ஆயிரத்தில் ஒருவன் படத்தில் "அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்" பாடலின் பின்னணியில் நூற்றுக் கணக்கான தொழிலாளிகள் அந்தக் கப்பலைச் செலுத்த உழைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்திருக்கலாம்.
இவர்களைப் போலவே, உலகில் முதன்முதலில் பெரிய கப்பல்களைக் கட்டும் திறமை பெற்றிருந்த வைகிங் (Vikings) எனப்பட்ட போர்வீரர்கள், கடலில் பயணித்துப் புதிய நிலப்பகுதி களைத் தேடிச் சென்றனர்.
இன்றைய ஸ்வீடன், நார்வே உள்ளிட்ட ஐரோப்பிய பகுதி அந்தக் காலத்தில் ஸ்காண்டிநேவியா எனப்பட்டது. அப்பகுதியைச் சேர்ந்த இடைக்கால (எட்டாம் நூற்றாண்டு முதல் பதினொன்றாம் நூற்றாண்டுவரை) போர் வீரர்கள்தான் இந்த வைகிங்குகள்.
கொலம்பஸுக்கு முன்னதாகவே வடஅமெரிக்கக் கண்டத்தில், இன்றைய கனடாவில் கால் பதித்தவர்கள் இவர்கள்தான்.
கடல் தாண்டியவை
இப்படிப் புதிய நிலப்பகுதி களைத் தேடிச் செல்லவும், அப்பகுதி மக்களைப் போரிட்டு வெல்லவும் அவர்களுக்கு உதவியாக இருந்தது பெரிய கப்பல்கள்.
இப்படி அவர்கள் நாடு விட்டு நாடு தாவுவதற்கு அடிப்படை, கப்பல் கட்டுவதில் அவர்களுக்கு இருந்த அபாரத் திறமைதான். சிறந்த படகுகளை வடிவமைத்த அவர்கள், காற்று மிகுந்த மேற்குக் கடல்களில் பாய்மரத்தைக் கட்டி வேகமாகப் பயணித்தார்கள்.
கப்பலைச் செலுத்துவதிலும் வைகிங்குகள் திறம்பெற்றவர் களாக திகழ்ந்தனர். சுமார் நூறு படகோட்டிகளைக் கொண்ட அவர்களது திறந்த கப்பல்கள் கடலைக் கிழித்துக்கொண்டு வேகமாகப் பயணித்து, நெடுந் தொலைவிலுள்ள நாடுகளின் கரைகளைத் தொட்டன.
இரண்டு வகை
கடலில் எளிதாகச் செலுத்தக்கூடிய, போருக்குப் பயன்படுத்திய நீண்ட கப்பல் களுக்குப் பதிலாக, அகலமான பரப்பு கொண்ட சரக்கு சுமந்து செல்லும் கப்பல்களையும் அவர்கள் உருவாக்கினர். இந்தப் பெரும் சரக்கு கப்பல்கள் நார்கள் (Knarr) எனப்பட்டன. அவற்றின் மூலம் புதிய பகுதிகளில் குடியேற்ற மக்களையும் அழைத்துச் சென்றனர்.
குதிரைகள், மாடு ஆகியவற்றுடன் புதிய நிலப் பகுதியில் மக்கள் குடியேறத் தேவையான பொருட் களும் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த இரண்டு கப்பல்களுமே, மரப்பலகை களை ஒன்றன் மீது மற்றொன்றை வைப்பதன் மூலம் கட்டப்பட்டவை.
ஐஸ் தேசமும் பசுமை தேசமும்
நார்வே அரசர் ஹரால்டின் ஆட்சியி லிருந்து தப்பிப் பதற்காகவே, அந்நாட்டிலிருந்து பல வைகிங் குழுக்கள் வெளியேறின. இப்படி வைகிங்குகள் கடலில் பயணித்துக் கொண்டிருந்த போது, அட்லாண்டிக் புயலால் வழிதவறிக் கி.பி. 879-ல் ஐஸ் லாந்தைக் கண்டறிந்தார்கள்.
அப்பகுதி முழுவதும் பனி சூழப்பட்டிருந்ததால், ஐஸ்லாந்து என்று பெயர் வைத்தார்கள். அதன் பிறகு ஐஸ்லாந்துக்கு மக்கள் குடிபெயர்ந்தனர். அங்கே அவர்கள் சுயமாக ஆட்சி செய்துகொண்டார்கள்.
நார்வேயிலிருந்து வெளி யேற்றப்பட்ட எரி தி ரெட், கி.பி. 965-ல் ஐஸ்லாந்துக்கு வந்தார். புதிய நிலப்பகுதி கண்டறியும் ஆவலால் அங்கிருந்தும் வெளியேறி, கடலில் தேடி அலைய ஆரம்பித்தார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு கிரீன்லாந்து என்ற வளமான பகுதி பற்றிய கதைகளுடன் அவர் ஐஸ்லாந்துக்குத் திரும்பினார்.
அவர் ஏற்கெனவே வாழ்ந்த ஐஸ்லாந்தில், பசுமையையே பார்க்க முடியாது. அதற்கு நேர்மாறாகப் பசுமை நிறைந்திருந்ததால், புதிய நிலப்பகுதிக்குக் கிரீன்லாந்து என்று பெயர் வைக்கப்பட்டது. அதன் பிறகு நீண்டதூரம் பயணித்துக் கிரீன்லாந்திலும் மக்கள் குடியேறினர்.
No comments:
Post a Comment