Monday, 15 September 2014

ஆங்கிலச் சொற்களுக்கான இணையதளம்

உலகில் அதிகமாகப் பேசப்படும் மொழிகளில் மாண்டரின், ஸ்பானிஷ் மொழிகளுக்கு அடுத்து மூன்றாமிடத்தில் ஆங்கிலம் இருக்கிறது. உலகில் 42 கோடியே 70 லட்சம் பேர் ஆங்கிலத்தை முதல் பேச்சு மொழியாகவும், 90 கோடி பேர் ஆங்கிலத்தை இரண்டாம் பேச்சு மொழியாகவும் கொண்டிருக்கின்றனர். 57 நாடுகளில் ஆங்கிலம் அரசு மொழியாக உள்ளது.
உலகப் பொதுமொழி
ஆங்கிலத்தை முதலாவது உலகப் பொதுமொழி என்று கூட அழைப்பதுண்டு. பல்வேறு நாடுகளின் பயன்பாட்டிலுள்ள மொழிகளிலிருக்கும் பல சொற்களை உள்வாங்கிக் கொண்டு, பல புதிய ஆங்கிலச் சொற்கள் உருவாக்கம் பெற்றிருக்கின்றன.
ஆங்கில மொழியிலுள்ள பல்வேறு சொற்கள் குறித்துப் பல்வேறு தகவல்களைத் தரும் இணையதளம் ஒன்று இருக்கிறது.
இந்த இணையதளத்தில் ஒரு சொல்லை உள்ளீடு செய்து அந்தச் சொல்லுக்கான மாற்று சொல் (Another Word), எதிர்ச் சொல் (Opposite Word) கண்டறிவதற்கான வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன.
இது போல் ஒரு சொல்லை உள்ளீடு செய்து சொல்லின் பொருள் (Word Meaning), ஒலி இயைபுடைய சொற்கள் (Rhyming Words), உள்ளீடு செய்த சொல்லைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் எடுத்துக்காட்டு வாக்கியங்கள் (Example Sentences) போன்றவற்றைக் கண்டறிய முடியும்.
மொழிமாற்றம் (Translate) எனுமிடத்தில் சொடுக்கினால் நாம் ஆங்கிலச் சொல் ஒன்றினை உள்ளீடு செய்வதற்கான பெட்டி ஒன்று உள்ளது. இதையடுத்துள்ள பெட்டியில் ஆங்கிலத்திலிருந்து, ஆங்கிலத்திற்கு என்று இரு தேர்வுகள் தரப்பட்டிருக்கின்றன. மூன்றாவது பெட்டியில் 28 மொழிகளின் பட்டியல் இடம் பெற்றிருக்கின்றன.
இவற்றின் மூலம் ஆங்கில மொழி சொல் ஒன்றை உள்ளீடு செய்து 28 மொழிகளுக்கான மாற்று மொழிச் சொல்லைக் கண்டறிய முடியும்.
கண்டறிதல்
சொற்களைக் கண்டறிதல் (Find Words) எனுமிடத்தில் சொடுக்கினால், மூன்று தேர்வுப்பட்டியலுக்கான பெட்டிகள் கிடைக்கின்றன. இங்கு முதல் பெட்டியில் ஆங்கில எழுத்துகளில் 2 எழுத்துகள், 3 எழுத்துகள், 4 எழுத்துகள் என்று 10 எழுத்துகள் வரையிலான தேர்வுக் குறிப்புகள் இடம் பெற்றிருக்கின்றன. இரண்டாவது பெட்டியில் தொடங்கும் (Starting with), முடிவடையும் (Ending with), இடம் பெற்றிருக்கும் (Containing) எனும்
மூன்று தேர்வுகள் இடம் பெற்றிருக்கின்றன. மூன்றாவதாக இருக்கும் பெட்டியில், நமக்குத் தேவையான ஆங்கில எழுத்துகளை உள்ளீடு செய்வதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது. இங்கு நாம் குறிப்பிட்ட ஆங்கில எழுத்துகளை
மட்டும் உள்ளீடு செய்து, அருகிலுள்ள கண்டறி (Find it) எனுமிடத்தில் சொடுக்கினால், நம் தேர்வுக்கேற்ப பல்வேறு சொற்கள் பார்வைக்குக் கிடைக்கின்றன.
உச்சரிப்பு
சொல் வடிவங்கள் (Word Forms) எனுமிடத்தில் சொடுக்கினால், இரு பெட்டிகள் பார்வைக்குக் கிடைக்கின்றன. முதல் பெட்டியில் பன்மை (Plural), ஒருமை (Singular), கடந்த காலம் (Past Tense), நிகழ்காலம் (Present Tense), வினைச்சொல் (Verb), உரிச்சொல் (Adjective), வினையுரிச்சொல் (Adverb), பெயர்ச்சொல் (Noun) எனும் தேர்வுக் குறிப்புகள் இடம் பெற்றிருக்கின்றன.
இதில் தேவையானதைத் தேர்வு செய்து, இதற்கடுத்துள்ள பெட்டியில் ஆங்கிலச் சொல்லை உள்ளீடு செய்து தேவையானதைக் கண்டறிய முடியும்.
சொற்களை உச்சரித்தல் (Pronounce Words) எனுமிடத்தில் சொடுக்கினால், திறக்கும் பெட்டியில் சொல்லை உள்ளீடு செய்தால் அதை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று உச்சரித்துக் காண்பிக்கிறது. இதற்கு அடுத்திருக்கும் பெயர்கள் (Names) எனுமிடத்தில் சொடுக்கினால், இரு பெட்டிகள் பார்வைக்குக் கிடைக்கின்றன.
இங்கு முதல் பெட்டியில், பெயரின் வேர் (Origin of the Name), பெயர்களின் பொருள் (Names Meaning), பெயர்கள் தொடக்கத்துடன் (Names Starting with), வேர்களின் பெயர்கள் (Names of Origin) எனும் தேர்வுக் குறிப்புகள் உள்ளன. அடுத்த பெட்டியில் சொல்லை உள்ளீடு செய்து தேவையானதைக் கண்டறிய முடியும். இதை
http://www.wordhippo.com/ எனும் இணைய முகவரிக்குச் சென்று நீங்கள் பார்க்கலாம்.
- தேனி. மு. சுப்பிரமணி.

No comments:

Post a Comment