டால்ஸ்டாய் பிறந்த தினம் - செப்டம்பர் 9
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் அங்காடிகளின் கடைக்கோடிகளில் உள்ள அலமாரித் தட்டுகளில் சீந்துவாரற்றுக் கிடக்கும் புத்தகங்களின் சில தலைப்புகள் ஈர்க்கும். என்ன ஏது எனத் தெரிந்துகொள்ளாமலேயேகூட அவற்றை வாங்க வேண்டுமெனத் தோன்றும். அப்படித் தோன்றிய புத்தகங்களிலொன்று வெண்ணிற இரவுகள். மற்றொன்று புத்துயிர்ப்பு. ருஷ்ய இலக்கியத்தின் பிதாமகர்களான ஃபியதோர் தாஸ்தயேவ்ஸ்கி, லியோ டால்ஸ்டாய் ஆகியோருடைய பெயர்கள் அறிமுகமானது அவ்விரு புத்தகங்களின் வழியாகத்தான். பிறகு ‘டால்ஸ்டாயின் சிறுகதைகளும் குறுநாவல்களும்’ என்ற தடித்த புத்தகம் கிடைத்தது.
டால்ஸ்டாயின் முக்கியமான குறுநாவல்களான நடனத்திற்குப் பின், குடும்ப மகிழ்ச்சி, இரண்டு ஹுஸ்ஸார்கள், க்ரேஸர் சொனாட்டா, இவான் இலியீச்சின் மரணம் போன்றவை இடம்பெற்றிருந்த அந்தத் தொகுப்பு டால்ஸ்டாய் என்னும் உலகின் மகத்தான இலக்கிய ஆளுமையை உரிய விதத்தில் அறிமுகப்படுத்திய தொகுப்பு என இப்போதும்கூடத் தயக்கமின்றி என்னால் சொல்ல முடியும். ‘க்ரேஸர் சொனாட்டா’வும் ‘இவான் இலியீச்சின் மரணம்’- நூலும் எழுப்பிய அறவியல் கேள்விகள் எனக்கு முக்கியமானவையாகத் தோன்றின.
இன்றைய நுகர்வுக் கலாச்சாரத்திற்கும் சந்தைப் பொருளாதாரம் வலியுறுத்தும் வாழ்க்கை முறைக்கும் அறவியல் கேள்விகள் அர்த்தமற்றவையாக இருக்கலாம். தேவைப்படாதவையாகவும் போகலாம். அப்போது 1980களில்கூட அவை பொருத்தமற்றவையாகவே தென்பட்டன.
எனினும் அந்தக் கேள்விகளைக் கடந்து செல்வது சாத்தியமற்றதாக இருந்தது. வாழ்வதற்கு அவசியமானதெனக் கருதப்பட்ட சமூக முனைப்புகளை டால்ஸ்டாய் எள்ளி நகையாடினார். பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டுகளின் ஜார் கால ருஷ்யா இரண்டு வெவ்வேறு உலகங்களாகப் பிளவுண்டிருந்தது. முதலாவது தாங்க முடியாத வறுமையாலும் அநீதியாலும் அலைக்கழிக்கப்பட்ட ஏழை விவசாயிகளின் பரிதாபத்துக்குரிய உலகம். இரண்டாவது பேராசையால் பீடிக்கப்பட்ட, ஒழுக்கக்கேடுகளால் சீரழிந்துபோன மேட்டுக்குடியினரது உலகம்.
இந்த இரண்டாவது உலகத்தில்தான் டால்ஸ்டாயின் நாவல்களில் முக்கியப் பாத்திரங்களாக இடம்பெற்ற princeகளும் countகளும் generalகளும் இருந்தார்கள். ராணுவ அதிகாரிகளாகவும் துறைச் செயலாளர்களாகவும் வழக்கறிஞர்களாகவும் நீதிபதிகளாகவும் நிலச்சுவான்தார்களாகவும் இவர்கள்தாம் ஜார் பேரரசின் அசைக்க முடியாத தூண்கள். செம்ஸ்த்தவேக்கள் என அழைக்கப்பட்ட உள்ளூர் பஞ்சாயத்து அமைப்புக்களின் உறுப்பினர்கள். இருந்த இவர்களுக்கென எஸ்டேட்டுகள் இருந்தன. குதிரைகள் இருந்தன. பிரம்மாண்ட மாளிகைகள் இருந்தன, கேளிக்கை மையங்கள் இருந்தன.
