சூழல் சீர்கேடுகளை தடுக்க காற்றையும் சூரியஒளியையும் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கலாம்.
‘கிண்டர்கார்டன்’ என்ற வார்த்தையை உலகச் சொல் அகராதிக்கு வழங்கியவர்கள் ஜெர்மானியர்கள். சமீபத்தில் அவர்கள் அளித்திருக்கும் மற்றொரு வார்த்தை ‘எனர்ஜிவென்டே’. ஜெர்மனியில் மின்சக்தித் தயாரிப்பில் ஏற்பட்டுவரும் மாற்றங்களைக் குறிக்கும் வார்த்தை இது. காற்று, சூரியஒளி ஆகியவற்றிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் நடைமுறைதான் ‘எனர்ஜிவென்டே’. ஜெர்மனியின் 30% மின்னாற்றல் காற்றிலிருந்தும் சூரியஒளியிலிருந்தும்தான் தயாரிக்கப்படுகிறது. அத்துடன் பிற நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்படுகிறது. 2030-ல் இந்தப் பங்களிப்பை 50% ஆகவும் 2050-ல் 80% ஆகவும் அதிகரிக்கத் திட்டமிட்டிருக்கிறது.
ஜெர்மனியில் சூரியஒளி மின்சார உற்பத்தியின் நிறுவுதிறன் மட்டும் 37,000 மெகாவாட். காற்றிலிருந்து தயாரிக்கப்படும் மின்உற்பத்தியின் நிறுவுதிறன் 29,000 மெகாவாட். சுமார் 12,000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் அணுமின்சாரப் பிரிவுகளை 2022-க்குள் மூடிவிட ஜெர்மனி பிரதமர் ஏஞ்செலா மெர்கெல் முடிவுசெய்திருக்கிறார். ஜெர்மனியில் எப்போதுமே அணு மின்உற்பத்தி நிலையங்களுக்கு எதிராக மக்களிடையே அச்சம் இருந்துவந்திருக்கிறது. ஜப்பான் சுனாமியில் புகுஷிமா தீவில் அணு மின்நிலையத்துக்கு ஏற்பட்ட கடும் சேதமும், அதன் விளைவுகளும் அவர்களது அச்சத்தை மேலும் தீவிரப்படுத்தியிருக்கின்றன.
இதனாலேயே அணுமின் நிலையங்களை முற்றாக மூடிவிட முடிவு செய்யப்பட்டது. மின் பற்றாக்குறையை ஈடுகட்ட, புதுப்பிக்கத்தக்க இயற்கையான விசை மூலங்களான காற்றையும் சூரியஒளியையும் பயன்படுத்த முடிவுசெய்யப்பட்டது. அணு மின் நிலையங்களிலிருந்து ஜெர்மனியின் மொத்த மின் தேவையில் 20% முதல் 25% வரை பூர்த்திசெய்யப்பட்டு வந்தது. அணு மின்நிலையங்களை மூடிவிட்டால், நிலக்கரிப் பயன்பாட்டின் அளவை அதிகரிக்க நேரிடுமே என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.
ஜெர்மனி உறுதி
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் விடுத்துவரும் கோரிக்கையை ஏற்றே இந்தப் புதிய முடிவுக்கு ஜெர்மனி அரசு வந்திருக்கிறது. புதுப்பிக்கக்கூடிய ஆற்றலைக் கொண்டு மின்சாரம் தயாரிக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் 14 ஆண்டு களுக்கு முன்னால் நிறைவேற்றப்பட்டது. அதில் பல மாறுதல்கள் ஏற்பட்டாலும் பொதுத் தொகுப்புக்கு, மின் உற்பத்தியாளர்கள் வழங்கும் மின்சாரத்துக்கு ஏற்பக் கட்டணம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்ற கருத்து ஏற்கப்பட்டது. யார் வேண்டுமானாலும் காற்றாலை மின்உற்பத்தி, சூரியஒளி மின்உற்பத்தி ஆகியவற்றில் முதலீடு செய்யலாம்.
