Tuesday, 30 September 2014

மவுரிய தேசத்தின் கிரேக்க வி.ஐ.பி.

உலகில் பல ஊர்சுற்றிகள் இருந்தாலும், அரசு ஆதரவுடன் நாடுகளுக்குத் தூதர்களாகச் செல்வதிலும், யாத்ரீகம் சென்று புதிய நிலப்பகுதிகளை அறிந்துகொள்ளும் ஆவலும் அந்தக் காலத்தில் பலருக்கும் இருந்தது.
விமானம், ரயில், மோட்டார் வாகனம் போன்றவை இல்லாத அந்தக் காலத்தில், கால்நடையாகவோ, அதைவிட கொஞ்சம் கூடுதலாகக் குதிரையிலோ, அதிகபட்சமாகக் கப்பலிலோதான் அவர்கள் செல்ல வேண்டி இருந்தது. ஆனாலும் அவர்கள் உலகம் சுற்றினார்கள்.
இண்டிகா
அந்த வகையில் இந்தியாவுக்கு நெடுங் காலத்துக்கு முன்னர் வருகை தந்த முக்கிய யாத்ரீகர் கிரேக்கத்தைச் சேர்ந்த மெகஸ்தனிஸ். இந்தியாவில் பல ஆண்டுகளுக்கு அவர் வாழ்ந்தார். இந்தியாவையும் இந்திய மக்களையும் பற்றி 'இண்டிகா' என்ற பெயரில் அவர் எழுதிய நூல் புகழ்பெற்றது. பாருங்கள், 2000 ஆண்டுகளுக்கு முன்னதாகவே நம் நாட்டுக்கு அவர் பெயர் வைத்திருக்கிறார்.
பிற்காலத்தில் நூல் எழுதியவர்கள் அவருடைய நூலில் இருந்து பல மேற்கோள்களைக் காட்டி யுள்ளனர். துரதிருஷ்டவசமாக இண்டிகா நமக்குக் கிடைக்கவில்லை. மேற்கோள் காட்டப்பட்ட பகுதிகளே கிடைக்கின்றன. அவற்றைக் கொண்டு அந்தக் கால இந்தியாவின் காட்சியைக் கொஞ்சம் மனக் கண் முன்னால் கொண்டு வருவோம்.
வந்ததன் காரணம்
2,400 ஆண்டுகளுக்கு முன்னர் அலெக்சாண்டரின் படைத் தளபதி செல்யூகஸ் நிகாடர், பண்டைய இந்தியாவை ஒட்டி அலெக்சாண்டரின் அதிகாரத்தின் கீழ் முன்பு இருந்த பகுதிகளை மீண்டும் கைப்பற்ற முயற்சித்தார். அந்தப் பகுதிகளைச் சந்திரகுப்த மவுரியர் வென்றிருந்தார்.
இதற்காகக் கி.மு. 305-ல் நடந்த போரில் செல்யூகஸை சந்திரகுப்தர் தோற்கடித்தார். தொடர்ந்து போரைத் தவிர்க்கும் வகையில் இரு அரசுகளுக்கும் இடையே திருமண உறவு ஏற்படுத்தப்பட்டது. அப்போது சந்திரகுப்தரின் அரசவைக்குத் தனது தூதராக மெகஸ்தனிஸை, செல்யூகஸ் அனுப்பினார்.
பண்டைய நகரம்
இன்றைய பிஹார் தலைநகர் பாட்னாவுக்கு அருகேயிருந்த பாடலிபுத்திரத்தில் மவுரிய அரசவையில் மெகஸ்தனிஸ் இருந்தார். பாடலிபுத்திரம் என்ற இந்தப் பண்டைக்கால நகரைக் கட்டியவர் மகத அரசர் அஜாதசத்ரு. கி.மு. 490-ல் கங்கை நதிக் கரையில் கட்டப்பட்ட கோட்டையை மையமாகக் கொண்டு அந்த நகரம் உருவானது.
இதை ஆராய நடத்தப்பட்ட தொல்பொருள் அகழாய்வுகள், அந்த நகரம் இருந்ததை உறுதிப்படுத்துகின்றன. மெகஸ்தனிஸ் நாடெங்கும் சுற்றுப்பயணமும் செய்தார். அந்தக் கால இந்தியாவைப் பற்றி அவரது விவரிப்பு, சற்றே மிகைப்படுத்தலாக இருந்தாலும் அவை உண்மையை அடியொற்றியே உருவாகியிருந்தன.
நீரும் நிலமும்
கங்கை, சிந்து என்ற இந்தியாவின் இரண்டு மிகப் பெரிய ஆறுகளை அவர் கண்டார். அந்த ஆறுகளிலும், அவற்றின் கிளை ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுக்கும் மழைக் காலத்தைத் தவிர்த்து, மற்றக் காலத்தில் நீர்வழிப் போக்குவரத்து நடைபெற்றது. வேறு போக்குவரத்து வசதிகள் இல்லாத அந்தக் காலத்தில், நீர்வழிப் போக்குவரத்து பரவலாகப் பயன்பட்டதில் ஆச்சரியமில்லை.
அதேபோலச் சாலைகளும் போக்குவரத்துக்குப் பயன்பட்டுள்ளன. அவற்றில் வடமேற்கிலிருந்து பாடலிபுத்திரத்துக்கு உள்ளே செல்லும் சாலை மிகவும் பிரபலமாக இருந்தது.
அந்தச் சாலை மிகவும் திட்டமிடப்பட்டு, சாலையின் இரு பக்கங்களிலும் நிழல் தரும் மரங்கள், வழிகாட்டிக் கம்பங்கள், பயணிகள் ஓய்வெடுக்கச் சத்திரங்கள், தண்ணீர் தருவதற்கான கிணறுகள் போன்றவை இருந்தனவாம். இன்றைய நெடுஞ்சாலைகளுக்கான சிறந்த முன்மாதிரியாக அந்தச் சாலை விளங்கியுள்ளது.

No comments:

Post a Comment