நாடக அரங்குகள், குதிரைப் பந்தய மைதானங்கள், பனிச்சறுக்கு விளையாட்டுக் கூடங்கள், சூதாட்ட மையங்கள், விபச்சார விடுதிகள் என எல்லாம் இருந்தன. அவர்களது வரவேற்பறைகளில் பியானோக்கள் இருந்தன. சிவப்பு, வெள்ளை ஒயின்களும் இறால்களும் குவிக்கப்பட்டிருந்த உணவு மேசைகளும் மேதகையீர் என அழைப்பதற்கு எண்ணற்ற வேலைக்காரர்களும் இருந்தனர். பாதிரிமார்களும் துறவிகளும் அவர்களுக்காகப் பிரார்த்தித்தார்கள். அப்பங்களும் திராட்சை ரசங்களும் வழங்கினார்கள்.
அவர்களுடைய குழந்தை களுக்குப் பெயர் சூட்டினார்கள். இறப்பதற்கு முன்னால் அவர்கள் முத்தமிடுவதற்குச் சிலுவைகளை உயர்த்திப் பிடித்தார்கள். டால்ஸ்டாய் இந்த மேட்டுக் குடியில் பிறந்தவர்தான். அதனால்தான் அவரால் அவர்களது வாழ்வை ஆராய முடிந்தது. அதன் ரகசியமான பகுதிகளில் மலிந்து கிடந்த ஒழுக்கக்கேடுகளை அறிந்துகொள்ள முடிந்தது.
டால்ஸ்டாய் எழுப்பிய கேள்விகள்
அவர் தன் படைப்புகளின் வழியே எழுப்பிய அறவியல் கேள்விகள், அறவியல் பற்றிய மதிப்பீடுகள் முற்றாக மாறியிருக்கும் இன்றைய உலகிலும் பிடிவாதமாக இருந்துகொண்டிருப்பதற்குக் காரணம் அவை உண்மையின் அடித்தளத்திலிருந்து எழுப்பப்பட்டவை என்பதுதான்.
டால்ஸ்டாயைப் போல தன் சொந்த வாழ்க்கையின் அறத்தைக் கேள்விக்குட்படுத்திக்கொண்ட, அதை மாற்றுவதற்கு ஓயாமல் முயன்ற ஒரு படைப்பாளி அவருக்கு முன்பும் பின்பும் இல்லை. க்ரேஸர் சொனாட்டா என்னும் அவரது குறுநாவலில் இடம்பெற்ற பல சம்பவங்கள் டால்ஸ்டாயின் சொந்த வாழ்க்கையோடு நெருக்கமான தொடர்புடையவை எனப் பல விமர்சகர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
அன்னா கரீனினாவுக்கு முன்பு நெப்போலியனின் படையெடுப்புக் கால ருஷ்யாவை வரலாற்றுப் பின்னணியாகக் கொண்டு அவர் எழுதிய ‘போரும் வாழ்வும்’ பெரும் வெற்றி பெற்ற படைப்பு. மேற்குலகு அந்த நாவலைக் கொண்டாடியது. உடனடியாகப் பல ஐரோப்பிய மொழிகளில் வெளியிடப்பட்ட அந்த நாவல் அவரை உலகின் தன்னிகரற்ற ஒரு படைப்பாளியாக முன்னிறுத்தியது. அந்த வெற்றியைக் கண்டு டால்ஸ்டாயேகூடப் பிரமித்துப்போனார்.
