மொராக்கோவைச் சேர்ந்த இபின் பதூதா (1304 -1377) இஸ்லாமிய உலகமெல்லாம் சுற்றி வந்த மாபெரும் பயணி. 30 ஆண்டுக் காலம் பயணியாய், இரு கண்டங்கள், 44 நாடுகளில் பனி உறைந்த மலைகள், சுட்டெரிக்கும் சகாரா மணல், நைல் நதியின் வெள்ளம், கொந்தளிக்கும் கடல் என்று கடந்து வந்தவர். யுவான் சுவாங் போல மூன்று மடங்கு பயணித்தவர்.
“மாபெரும் பறவையின் சிறகின் மீது இருப்பதாகக் கனவு கண்டேன்; அது என்னுடன் மெக்காவின் திசைவழியில் பறந்து பின்னர் ஏமனை நோக்கிச் சென்றது... இறுதியில் கிழக்கினை நோக்கி நீண்டு பயணித்து, பசுமையும் இருளும் கொண்ட நாடொன்றில் இறங்கி என்னை அங்கே விட்டுச்சென்றது” என்று பதூதா தன் குறிப்புகளில் எழுதுகிறார். நைல் நதியின் டெல்டா பகுதிக் கிராமம் ஒன்றில் இருந்தபோது அவரது பதிவு இது.
அவரது பயணம் பிரம்மாண்டமான பறவையுடன் சென்ற பயணமாகவும், பிரம்மாண்டமான பறவையின் பயணமாகவும் இருக்கிறது. “ஒரு பறவை தன் கூட்டிலிருந்து சிறகடித்துச் செல்வதுபோல், புனிதத் தலங்களைத் தரிசிக்கும் வேட்கையுடனும் உறுதியுடனும், உற்றார் உறவினிடமிருந்து பிரிந்து புறப்பட்டேன்.” இப்புறப்பாடு அவரது 21 வது வயதில்.
பயணம் தொடங்கியது
ஷேக்அபு அப்துல்லா முகம்மது இபின் அப்துல்லா இபின் முகம்மது இபின் இப்ரஹிம் அல்-லாவதி என்னும் முழுப் பெயருடைய இபின் பதூதா மொராக்கோவின் டாஞ்சியர்ஸ் நகரிலிருந்து மெக்காவிற்குப் புனிதப் பயணம் மேற்கொள்ளத் தொடங்குகிறார். வழக்கறிஞர் குடும்ப மரபில் வந்தவராதலால், மெக்காவில் சட்டத் துறை அறிவை மேம்படுத்திக்கொள்ளும் ஆசையைக் கொண்டிருந்தார்.
டுனிஷ், அலெக்ஸாண்டியா, கெய்ரோ, பெத்லகேம், ஜெருசலேம், டமாஸ்கஸ், பாரசீகம், பாக்தாத், ஏமன், ஓமன், ரஷ்யா, ஆப்கானிஸ்தானம், இந்தியா என்று அவரது வழித்தடம் விரிந்துகொண்டே போகிறது. இதற்கிடையே மூன்று முறை ஹஜ் பயணம் மேற்கொள்கிறார். இரண்டாண்டுகள் மெக்காவில் தங்கிச் சட்டம் படிக்கிறார்.
30 ஆண்டுகள் பயணிக்க ஒருவருக்கு எவ்வளவு வசதி வாய்ப்புகள் இருக்க வேண்டும்! ஆனால் பதூதாவைப் பொறுத்தவரை அப்படி இல்லை. சாதாரண குடும்பத்தவரான பதூதாவுக்கு, ஓர் அறிஞர் என்ற வகையில் அவர் செல்லும் நாடுகளின் மன்னரெல்லாம் உதவுகின்றனர். ஒரு மன்னர் குதிரையும் இரு தங்க நாணயங்களும் அளித்தால் இன்னொருவர் பட்டாடை அணிவித்துப் பல்லக்கில் அழைத்துச் செல்கிறார். அரண்மனையில் தங்கி எவ்வளவு நாட்களையும் கழித்துவிடலாம்.
இந்தியாவில் முகமது பின் துக்ளக் ஆட்சிக் காலத்தில் வந்த அவர், ஏழாண்டுகள் நீதிபதியாக இருந்திருக்கிறார். மாலத்தீவுகளில் 18 மாதங்கள் நீதிபதியாகப் பணியாற்றியிருக்கிறார். துக்ளக்கின் தூதுவராகப் பெரும் பரிவாரம், பரிசுப் பொருட்களுடன் சீனம் சென்று வந்திருக்கிறார்.
இந்தியா வருகை
இந்துகுஷ் மலைகள் பனி மூடியிருக்க, பனி உருகுவதற்காக 40 நாட்கள் காத்திருந்து, பின் இந்தியா வந்து சேரும் பதூதா, துக்ளக்கை அவமதித்த ஒரு சூபி ஞானியைப் பார்த்து வரவே, துக்ளக்கின் கோபத்திற்குள்ளானார். ஐந்து நாள் சிறைவைக்கப்படுகிறார். குரான் ஓதியவாறு உண்ணாநோன்பிருக்க, மன்னரால் விடுவிக்கப்பட்டார். சூபி ஞானியோ தூக்கிலிடப்படுகிறார்.