தங்கள் தேவைக்குப்போக உபரியாவதை அருகில் உள்ள மின்தொகுப்புக்கு விற்றுப் பணம் பெறலாம். அவர்கள் தயாரிக்கும் மின்சாரத்துக்குத் தேவை இருந்தாலும் இல்லாவிட்டாலும், அடுத்த 20 ஆண்டுகளுக்கு மின்சாரத்தை வாங்கிக்கொள்வதாக ஜெர்மனி அரசு உறுதியளித்திருக்கிறது.
மின்சாரம் தயாரிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் வழங்கும் மின்சாரத்துக்கு உடனுக்குடன் பணம் அளிப்பது சட்டபூர்வ கடமையாக்கப்பட்டிருக்கிறது. இதனால் இப்போது தனியாளாகவும் கூட்டுறவு சங்கங்கள் வாயிலாகவும் அரசுத் தொகுப்புக்கு மின்சாரம் வழங்குவோர் எண்ணிக்கை 50 லட்சமாகி விட்டது. அதாவது, புதுப்பிக்கத்தக்க மின்சார ஆற்றலுக்கான நிறுவுதிறனில் 50% இப்போது சிறிய மின்சார தயாரிப்பாளர்கள் மூலமே கிடைக்கத் தொடங்கிவிட்டது. நாட்டு மக்களில் 6% பேர் இப்போது மின்சாரம் தயாரித்து விற்கிறார்கள். மின் தயாரிப்புக்கான அடிப்படைக் கட்டமைப்பையே இது புரட்டிப்போட்டுவிட்டது. ஜெர்மனியின் நான்கு பெரிய மின்உற்பத்தி நிறுவனங்கள் தொடர்ந்து தங்களுடைய சந்தையை இழந்துவருகின்றன.
சர்ச்சைகள்
இந்த மாற்றம் தொடர்பாக சர்ச்சைகள் எழாமல் இல்லை. மின்கட்டணம் இப்போது உயர்ந்திருக்கிறதா இல்லையா என்ற விவாதம் அங்கு நடந்துவருகிறது. ‘நுகர்வோரின் மின்கட்டணத்தின் மீது விதிக்கப்படும் கூடுதல் தீர்வையிலிருந்துதான் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்திக்குச் செலவிடப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக மின்கட்டணத்தில் மாற்றம் ஏதுமில்லை’ என்று ஒரு சாரார் வாதிடுகின்றனர்.
புதுப்பிக்கத்தக்க மின் தயாரிப்பு அதிகரிக்கும்போது, அதைப் பெறுவதற்காகவும் சேமிப்பதற்காகவும் மின் கட்டமைப்பில் மேற்கொள்ள வேண்டிய மாறுதல்களுக்கு நிறையச் செலவிட வேண்டும். இந்தச் செலவு அதிகம் என்பதை மறுப்பதற்கு இல்லை. அதே வேளையில், மின்தயாரிப்பு என்பது விரிவடைந்துகொண்டே போகும் என்பதையும் மறுத்துவிட முடியாது. சமீபத்தில் மக்களிடம் நடத்திய கருத்துக் கணிப்பில் புதிய முறையை மூன்றில் இரண்டு பங்கு மக்கள் வரவேற்றிருக்கின்றனர்.
இந்தியாவுக்கு எப்படிப் பொருந்தும்?
இந்தியாவில் மின்உற்பத்தி நிலவரம் என்ன? காற்றாலைகள் மூலம் அதிகபட்சம் 22,000 மெகாவாட் வரை தயாரிக்கலாம். சூரிய ஒளியிலிருந்து 2,650 மெகாவாட் தயாரிக்கலாம். அணுமின்சாரம் மூலம் 4,800 மெகாவாட் தயாரிக்கலாம். நிறுவுதிறனை அளவீடாகக் கொண்டால் மொத்த மின்உற்பத்தி ஆற்றலில் காற்றாலை, சூரியஒளி மூலம் 13% மின்சாரத்தைத் தயாரிக்கலாம். ஆனால், உண்மையில் இரண்டுமே சேர்ந்து 6% தான் கிடைக்கிறது. 2030-ல் இது 18% ஆக இருக்கும் என்று திட்டக்குழுவின் நிபுணர்கள் 2014 ஏப்ரலில் அறிக்கை வெளியிட்டனர்.