சமகால ருஷ்ய வாழ்க்கை நெருக்கடிகள்
அதற்குப் பிறகு ருஷ்யாவின் தன்னிகரற்ற மாமன்னன் என வரலாற்றாசிரியர்களால் புகழப்பட்ட மகா பீட்டர் பற்றிய ஒரு வரலாற்று நாவலை எழுதுவதே அவரது அடுத்த திட்டமாக இருந்தது. ஆனால் சமகால ருஷ்யச் சமூக வாழ்வின் நெருக்கடிகள் அவரைத் தீவிரமாகப் பாதித்தன. அதன் பழைய ஒழுக்க மதிப்பீடுகள் வேகமாகச் சரிந்துகொண்டிருந்தன. புதிய ஒன்று உருவாகவுமில்லை. ஆண்-பெண் உறவு சிக்கலானதாக மாறிக்கொண்டிருந்தது. குடும்ப அமைப்பு தன்னைக் காப்பாற்றிக்கொள்வதற்குப் பெரும் சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அவற்றைக் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்த டால்ஸ்டாய் மகா பீட்டர் பற்றிய வரலாற்று நாவலைக் கைவிட்டுவிட்டு ‘அன்னா கரீனினா’வை எழுதத் தொடங்கினார்.
‘அன்ன கரீனினா’ எழுதப்பட்ட விதத்தில் தொழிற்பட்ட தீவிரமான கலைப்பண்பு அந்த நாவலைக் குடும்ப நாவலாக, ஆண்-பெண் உறவின் நெருக்கடிகளைப் பற்றி விவாதிக்கும் கதையாடல் என்னும் நிலையிலிருந்து மேலெடுத்துச் சென்றது. வாழ்வின் முழுமை பற்றிய தேடலுக்கு விழைந்த மனிதர்கள் சந்திக்கும் துயரக் காவியம் என்னும் ஒப்பற்ற உயரத்தை அது உருவாக்கியது. பல விமர்சகர்கள் அந்த நாவலில் வரும் கன்ஸ்த்தந்தீன் லெவின் என்ற முக்கியப் பாத்திரத்தை டால்ஸ்டாயோடு ஒப்பிட்டிருக்கிறார்கள்.
‘புத்துயிர்ப்பு’ நாவலின் பிரதானப் பாத்திரமான நெஹ்லூதவ் செய்ததைப் போல டால்ஸ்டாயும் தனது நிலங்களை விவசாயிகளுக்கு அளிக்க முன்வந்தார். அவர்களைப் போல வயல்களில் உழைக்கவும் எளிமையாக வாழவும் அவர் மேற்கொண்ட முயற்சிகள் மனைவி சோபியாவுக்கும் அவருக்குமிடையே ஆழமான முரண்பாடுகளை ஏற்படுத்தியபோது அவர் ஐம்பதுக்கும் மேற்பட்ட அறைகளைக் கொண்டிருந்த தனது மாளிகையைத் துறந்து ஆசியாவின் மிகப் பெரிய ஆப்பிள் தோட்டத்தைக் கொண்டிருந்த எஸ்டேட்டிலிருந்து வெளியேறினார்.
ரயில் நிலையத்தில் மரணம்
அநீதியான வாழ்விலிருந்து தப்புவதற்காக துலா குபேர்னியாவின் இருப்புப் பாதைகளில் மோசமான இரண்டாம் வகுப்பு ரயில் பெட்டிகளில் ஒரு வாரம்வரை மேற்கொண்ட மோசமான பயணத்தின் முடிவில் அஸ்டபோவா என்னும் ருஷ்யாவின் பெயர் தெரியாத ஒரு மிகச் சிறிய ரயில்வே ஸ்டேஷனில் மரணத்தைத் தழுவினார். டால்ஸ்டாயின் அந்தப் பயணம் கல்வாரி மலையை நோக்கி இயேசு சிலுவையுடன் மேற்கொண்ட பயணத்துக்கு நிகரானது என்று சொல்லலாம். அது ஒரு முடிவற்ற பயணமும்கூட. அதற்கு முப்பத்தெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, தன்னை நோக்கி நீண்ட துப்பாக்கிக்கு முன் தனது நெஞ்சை உயர்த்தி நிற்கும் வலிமையை மகாத்மா காந்திக்குத் தந்ததுகூட அந்தப் பயணம்தான்.
- தேவிபாரதி,
No comments:
Post a Comment