Monday, 15 September 2014

இந்திய தேசிய வரலாற்றின் ஆசிரியர்

விபின் சந்திரா - 1928 - 2014
கடந்த இருபதாண்டுகளில் குடியுரிமைப் பணிக்குத் தேர்வான ஒவ்வொரு அதிகாரியும் நிச்சயம் விபின் சந்திராவின் பெயரை அறியாமல் இருக்கவே முடியாது.
அவர் தொகுப்பாசிரியராக இருந்து வெளியிட்ட இந்திய விடுதலைப் போராட்டம் என்ற புத்தகமே இன்றளவும் போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு தவிர்க்க முடியாத பாடநூலாக இருந்துவருகிறது.
லட்சிய கனவின் வரலாறு
இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தைப் பற்றி நூற்றுக்கணக்கில் பாடநூல்கள் வெளிவந்திருக்கின்றன. ஆனாலும் விபின் சந்திரா தனது மாணவர்களுடனும் உடன் பணியாற்றியவர்களுடனும் இணைந்து எழுதி வெளியிட்ட ‘இந்திய விடுதலைப் போராட்டம்’ என்ற புத்தகம் தனித்தன்மையோடு விளங்குகிறது.
அதற்குக் காரணம் நிகழ்வுகளை மட்டும் பட்டியலிடாமல் அவற்றுக்குப் பின்னாலிருந்த சமூகப் பொருளாதாரக் காரணங்களையும் விபின் சந்திரா கவனப்படுத்தினார் என்பதே.
1857-ல் நடந்த சிப்பாய் கிளர்ச்சி தொடங்கி இந்திய விடுதலை வரையிலான காலகட்டத்தைப் பற்றிய இந்த நூலில் பழங்குடிகள், விவசாயிகள், தொழிலாளர்கள், புரட்சிகர தீவிரவாதிகள், இடதுசாரிகள் ஆகியோரின் போராட்டங்களுக்கும் உரிய முக்கியத்துவத்தைக் கொடுத்திருந்தார்.
இரண்டு உலகப் போர்களும் இந்திய விடுதலைப் போராட்டத்தில் உருவாக்கிய விளைவுகளையும் அவர் நுணுக்கமாக விவரித்திருந்தார்.
இந்திய விடுதலைப் போராட்டத்தைப் பற்றிய நூலாக இருந்தபோதும் இந்திய தேசியம் உருவாகி வந்ததன் வரலாற்றைச் சொல்வதும் அதன்பின்னாலிருந்த லட்சியவாத கனவொன்றுக்கு உயிர்கொடுப்பதுமே அவரின் நோக்கமாக இருந்தது.
என்.சி.இ.ஆர்.டி நிறுவனத் திற்காக விபின் சந்திரா எழுதிய நவீனகால இந்தியா என்ற பாடநூலும் போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு மிகப்பெரும் உதவியாக இருந்துவருகிறது. ரொமிலா தாப்பர் எழுதிய பண்டைக்கால இந்தியா, சதீஷ் சந்திரா எழுதிய மத்தியகால இந்தியா ஆகிய பாடநூல்களின் உருவாக்கத்திற்கும் விபின் சந்திரா முக்கிய காரணமாக இருந்திருக்கிறார்.
பாடநூல்கள் எழுதுவது வரலாற்று ஆசிரியர்களின் தேசியக் கடமை என்று அறிவுறுத்தியதின் பேரிலேயே ரொமிலா தாப்பரும் சதீஷ் சந்திராவும் அவ்வாறு பாடநூல்களை எழுத முனைந்தார்கள். பி.ஜே.பி. தலைமையிலான அரசு 1999ல் இந்த புத்தகங்களை பாடத்திட்டத்திலிருந்து நீக்கிவிட்டாலும்கூட மாணவர்களுக்கு அவற்றின்மீது இருக்கும் மதிப்பு இன்றும் தொடரவே செய்கிறது.
அவர் எழுதிய பாடநூல்கள் லட்சக்கணக்கில் விற்பனை ஆகின்றன. ஆனால் காலனியம், வகுப்புவாதம், தேசிய பொருளாதாரம் பற்றி அவர் எழுதிய புத்தகங்கள் வரலாற்று மாணவர்களும் வரலாற்றின்மீது ஆர்வம் கொண்டவர்களும் மட்டுமே வாசிக்கும் புத்தகங்களாகவே இருந்து வருகின்றன.
நவீன இந்தியாவின் உருவாக்கம்- மார்க்ஸில் தொடங்கி காந்திவரை, இந்திய இடதுசாரிகள்- விமர்சன மதிப்பீடு ஆகியவையும் விபின் சந்திராவின் மிக முக்கியமான நூல்களாகும்.
இணைப்புப் புள்ளி
மார்க்ஸியப் பொருளாதாரக் கண்ணோட்டத்தில் இந்தியாவின் நவீன கால வரலாற்றை எழுதிய விபின் சந்திரா தொடக்கத்தில் காந்தியின்மீது கோபம் கொண்டவராக இருந்திருக்கிறார். ஆனால் கடைசியில் காந்தியின் கனவின்மீது அவருக்கு நம்பிக்கை வந்தது. அது சாத்தியம் என்றும் நம்பினார்.
இந்திய தேசியப் பொருளாதாரம் அதை நோக்கியதாக அமைய வேண்டும் என விரும்பினார். காந்தியைப் பற்றி விமர்சித்தவர்களும் அதை மறுபரிசீலனை செய்ய விபின் சந்திரா ஒரு முக்கியமான காரணமாக இருந்திருக்கிறார். காந்தியம், மார்க்ஸியம் இரண்டுக்கும் இணைப்புப் புள்ளியாக இருந்தாலும் அவர் வலதுசாரிகளால் வெறுக்கப்படுகிறார்.
பத்மபூஷண் விருது
புது டெல்லி ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தை நவீன இந்திய வரலாற்று ஆய்வு மையமாக மாற்றியதில் விபின் சந்திராவுக்கு முக்கியப் பங்குண்டு. தன்னுடைய மாணவ்ர்கள் பேராசிரியர் என்று அழைப்பதைக் காட்டிலும் பெயர் சொல்லி அழைப்பதையே அவர் விரும்பிய தாகத் தெரிகிறது.
நேஷனல் புக் டிரஸ்ட் தலைவராகவும் பல்கலைக்கழக மானியக் குழுவில் உறுப்பினராகவும் அவர் பணியாற்றியிருக்கிறார். என்கொயரி என்ற பத்திரிகையைத் தொடங்கி சில காலம் அதன் ஆசிரியர் குழுவிலும் இருந்துள்ளார். வரலாற்றுத் துறைக்கு ஆற்றிய பணிகளைப் பாராட்டி அவருக்கு பத்மபூஷண் விருது வழங்கப்பட்டிருக்கிறது.
உடல்நலம் மோசமாக இருந்த சூழலிலும் அதைப் பொருட்படுத்தாமல் பகத்சிங்கைப் பற்றிய புத்தகம் ஒன்றையும் தனது சுயசரிதையையும் எழுதி வந்தார் விபின் சந்திரா.
கடந்த ஆகஸ்ட் 30-ந்தேதி தனது 86-வது வயதில் இயற்கை எய்தினார்.

No comments:

Post a Comment