லடாகியா என்னும் பகுதியில் தூக்குத் தண்டனை நிறைவேற்றுவதில் ஒரு புதிரான நடைமுறை இருப்பதை பதூதா ஓரிடத்தில் குறிப்பிடுகிறார். தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவனுக்குத் தண்டனையைத் தெரிவிக்க வரும் பணியாளர் முதலில் தகவலைத் தெரிவிக்காது மன்னரிடம் திரும்பிப் போவாராம். இப்படி மூன்று முறை அவர் சென்று வந்த பின்பே, தண்டனை நிறைவேற்றப்படுமாம்.
ரஷ்யாவில் ஆடுமாடு திருடிவிடும் ஒருவன், மேலும் ஒன்பது கால்நடைகளுடன் திருப்பி ஒப்படைக்க வேண்டும். அவனால் அப்படிச் செய்ய முடியாது போகும்பட்சத்தில், அவன் வாரிசுகள் அடிமைகளாகிவிடுவார்கள். அவனுக்கு வாரிசுகளும் இல்லையென்றால், ஆடென அறுக்கப்பட்டுவான்.
இவ்விரு தண்டனைகளும் கடுமையானவை என்ற போதிலும் நடைமுறைப்படுத்துவதில் கருணை காட்டப்படுவதற்கான தோற்றம் இருக்கும். சீனாவைப் பார்த்துவிட்டு அவர் பதிவுசெய்திருப்பதில் நல்லதும் கெட்டதுமான அம்சங்களாகச் சேர்ந்திருப்பதும் சுவையானது. சீனர்கள் இந்துக்களைப்போலச் சிலைகளை வணங்கி, இறந்தவரை எரியூட்டுவதாக அவர் குறிப்பிடுகிறார்.
21 வயதிலேயே சொந்த ஊரை விட்டுக் கிளம்பி 30 ஆண்டுகளைப் பயணத்திலேயே கழிக்கும் பதூதாவின் குடும்ப வாழ்வு எப்படி இருந்தது? பயணத் தொடக்கத்தில் டுனிஷ் நகரில் மணந்துகொள்ளும் அவர் அங்கங்கே அடுத்தடுத்து மணம்புரிவதும் விவாகரத்து செய்வதுமாக இருக்கிறார் அரண்மனையில் தங்கும்போது காமக் கிழத்தியர் துணை உண்டு. மாலத்தீவில் மட்டும் ஆறு முறை மணம் செய்துள்ளார்.
ஆபத்து நிறைந்த தன் பயணத்தின் வழியிலேயே மரணம் வாய்த்துவிடக்கூடும் என்பதை உணாந்திருக்கிறார். “கடவுள் என் சாவுக்குக் கட்டளையிட்டுவிட்டால், என் முகம் மெக்காவை நோக்கிய பாதையில் இருக்க வேண்டும்” என்று மட்டும் விரும்பியிருக்கிறார்.
பதூதா தன் பயண வழியில் தரிசித்த முக்கிய இடம் மௌலானா ரூமியின் நினைவிடம் உள்ள கொன்யா நகரம். ஆடலும் பாடலுமாகச் சூறாவளியெனச் சுழன்றாட மயக்க நிலையில் அனுபூதியைத் தொட்டுவிடும் மார்க்கத்தை வற்புறுத்தியவர் ரூமி. இந்த மார்க்கத்தில் பதூதாவுக்கு அலாதியான பற்றுதல். பதூதா 1354-ல் தாயகம் திரும்பி இறுதி ஆண்டுகளைச் சட்ட வல்லுநராகக் கழித்திருக்கிறார். அவர் இறந்த ஆண்டு 1369 அல்லது 1377 என்பதில் குழப்பம். அது போலவே அவரது கல்லறை டாஞ்சியர்ஸில் இருக்கும் இடம் எது என்பதிலும் குழப்பம். ஆனாலும் என்ன?
அனுபவக் குறிப்புகள்
பயணங்களை முடித்த பின் தன் மாணவன் ஒருவனிடம் தன் அனுபவங்களை எடுத்துக் கூறி அவனை எழுதுமாறு செய்வித்துக் கிடைத்திருப்பதுதான் பதூதாவின் பயணக் குறிப்புகள். “நம் காலத்தின் மாபெரும் பயணி இந்த ஷேக் என்று ஒப்புக்கொள்ளாத அறிவார்த்த வாசகன் யாருமில்லை. இஸ்லாத்தின் மிகப் பெரிய பயணி இவர் என்று யாரேனும் கூறினால் அது பொய்யில்லை” என்று அந்தக் குறிப்புகள் முடிகின்றன. மார்க்கோபோலோவின் பயணக் குறிப்புகளில்கூடச் சந்தேகங்களும் குழப்பங்களும் உண்டு. ஆனால் பதூதாவின் குறிப்புகள் துல்லியமானவை என்று இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
“வாழ்வென்பது தூய சுடர், நமக்குள்ளேயிருக்கும் புலப்படாத சூரியனால் நாம் வாழ்கிறோம்” என்பார் தாமஸ் பிரவுன். அத்தகைய சூரியன் பதூதாவுக்குள் கனன்றுகொண்டிருந்திருக்க வேண்டும்.
No comments:
Post a Comment