புகழ்பெற்ற சிகாகோ உரையை விவேகானந்தர் நிகழ்த்தி இன்றோடு 121 ஆண்டுகள் ஆகின்றன.
செப்டம்பர் 11 அன்று அமெரிக்காவின் இரட்டைக் கட்டிடங்கள் தகர்க்கப்பட்ட பிறகு அந்தத் தேதியை அமெரிக்கப் பாணியில் 9/11 என்று குறிக்கும் எண் மிகவும் பிரபலம். பயங்கரவாதத்தின் குறியீடாகவே மாற்றப்பட்டு அமெரிக்காவைத் தாக்கியவர்களை உலகப் பொது எதிரிகளாகக் கட்டமைக்கும் பிரச்சாரம் ஊடக வலுவுடன் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இதே நாளில், சரியாக 108 ஆண்டுகளுக்கு முன் வேறொரு தகர்ப்பும் அதே அமெரிக்காவில் நிகழ்த்தப்பட்டது. வேறொரு குறியீடும் உருவாக்கப்பட்டது. அது நடந்து இன்றோடு சரியாக 121 ஆண்டுகள் ஆகின்றன. நிகழ்த்தியவர் விவேகானந்தர். அமெரிக்காவில் சிகாகோ நகரில் உலக மதங்களின் பாராளு மன்றக் கூட்டத்தில் செப்டம்பர் 11 அன்று அவர் பேசியபோதுதான் அந்தத் ‘தகர்ப்பு’ நிகழ்ந்தது.
மிக மிகச் சுருக்கமான அந்த உரை மூலம், இந்தியாவைப் பற்றிய உலகின் பொதுப் பார்வையை விவேகானந்தர் புரட்டிப்போட்டார். பல ஆண்டுகளாக ஊறி வலுப்பட்டிருந்த அந்த எண்ணத்தைத் தகர்த்ததுதான் அந்த உரையின் முக்கியமான பங்களிப்பு.
“உலகத்தின் மிகப் பழமை வாய்ந்த துறவியர் பரம்பரையின் பெயரால் உங்களுக்கு நன்றி கூறுகிறேன். அனைத்து மதங்களின அன்னையின் பெயரால் நன்றி கூறுகிறேன். பல்வேறு இனங்களையும் பிரிவுகளையும் சார்ந்த கோடிக் கணக்கான இந்துப் பெருமக்களின் பெயரால் நன்றி கூறுகிறேன்” என்ற கம்பீரமான அறிவிப்பு அங்கிருந்த அறிஞர்களைப் பிரமிக்கவைத்தது.
பிற சமயக் கொள்கைகளை மதிப்பதில் இந்து மதத்தின் தன்மையைப் பற்றிப் பேசிய விவேகானந்தர் அனைத்து நாடுகளாலும் அனைத்து மதங்களாலும் கொடுமைப்படுத்தப்பட்டு விரட்டி அடிக்கப்பட்டவர்களுக்கு இந்தியா புகலிடம் அளித்த வரலாற்றையும் நினைவுகூர்ந்தார்.
“இன்று காலையில் இந்தப் பேரவையின் ஆரம்பத்தைக் குறிப்பிட முழங்கிய மணி, மதவெறிக்கும், வாளாலும் பேனாவாலும் நடைபெறுகின்ற கொடுமைகளுக்கும், இரக்கமற்ற உணர்ச்சிகளுக்கும் சாவு மணியாகும் என்று நான் திடமாக நம்புகிறேன்” என்ற விவேகானந்தரின் கூற்று அந்தச் சபையின் பிரகடனமாகவே ஒலித்தது.
அடிமைகளின் தேசமாகவும் கூட்டாஞ்சோறு பண்பாடாகவும் பிற்போக்குத்தனங்களின் பூமியாகவும் உலகின் பொதுப்புத்தியில் உறைந்திருந்த இந்தியாவின் பிம்பத்தை விவேகானந்தரின் இந்தச் சில நிமிட உரை உடைத்தது. “மதங்களின் தாயாகிய இந்தியாவிலிருந்து காவியுடை அணிந்து வந்த துறவி சுவாமி விவேகானந்தர் பார்வையாளர்கள் மேல் ஓர் அற்புதமான தாக்கத்தை ஏற்படுத்தினார்” என்று அந்த அரங்கின் தலைவர் ஜான் ஹென்றி பாரோஸ் வர்ணித்தார். இந்தியாவிலிருந்து புயல்போல் வந்த துறவி என்று சில நாளேடுகள் வர்ணித்தன. “விவேகானந்தர்தான் இந்தப் பாராளு மன்றத்தின் மிகப் பெரும்புள்ளி” என்றது நியூயார்க் ஹெரால்டு பத்திரிகை.
சிகாகோ உரை மூலம் உலகின் பாராட்டுகளைப் பெற்று இந்தியர்களுக்குப் பெருமித உணர்வை ஏற்படுத்திய விவேகானந்தர், இந்தியாவுக்கு வந்ததும் இந்தியர்களுக்குத் தாலாட்டுப் பாட வில்லை. இந்தியாவின் நடப்பு நிலை எவ்வளவு கேவலமாக இருக்கிறது என்பதைக் கூர்மையான சொற்களால் சுட்டிக்காட்டினார். தீண்டாமை, சாதிப் பற்று, மூட நம்பிக்கைகள், பிற்போக்குத்தனங்கள் ஆகியவற்றை ஈவிரக்கமின்றிச் சாடினார். ஆதிக்கச் சாதியினர் கூட்டணி போட்டுக்கொண்டு இந்தியாவின் பெருவாரியான மக்களைக் கேவலமான நிலையில் வைத்திருப்பதை வரலாற்று ஆதாரங்களோடு அம்பலப்படுத்தினார். இந்தியாவின் ஆன்மாவை அதன் வெகு மக்களின் எழுச்சியின் மூலம் மீட்டெடுக்க வேண்டும் என்று முழங்கினார். இப்படி ஒரு மனிதர் தார்மிக ஆவேசத்துடன், பொறுக்கியெடுத்த வார்த்தைகளால் தங்களை வறுத்தெடுப்பதை இந்தியப் பொதுச் சமூகம் ஏற்றுக்கொண்டது. உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை நிலைநாட்டிய இந்தத் துறவிக்கு இல்லாத உரிமையா என்று இந்திய மனசாட்சி அவரைத் தனது வழிகாட்டியாக வரித்துக்கொண்டது.
விவேகானந்தர் ஒரு தனிநபர் இயக்கமாகச் சுதந்திர உணர்வு பரவுவதற்கும் பல்வேறு சீர்திருத்தங்களுக்கும் வித்திட்டார் என்றும்கூடச் சொல்லலாம். இதற்கான ஆதார வலுவை அவருக்குத் தந்தது சிகாகோ சொற்பொழிவு. அவ்வகையில் 9/11 இந்திய வரலாற்றில் ஒரு தகர்ப்பாகவும் திருப்புமுனைக்கான குறியீடாகவும் அமைந்துவிட்டது.
- அரவிந்தன், தொடர்புக்கு: aravindan.di@thehindutamil.co.in
No comments:
Post a Comment