உலகை உலுக்கிய சம்பவங்கள் என்று பட்டியல் இட்டால் அதில் முக்கிய இடத்தைப் பிடிக்கும் சம்பவம் இது. ஒசாமா பின்லேடனின் அல்-காய்தா அமைப்பின் பயங்கரவாதிகள், நியூயார்க் நகரின் உலக வர்த்தக மையத்தின் இரட்டைக் கோபுரங்கள், அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சகக் கட்டிடமான பென்டகன் மீது, விமானங்களை மோதச் செய்து நடத்திக்காட்டிய பிரம்மாண்டமான பேரழிவு இது.
2001-ல் இதே நாளில் காலை 8:45-க்கு உலக வர்த்தக மையக் கட்டிடத்தின் வடக்குக் கோபுரக் கட்டிடத்தின் மீது ’பிளைட்-11’ விமானம் மோதியது. பெரும் சத்தத்துடன் நெருப்புக் குழம்பும் புகையும் கிளம்ப, நியூயார்க் வானத்தின் மேகங்களைக் கரும்புகை அப்பியது. ’எப்பேர்ப்பட்ட கோர விபத்து!’ என்று எல்லோரும் பதறிக்கொண்டிருந்தபோது, சரியாக 18 நிமிடங்களில் தெற்குக் கோபுரக் கட்டிடத்தின் மீது மற்றொரு விமானம் மோதியது. அப்போதுதான் அது பயங்கரவாதத் தாக்குதல் என்பது பலருக்கும் தெரியவந்தது. மொத்தம் 4 விமானங்களை அல்கொய்தா பயங்கரவாதிகள் கடத்தியிருந்ததும் அதன் பின்னர்தான் அமெரிக்க அதிகாரிகளுக்கு உறைத்தது.
மற்றொரு விமானம் காலை 9:45-க்கு பென்டகன் மீது மோதியது. கடத்தப்பட்ட 4-வது விமானம் பென்சில்வேனியா அருகில் ஒரு விவசாய நிலத்தில் விழுந்தது. கடத்தல்காரர்களுடன் பயணிகள் நடத்திய போராட்டத்தின் முடிவில் விமானம் தரையில் விழுந்தது என்று பின்னர் தெரியவந்தது. அனைத்துச் சம்பவங்களிலும் மொத்தம், 2,996 பேர் உயிரிழந்தனர்.
பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்று அறிவித்துவிட்டு ஆப்கன் உள்ளிட்ட நாடுகள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்குக் காரணமாக அந்த விமானத் தாக்குதல்கள் அமைந்தன.
No comments:
Post a Comment