ஜெர்மனிக்கும் இந்தியாவுக்கும் என்ன வித்தியாசம் என்றால் 2030-ல்கூட இந்தியாவின் மின்சார உற்பத்தியில் அணு மின்சாரத்தின் பங்களிப்பு 8% ஆக இருக்கும். காற்றாலைகள் மூலம் 1,20,000 மெகாவாட்டுகளும் சூரியஒளி மூலம் 1,00,000 மெகாவாட்டுகளும் கிடைக் கக்கூடும். இப்போது பார்க்கும்போது மலைப்பாகத் தோன்றும், ஆனால் முயன்றால் சாதிக்கக்கூடியதுதான். இந்தியாவின் பெரும் பகுதியில் சூரியஒளி, ஆண்டின் பெரும்பாலும் இருந்துகொண்டே இருக்கிறது. காற்றும் அப்படியே.
மின்சாரத்தைத் தயாரித்து ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குக் கொண்டுசெல்வது, சேமிப்பது, தேவைக்குப் பயன்படுத்துவது போன்றவற்றை எளிதாக்க இன்னும் புதுப்புது சாதனங்களும் தொழில்நுட்பங்களும் கண்டுபிடிக்கப்பட வேண்டும். மின்உற்பத்தியில் பாதுகாப்பான நிலையை நாம் எட்டுவதுடன், கரிப்புகை வெளியேற்றத்தைக் கணிசமாகக் கட்டுப்படுத்திவிட முடியும்.
கரிப்புகை குறைந்தால் சுகாதார நிலை மேம்படும். வேறு தொழில் எதுவும் வளர்ச்சி பெறாத பின்தங்கிய பகுதிகளில்கூட காற்றாலை அல்லது சூரியஒளி மின்உற்பத்தி நிலையங்களை நிறுவ முடியும். பசுமைத் தொழில்நுட்பத்தில் இன்னும் 10 ஆண்டுகளில் இந்தியா தலைமை வகிக்க முடியும். அதற்கு முன் இதற்கேற்ற பொறியியல் திறனில் வளர்ச்சியும் தன்னிறைவும் காண்பது அவசியம். புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் சூரியஒளி மின்உற்பத்தி 1,800 மெகாவாட்டிலிருந்து 2,650 மெகாவாட்டாக உயர்ந்திருக்கிறது. இதனால், அத்துறையில் 24,000 பேருக்குப் புதிதாக வேலை கிடைத்திருக்கிறது.
ஜெர்மனியில், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தயாரிப்புத் துறையில் மட்டும் நான்கு லட்சம் பேர் வேலை பார்க்கின்றனர். இந்தியாவின் ஒட்டு மொத்தப் பொருளாதார வளர்ச்சி (ஜி.டி.பி.) குறைவாக இருக்கிறது. எனினும், கரியுமிலவாயு வெளியேற்றத்தைக் குறைக்கும் தொழில்நுட்பத்தைக் கையாள்வதை முயற்சிப்பதே நல்லது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். காற்றாலை, சூரியஒளி மின் தயாரிப்புக்காக அரசு பெருமளவு பணம் செலவு செய்தாலும், ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி வீதத்தில் 0.1% அல்லது 0.15%தான் குறையும். எனவே, முயற்சியைத் தொடர்வதில் தவறே இல்லை.
- ஜெய்ராம் ரமேஷ்,
முன்னாள் மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சர்.
தமிழில்: சாரி.
No comments:
Post a Comment