அனைவராலும் மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படும் மோகன்தாசு கரம்சந்த் காந்தி, இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் "விடுதலை பெற்ற இந்தியாவின் தேசத் தந்தை" என்று அழைக்கப்படுகிறார். சத்தியாக்கிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மட்டுமல்லாமல் சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது. இந்த தொகுப்பின் மூலம் அந்த மகாத்மாவின் செயல்பாடுகள் பற்றியும் தெரிந்துகொள்வோம்.
பிறப்பு: இந்திய நாட்டின் குஜராத் மாநிலத்திலுள்ள போர்பந்தர் எனும் ஊரில் 02.10.1869 அன்று பிறந்தார். (இந்த நாள் காந்தி ஜெயந்தி என்று கொண்டாடப்படுகிறது)
இறப்பு: 30.01.1948 (இந்த நாள் தியாகிகள் தினமாக கொண்டாடப்படுகிறது)
தந்தை: கரம்சந்த் காந்தி
தாய்: புத்லிபாய்
தாய் மொழி: குஜராத்தி.
திருமணம்: காந்தி தனது 13ஆம் வயதில் தம் வயதேயான கஸ்தூரிபாயை மணந்தார். பின்னாளில் இருவருக்கும் ஹரிலால் (1888), மணிலால் (1892), ராம்தாஸ் (1897), தேவ்தாஸ் (1900) என்ற நான்கு ஆண் குழந்தைகளைப் பெற்றெடுத்தனர்.
தந்தை இறப்பு: காந்தி தனது 16வது வயதில் தன் தந்தையை இழந்தார்.
* சிரவணன் பிதுர்பக்தி என்ற நூலைப் படித்து தாய், தந்தையை வணங்கினார்.
* அரிச்சந்திரா நாடகம் படித்து உண்மையே பேச வேண்டும் எனக் கற்றுக் கொண்டார்.
* "பவ நகர்" கல்லூரியில் பயின்றார்.
* 1888ல் பாரிஸ்டர் பட்டம் பெற இலண்டன் சென்றார்.
* 1891ல் பாரிஸ்டர் பட்டம் பெற்றார்.
* 1893ல் தென் ஆப்பிரிக்கா சென்றார்.
* 1894ல் நேட்டல் இந்திய காங்கிரஸ் என்ற அமைப்பை தென்னாப்பிரிக்காவில் நிறுவினார்.
* 1912ல் காந்தி நடத்திய போராட்டத்திற்கு கோபால கிருஷ்ண கோகவே தலைமையேற்றார்.
* 1913ல் இந்தியர்களுக்கான சலுகை சட்டம் கிடைத்தது.
* 1915ல் இந்தியா திரும்பினார். (அதாவது 09.01.1915) அந்த நாள் வெளிநாடு வாழ் இந்தியர் தினம் என அனுசரிக்கப்படுகிறது.
* அகமதாபாத்துக்கு அருகில் கொச்ரப் பகுதியில் 25.05.1915ல் ஓர் ஆசிரமம் தொடங்கினார். பின்னர் 17 ஜூன் 1917ல் சபர்மதி நதிக்கரையோரம் இந்த ஆசிரமம் இடமாற்றம் செய்யப்பட்டது.
* இரவீந்திரநாத் தாகூர் காந்தியை மகாத்மா என்னும் பட்டம் வழங்கி அழைத்தார்.
காந்தியடிகளின் முக்கிய போராட்டம்:
* 1917ல் - சாம்பரான் சத்தியாகிரகம்.
* 1917ல் - அகமதாபாத் மில் தொழிலாளர்களுக்கான போராட்டம்.
* 1918ல் - கேதார் சத்தியாகிரக போராட்டம்.
* 1919ல் - ரெளலட் சட்டத்தை எதிர்த்து சத்தியாகிரக சபா தொடங்கினார்.
* 1920ல் - ஒத்துழையாமை இயக்க போராட்டம்.
* 1921ல் - வேல்ஸ் இளவரசர் வருகையை எதிர்த்து காந்தி தலைமையில் வெளிநாட்டு துணிகள் எரிக்கப்பட்டன.
* 1922ல் - பிப்ரவரி 5 செளரி-செளரா நிகழ்வை தொடர்ந்து காந்தி, ஒத்துழையாணை இயக்கத்தை திரும்பப் பெற்றார்.
