அந்நிய நேரடி முதலீட்டுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்க வகை செய்வதை முதன்மை நோக்கமாகக் கொண்ட 'மேக் இன் இந்தியா' திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை தொடங்கிவைத்தார்.
அந்நிய நேரடி முதலீட்டைக் குறிக்கும் எஃப்.டி.ஐ. என்ற சுருக்கத்துக்கு 'முதலில் இந்தியாவின் மேம்பாடு' என புதிய விளக்கத்தை மோடி எடுத்துரைத்தார்.
'மேக் இன் இந்தியா' பிரச்சாரத்தின் துவக்க விழாவில், அமைச்சர்கள், தொழிலதிபர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவை துவக்கி வைத்த வர்த்தக அமைச்சர் நிர்மலா சீதாராமன், "இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கான நடைமுறைகளை எளிதாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்தியாவில் தொழில் தொடங்க உரிமங்கள் வழங்குவதை எளிதாக்குவதன் மூலம் இந்தியாவை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல அரசு திட்டமிட்டுள்ளது. 'மேக் இன் இந்தியா' என்பது வெறும் கோஷமல்ல அது நாட்டின் தொலைநோக்குத் திட்டம்" என்றார்.
தொடர்ந்து தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி, குமார் மங்கலம் பிர்லா, சிரஸ் மிஸ்ட்ரி, ஆசிம் பிரேம்ஜி உள்ளிட்டோர் பேசினர்.
'இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்தை தொடங்கி வைத்து மோடி பேசியதாவது:
"மேக் இன் இந்தியா' திட்டத்திற்கு இந்திய தொழிலதிபர்கள் மத்தியில் ஆதரவு கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மத்திய அரசைப் பொருத்தவரை எஃப்.டி.ஐ. என்பது First Develope India, முதலில் இந்தியாவை மேம்படுத்த வேண்டும் என்பதே ஆகும். 'மேக் இன் இந்தியா' என்ற சிங்கம் தனது முதல் அடியை எடுத்துவைத்துள்ளது.
முந்தைய அரசின் ஆட்சியின் தவறான கொள்கைகளால் தொழில்துறையினர் இந்தியாவில் முதலீடு செய்ய தயங்கினர். இந்தியாவில் ஏற்கெனவே தொழில் தொடங்கிய அந்நிய நிறுவனங்களும் வெளியேறத் துவங்கின.
ஆனால், தற்போதைய அரசின் மீது தொழில்துறையினர் நம்பிக்கை வைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியாவில் முதலீடு செய்ய அந்நிய நிறுவனங்கள் விரும்புகின்றன. இந்தியாவில் அதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.
அந்நிய முதலீட்டு நிலைமையை மத்திய அரசு மாற்றியுள்ளது. இதற்குக் காரணம் தொழில்துறைக்கு ஆதரவான கொள்கைகளை மத்திய அரசு உருவாக்கியுள்ளதே. தொழில் முதலீட்டை பெருக்க நல்லாட்சி செலுத்துவது மட்டுமல்ல அதை சிறந்த முறையில் செலுத்துவதும் அவசியமாகும்.
ஆனால், வெறும் சலுகைகளால் மட்டுமே முதலீட்டை அதிகரித்துவிட முடியாது. முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும்" என்றார்.
மோடி தனது முதல் சுதந்திர தின உரையின்போது, இந்தியாவில் தயாரிக்க வெளிநாடுகளுக்கு அழைப்பு விடுத்து பேசினார் என்பது கவனிக்கத்தக்கது.
No comments:
Post a Comment