஷ்டிர மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரு பெரிய கிராமமே கன மழைக்குத் தாங்காமல் மண்ணில் புதைந்ததற்குக் காரணம், கன மழை பற்றிய எச்சரிக்கையை மாநில அரசு கவனிக் காததே என்று காரணம் கூறப்பட்டது. இன்னும் எத்தனை சேதங்களை அனுபவித்த பிறகு மாநிலங்கள் விழிப்படையும் என்று தெரியவில்லை.
மழை, வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர் காலத்தில் மக்களைப் பாதுகாப்பாகத் தங்கவைக்க பாதுகாப்பு மையங்கள், உணவுக்கூடங்கள், மருத்துவ மனைகள் போன்றவற்றை எல்லா மாநில அரசுகளும் ஒரு சில பகுதிகளிலாவது ஏற்படுத்த வேண்டும் என்பதை இனியாவது கட்டாயமாக்க வேண்டும். ஜெனரேட்டர்கள், செயற்கைக்கோள் உதவியுடன் செயல்படும் தொலைபேசிகள், மழை, பெருங்காற்றுக்கு ஈடுகொடுக்கும் கூடாரங்கள், உணவு தானியங்கள், காய்கறி, டின் பால், குழந்தைகளுக்கான உணவு, போர்வைகள், ஆடைகள், மருந்து மாத்திரைகள் போன்றவற்றைத் தயார் நிலையில் வைத்துக்கொள்ள வலியுறுத்த வேண்டும்.
இல்லாவிட்டால் உயிரிழப்பு, பொருள் சேதம், தேசத்தின் அரிய வளங்களை இழப்பது, மக்களுடைய உழைப்பு, நேரம், சக்தி ஆகியவற்றை மீண்டும் மீண்டும் மீட்பு, நிவாரண நடவடிக்கைகளுக்கே செலவிடுவது என்று வீணாக்க வேண்டியிருக்கும்.
No comments:
Post a Comment