* 1924ல் - இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தின் தலைவராக காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். தலைமையேற்றவுடன் காங்கிரசில் பல மாற்றங்களை அறிமுகப்படுத்தி இயக்கத்திற்கு புத்துயிர் ஊட்டினார். அறப்போராட்ட வழிமுறைகளையும் சுதேசி போன்ற கொள்கைகளையும் வலியுறுத்தி காங்கிரஸ் இயக்கத்தை இந்தியாவின் மாபெரும் விடுதலை இயக்கமாக்கினார்.
* 1930ல் - உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை (மார்ச் 2,1930) அன்று 78 சத்தியாகிரகிகளுடன் அகமதாபாத்திலிருந்து குஜராத் கடலோரத்தில் இருந்த தண்டி நோக்கி 240 மைல் நடைப் பயணத்தை துவக்கினார். 23 நாட்கள் நடைப் பயணத்திற்குப் பிறகு, தன் சகாக்களுடன் தண்டி கடற்கரை வந்து சேர்ந்த காந்தி, அங்கிருந்த கடல் நீரை காய்ச்சி உப்பு தயாரித்து பிரிட்டிஷ் சட்டத்திற்கு எதிராக பகிரங்கமாக பொதுமக்களுக்கு விநியோகித்தார். மேலும் இந்தியாவில் கடலோரத்தில் இருந்த அனைத்து இந்தியர்களையும் இது போல் உப்பு தயாரித்து பயன்படுத்தச் சொன்னார். இந்தியாவின் பல இடங்களில் இது போல் நடந்தது; காந்தி உட்பட பல்லாயிரக் கணக்கான இந்தியர்கள் சிறையிலடைக்கப்பட்டனர். ‘உப்பு சத்தியாகிரகம்’ என்ற இந்நிகழ்வு இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது என கூறலாம்.
* 1931ல் - இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் காங்கிரஸ் சார்பாக பங்கேற்றார்.
* 1932ல் - மெக்டொனால்டு நன்கொடையை எதிர்த்து சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டு 1932ல் பூனா ஒப்பந்தம் ஏற்படச் செய்தார். (காந்தி - அம்பேத்கர்)
* 1942ல் - ஆகஸ்ட் 8 ஆம் தேதி ஆங்கில அரசுக்கு எதிராக ‘ஆகஸ்ட் புரட்சி’ என அழைக்கப்படும் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தினை காந்தி தொடங்கி வைத்தார். வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்க முக்கிய காரணமான செய் அல்லது செத்துமடி என்ற வாசகத்தை உச்சரித்து, சுதந்திர எழுச்சியை ஏற்படச் செய்தார். இரண்டாம் உலகப்போரின் போது (1942 மார்ச்) பிரிட்டிஷ் பிரதமர் சர்ச்சில் இந்தியர்களின் ஒத்துழைப்பைப் பெற கிரிப்ஸ் தலைமையில் ஒரு தூதுக்குழுவை அனுப்பினார். இந்தியா ஒத்துழைக்கும் பட்சத்தில், போர் முடிந்த பிறகு தன்னாட்சிக்கு வழிவகுப்பதாகவும், பாதுகாப்புத்துறை மட்டுமே பிரிட்டிஷ் வசம் இருக்குமென்றும், கிரிப்ஸ் உறுதியளித்தார். ஆனால் கிரிப்ஸின் இந்த உறுதிமொழியை பின் தேதியிட்ட காசோலை (Post-dated cheque)என்று காந்தி வர்ணித்தார்.
* 1947ல் - காந்தியின் மன உறுதியையும், அகிம்சை பலத்தையும் கண்ட ஆங்கில அரசு திகைத்தது. இறுதியில் காந்தியின் இடைவிடாத போராட்டத்தால் ஆகஸ்ட் 15ஆம் நாள் இந்தியா சுதந்திர நாடாக மலர்ந்தது. ஆனால் காந்தியோ, சுதந்திர கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளவில்லை.
* 1947ல் - இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையை நினைத்து மனம் வருந்தி துக்கம் அனுசரித்தார்.
* 1948 ஜனவரி 13 - 17ல் - சமூக நல்லினக்கத்திற்காக இறுதியாக உண்ணாவிரதம் இருந்தார்.
