குடிமைப் பணிகளுக்கான முதனிலைத் தேர்வு முடிந்துவிட்டது.குடிமைப் பணிகளுக்கான முதனிலைத் தேர்வு மே மாத இறுதியில் நடப்பதே கடந்த ஆண்டுவரை வழக்கமாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டில் ஆகஸ்ட் மாத இறுதியிலேயே நடந்தது. தேர்வை ஒத்திவைக்கச் சொல்லி தேர்வுக்கு முதல்நாள் வரைக்கும் மாணவர்கள் உச்சநீதிமன்றத்தின் கதவைத் தட்டி காத்து நின்றார்கள்.
ஆங்கில மொழியில் இடம்பெறும் பத்திகளைப் படித்து பொருள் உணர்ந்துகொள்ளும் வகையில் அமைந்த ஆறு கேள்விகளுக்குப் பதிலளிக்கத் தேவையில்லை என்று சொல்லி யு.பி.எஸ்.சி ஒதுங்கிக் கொண்டுவிட்டது. இந்தி மட்டுமே அறிந்த மாணவர்களுக்கு இந்த அறிவிப்பால் மகிழ்ச்சி. ஆனால் இந்தி அறியாத மற்ற மொழிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இது வருத்தமான செய்தியாகவே முடிந்தது. எப்படியோ ஒருவழியாய் முதனிலைத் தேர்வு முடிந்துவிட்டது.
என்னவாகுமோ?
மாதக்கணக்கில் தேர்வுக்காக உழைத்திருப்பார்கள். தேர்வு எழுதி முடித்ததும் முடிவு என்ன ஆகுமோ என்று பதற்றம் கொள்வது இயல்பு.
முன்பெல்லாம் சரியான பதில்களை அறிந்துகொள்வதற்கு மாத இதழ்களை மட்டுமே சார்ந்திருக்க வேண்டிய நிலை இருந்தது. ஆனால் இப்போது தேர்வு எழுதிய தினத்திலேயே பயிற்சி மையங்கள் தங்களது இணைய தளங்களில் சரியான விடைகளைத் தேர்ந்தெடுத்து வெளியிட்டுவிடுகின்றன.
ஒவ்வொரு பயிற்சி நிறுவனமும் வெளியிடும் பதில்களில் சில மாறுபாடுகள் இருக்கலாம். எனவே ஒரு பயிற்சி மையம் வெளியிடும் பதில்களை மற்றவற்றுடன் ஒப்பிட்டும் பார்த்துக்கொள்ள வேண்டும். இந்த விஷயத்தில் டி.என்.பி.எஸ்.சி. முன்னத்தி ஏராகவே இருக்கிறது. தேர்வு முடிந்த அடுத்த சில நாட்களில் தேர்வாணையமே சரியான பதில்கள் என்னென்ன என்ற பட்டியலை வெளியிட்டுவிடுகிறது. யு.பி.எஸ்.சி.யும் இந்த முறையைப் எப்போது பின்பற்றும் என தெரியவில்லை.
கட்-ஆப் மதிப்பெண்
நடந்து முடிந்த முதனிலைத் தேர்வில் ஆறு கேள்விகளுக்கான மதிப்பெண்கள் கணக்கில் வராது என்பதால் கடந்த ஆண்டைவிட கட்-ஆப் மதிப்பெண் கொஞ்சம் குறைவாக இருக்கும் என்பதாக ஒரு கணிப்பு நிலவுகிறது.
கடந்த ஆண்டுகளின் கட்- ஆப் மதிப்பெண்களோடு ஒப்பிட்டுப் பார்த்து சராசரி மதிப்பெண்ணைவிட கூடுதலாக இருப்பவர்கள் இந்நேரம் உற்சாகமாக முதன்மைத் தேர்வுக்கான தயாரிப்பில் இறங்கியிருப்பார்கள். நிச்சயம் வாய்ப்பில்லை என்று உணர்ந்தோரும் சற்றே மனம் வருந்தி இயல்பு நிலைக்குத் திரும்பியிருப்பார்கள்.
ஆனால் கடந்த ஆண்டின் சராசரி கட்- ஆப் மதிப்பெண்களோடு ஒப்பிட்டு ஏறக்குறைய அதையொட்டி நிற்பவர்கள் குழப்பத்திலேயே இருப்பார்கள்.
வாய்ப்புகள்
அவர்கள் முன்னால் இரண்டு வாய்ப்பிருக்கிறது. ஒன்று தேர்ச்சி அடைவதற்கான வாய்ப்பு. அதன்படி தேர்வு முடிவுக்காக அவர்கள் காத்திருந்து தேர்வாகியும்விட்டால் அப்போது அவசரம் அவசரமாக முதன்மைத் தேர்வுக்கு தயாராக வேண்டியிருக்கும்.
அவர்களோடு போட்டியில் பங்குபெறும் மற்ற மாணவ்ர்கள் ஏற்கெனவே தேர்வுக்குத் தயாராகிவிட்டார்கள். ஒருவேளை தேர்வு பெறாமல் போவதற்கும் ஒரு வாய்ப்பு இருக்கிறது. அவ்வாறு தேர்வு பெறாவிட்டாலும் முதன்மைத் தேர்வுக்கான தயாரிப்பு வீணாகிவிடாது. அடுத்த முறை முதன்மைத் தேர்வுக்கு தயாராகும்போது எதிர்கொள்ள வேண்டியிருக்கும் பாடச்சுமையை முன்கூட்டியே கொஞ்சம் குறைத்துக்கொள்ளலாம்.
முதன்மைத் தேர்வுகளில் விருப்பப்பாடங்களின் ஆதிக்கம் குறைந்துவிட்டது. எனவே வழக்கம்போல வரலாறு, புவியியல், அரசியலமைப்பு, பொருளாதாரம், சுற்றுச்சூழல் முதலிய துறைகளைத் தொடர்ந்து படிக்கலாம். ஒருவேளை இந்த ஆண்டு முதன்மைத் தேர்வுக்குப் பயன்படாவிட்டாலும் அடுத்த ஆண்டு முதனிலைத் தேர்வுக்கும் முதன்மைத் தேர்வுக்கும் நிச்சயம் பயன்படும்.
குடிமைப்பணிகளுக்கு மட்டும் அல்ல. முதனிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரண்டு நிலைகளில் நடக்கும் அனைத்துத் தேர்வுகளுக்குமே இந்தத் திட்டமிடுதல் பயனளிக்கும்.
No comments:
Post a Comment