Wednesday, 24 September 2014

ஊர்சுற்றிகள்: கண்டறிந்தவர்களா? கொள்ளையர்களா?

கிரீன்லாந்தில் முதல் குடியேற்றம் நிகழக் காரணமாக இருந்த எரிக் தி ரெட்டும், வட அமெரிக்கக் கண்டத்தில் முதன்முதலில் கால் பதித்த ஐரோப்பியரான அவருடைய மகன் லீஃப் எரிக்சனும் புதிய மண்ணைக் கண்டறிந்ததற்காக நினைவுகூரப்படுபவர்கள்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே எரிக் தி ரெட் மூலம் கிரீன்லாந்து பகுதியில் வைகிங் போர்வீரர்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குடியேற ஆரம்பித்தார்கள். பிறகு அங்கிருந்து மேற்குக் கடல்களில் பயணித்தார்கள். எரிக்கின் பெயரில் ‘ரெட்' என்ற நிறம் ஒட்டிக் கொண்டிருந்ததற்குக் காரணம் அவருடைய தலைமுடியும் தாடியும் சிவப்பு நிறத்தில் இருந்ததால்தான்.
அமெரிக்க நிலம்
எரிக் தி ரெட்டின் மகன் லீஃப் எரிக்சன் (லீஃப் தி லக்கி), தொலைவில் உள்ள ஒரு கடற்கரையைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தார். அப்பாவைப் போலவே புதிய நிலப்பகுதியைக் கண்டறிந்து தனதாக்கிக் கொள்ள அவர் தீர்மானித்தார்.
பஃபின் தீவு, லாப்ரடார் கடற்கரையைத் தாண்டி வட அமெரிக்கக் கண்டத்தில் லீஃப் கால் பதித்தபோது, அந்த மண்ணில் கால் பதித்த முதல் ஐரோப்பியர் என்ற பெருமையை அவர் பெற்றார். லீஃப் அப்படிக் காலடி எடுத்து வைத்தது கொலம்பஸுக்கு 500 ஆண்டுகளுக்கு முன்னர். கனடாவை வின்லாண்ட் என்று அவர் அழைத்தார்.
பலமான பூர்வகுடிகள்
வின்லாண்டில் குளிர்காலத்தைக் கழித்துவிட்டு, வசந்தகாலத்துக்கு அவர் கிரீன்லாந்து திரும்பினார். லீஃபின் பயணத்தைப் பின்பற்றி அவரது சகோதரர் எரிக் தோர்வால்டும் கனடா சென்றார். அந்த நிலத்தின் பூர்வகுடிகளான செவ்விந்தியர்களை அப்போது எதிர்கொண்டார். தோர்வால்டையும், அவருடன் வந்தவர்களையும் செவ்விந்தியர்கள் கற்களாலும் மட்டைகளாலும் தாக்கினர்.
தோர்வால்டுடன் சென்ற வைகிங் வீரர்கள் எதிர்த்துத் துரத்தினாலும், பாய்ந்து வந்த ஓர் அம்பு தோர்வால்டைக் கொன்றது. அதற்குப் பிறகு சில வைகிங் தளபதிகள் வட அமெரிக்காவைக் கைப்பற்ற முயன்றபோது கிரீன்லாந்திலிருந்து அந்தப் பகுதி தொலைவில் இருந்ததாலும், செவ்விந்தியர்களின் எண்ணிக்கை அதிகம் இருந்ததாலும் அந்தப் பகுதியை அவர்களால் அடிமைப்படுத்த முடியவில்லை.
மறுமுகம்
வர்த்தகம் செய்யப் போன வைகிங்குகள் எந்த முன்னெச்சரிக்கையும் கொடுக்காமல் புதிய பகுதிகளை வேகமாகத் தாக்கி, நுழைந்துவிடுவது வழக்கமாக இருந்தது. ஆரம்பத்தில் கிடைத்ததை எடுத்துக் கொண்டு சென்றவர்கள், பிறகு குறிப்பிட்ட பகுதியில் தங்கி காலனிகளையும் ஏற்படுத்திக் கொண்டார்கள்.
அதனால் ஸ்காண்டிநேவியாவைத் தவிர்த்த ஐரோப்பியப் பகுதிகளில் ‘புதிய பகுதிகளைக் கண்டறிந்தவர்கள்' என்பதற்குப் பதிலாக, கொள்ளையர்களாகவே வைகிங்குகள் பார்க்கப்பட்டார்கள்.

No comments:

Post a Comment