இறப்பு: “அகிம்சை” என்னும் வன்முறையற்ற மாபெரும் மந்திரத்தை உலகத்திற்கு வித்திட்ட உன்னத மனிதர். இந்தியாவின் விடுதலைக்காக ஆங்கிலேயரை எதிர்த்து அறவழியில் போராட்டம் நடத்தி, விடுதலைக்கு வித்திட்ட வீரனை 1948ல் - ஜனவரி 30ம் தேதி மாலை 05.17 மணியளவில் தன் வாழ்நாளில் இறுதியாக 144 நாட்கள் தங்கியிருந்த தில்லி பிர்லா மாளிகை காந்தி சமிதி தோட்டத்தில் நாதுராம் கோட்சேவால் என்னும் கொடியவனால் சுட்டுக்கொல்லப்பட்டார். அன்றைய தினத்தை இந்தியாவில் தியாகிகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
ஆங்கில ஆட்சிக்கு எதிராகவும், இந்திய விடுதலைக்காகவும் அந்நியப் பொருட்கள் புறக்கணிப்பு, உப்பு சத்தியாகிரகம், வரி கொடா இயக்கம், ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் என பலப் போராட்டங்களை அறவழியில் முன்னெடுத்து நடத்தி, துப்பாக்கி ஏந்தி தன்னுடைய முரட்டுக்கரங்களால் அடக்கி ஒடுக்கிய வெள்ளையர்களை திகைக்கச் செய்தவர். பாரத தேசத்திற்காக தன்னுடைய உயிரையும் காணிக்கையாக்கிய மகாத்மாவின் வாழ்க்கை வரலாறு மற்றும் போராட்டங்கள் உலக சரித்திரத்தில் எழுதப்பட்ட அழியா சுவடுகள் ஆகும்.
காந்தியடிகளின் பத்திரிக்கைகள்: ஹரிஜன், யங் இந்தியா, நவஜிவன் இந்தியன் ஒபீனியன்
இந்து சுயராஜ்ஜியம் (சிறு நூல்)
இந்து சுயராஜ்ஜியம் (சிறு நூல்)
காந்தியின் நினைவிடம் உள்ள இடம்: ராஜ்காட், புதுதில்லி
சுயசரிதை: காந்தி குஜராத்தி மொழியில் எழுதிய சுயசரிதை, சத்திய சோதனை என்ற பெயரில் தமிழ் மொழியிலும் An Autobiography: The Story of My Experiments with Truth என்ற பெயரில் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் நினைவுச் சின்னங்கள்: தமிழக அரசு காந்தியடிகளின் தியாகத்தைப் போற்றிச் சிறப்பிக்கும் வகையில் சென்னை கிண்டியில் காந்தி மண்டபம் மற்றும் அருங்காட்சியகம் அமைத்துள்ளது. மதுரையில் இராணி மங்கம்மாள் காலத்தில் அமைக்கப்பட்ட கட்டிடத்தில் 1959 முதல் காந்தி அருங்காட்சியகம் அமைத்து செயல்படுத்தி வருகிறது. இங்கு அண்ணல் காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படக் கண்காட்சியும் அமைக்கப்பட்டுள்ளது. முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரிக் கரையில் நினைவு மண்டபம் அமைத்துள்ளது. இங்கு அண்ணல் காந்தியடிகளின் மார்பளவு சிலை ஒன்று வளாகத்திலும், மற்றொன்று அருங்காட்சியகத்திலும் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆயிரம் பேர்கள் அமரக்கூடிய அளவில் அரங்கமும், அண்ணலின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் மற்றும் பொருட்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகமும் நூலகமும் அமைக்கப்பட்டுள்ளது.
மகாத்மாவின் பொருள்கள் ஏலம்: தேசத் தந்தை மகாத்மா பயன்படுத்திய சர்க்காவும், அவரது கடைசி உயிலும் 2013 ஆம் ஆண்டு லண்டனில் ஏலத்தில் விடப்பட்டது. இதில் அவரது சர்க்கா 1,10,000 பவுண்டுக்கும் (இந்திய ரூபாய் சுமார் ஒரு கோடி), அவரது கடைசி உயில் 20,000 பவுண்டுக்கும் (சுமார் 18 லட்சம்) ஏலம் போனது. இந்த ஏலம் பற்றி முன்னமே அறிந்திருந்தும் எந்த தடையும் இந்திய அரசு ஏற்படுத்தாதலால், அவை தனி நபர் வசம் செல்லும் மதிப்பற்ற நிலை அந்தப் பொருட்களுக்கு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment