5-ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட நாளந்தா பல்கலைக்கழகம், இந்தியாவின் கல்விப் பெருமையை உலகறியச் செய்தது. பாடம் என்பதை புத்தகத்திலிருந்து கற்க வேண்டும் என்பதைத் தாண்டி, ஆராய்ச்சி மாணவர்களை ஊக்கிவித்து வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த பல்கலைக்கழகம் செயல்பட்டது.
பிஹார் மாநிலத்தின் தலைநகர் பாட்னாவிலிருந்து 90 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது இந்த வரலாற்று சிறப்புமிக்க நாளந்தா பல்கலைக்கழகம். கல்விமுறையில் எத்தனையோ தொழில்நுட்ப மாற்றங்கள் ஏற்பட்டாலும் பல நூற்றாண்டுகளைக் கண்ட இந்த பழமைவாய்ந்த பல்கலைக்கழகம் மீண்டும் செயல்பட வேண்டும் என்பது பல சமூக மற்றும் வரலாற்று ஆர்வலர்களின் விருப்பமாக இருந்தது. அவர்களது ஆவல் இப்போது நிறைவேறியுள்ளது.
பண்டைய இந்தியாவின் புகழ் கூறும் இந்த பல்கலைக்கழகத்தில் சீனர்கள், கிரேக்கர்கள், பெர்ஷியர்கள், திபெத்தியர்கள் என பல நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் படித்து அறிஞர்களாக திகழ்ந்தனர். உலக அளவில் உயரிய பதவிகளைப் பெற்று, சிறந்து விளங்கினர்.
உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு துறையைச் சார்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் இந்த பல்கலைக்கழகத்தில் இணைந்து படித்தனர். நாளந்தா பல்கலைக்கழகம்தான் இந்தியாவின் முதல் பல்கலைக்கழகம் என்பது மட்டுமல்லாமல், மாணவர்கள் தங்கி, படித்த முதல் பல்கலைக்கழகம் என்ற பெருமையையும் பெற்றிருந்தது
கி.பி. 413 முதல் சிறப்பாக செயல்பட்ட இந்த பல்கலைக்கழகம், படையெடுப்பாளர்களால் மூன்று முறை தாக்கப்பட்டு, இரண்டு முறை மறுகட்டமைப்பு செய்யப்பட்டது. கி.பி.1193-இல் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் துவங்கப்பட்டு, கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்திற்கான ஏற்பாடுகள் நடந்தபோது தான் நாளந்தா பல்கலைக்கழகம் செயல்படாமல் இருப்பதற்கான நடவடிக்கைகள் நடந்தது.
கி.பி. 455- ல், ஸ்கந்தகுப்தா ஆட்சிக் காலத்தில், மிஹிரக்குலா தலைமையில் ஹன்ஸ் படையெடுப்பின்போது தாக்கப்பட்ட நாளந்தா பல்கலைக்கழகம், பின்னர் ஸ்கந்த வாரிசுகளால் மறுசீரமைக்கப்பட்டு, பல காலம் கல்வி சேவை ஆற்றியது.
பின்னர், 7- ஆம் நூற்றாண்டில் ஹர்ஷவர்தன ஆட்சியின்போது, இரண்டாவது முறையாக கவுடர்களால் தாக்குதலுக்குள்ளாகி மீண்டும் புத்த பல்கலைக்கழகத்தால் மறுசீரமைக்கப்பட்டது.
மூன்றாவது முறையாக, 1193 ஆம் ஆண்டு பக்தியார் கில்ஜியின் ராணுவம் என்ற துருக்கிய படையால் சூறையாடப்பட்டு முற்றிலுமாக அழிக்கப்பட்டது. 14 ஹெக்டேர் பரப்பளவுள்ள பல்கலைக்கழக கட்டிடம் செங்கற்களால் ஆனது.
கடந்த 2006- ஆம் ஆண்டு நடைபெற்ற பிஹார் விதான் மண்டல் கூட்டு அமர்வில் நாளந்தா பல்கலைக்கழகத்தை புதுப்பிப்பதற்கான மசோதாவை அப்போதைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் முன்மொழிந்தார்.
பின்னர், 2010- ஆம் ஆண்டில் மாநிலங்களவையிலும் மக்களவையிலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கான பணிகள் நிறைவேற்றப்பட்டு இன்று முதல் இந்த பழமை வாய்ந்த பல்கலைக்கழகம் செயல்பட தொடங்கியுள்ளது.
இந்த பல்கலைக்கழகத்தில் இன்று காலை 9 மணிக்கு உயிரினங்களின் வாழ்வியல் மற்றும் சுற்றுபுறவியல் குறித்த வகுப்புகள் மற்றும் வரலாற்று வகுப்புகள் ஆரம்பமானது. இந்த பல்கலைக்கழகத்தில் சேர விருப்பப்பட்டு உலக அளவில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான விண்ணப்பங்களில் இருந்து 15 மாணவர்கள் மட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்காக 11 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இம்மாதம் 14- ம் தேதி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜால், நாளந்தா பல்கலைக்கழகம் திறக்கப்பட உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் மிக சிறப்பான வகையில் நடந்துவர, வகுப்புகள் துவங்குவதில் தாமதம் ஏற்படக் கூடாது என்று இன்று முதலே பாடங்கள் நடத்துவது ஆரம்பமானதாக நாளந்தா பல்கலைக் கழக துணை வேந்தர் கோபா சபர்வால் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment