அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களுக்கு 93 விரிவுரையாளர்களை தேர்வு செய்வதில் ஆசிரியர் தேர்வு வாரியம் 2 ஆண்டுகளாக தாமதம் செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு கல்வி கற்றுகொடுப்பதற்காக பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள். இப்பணியில் சேருவதற்கு பிளஸ்2 முடித்துவிட்டு இடைநிலை ஆசிரியர் பயிற்சி (டி.டி.எட்.) எனப்படும் 2 ஆண்டு பட்டயப் படிப்பை முடிக்க வேண்டும்.
இடைநிலை ஆசிரியர் பயிற்சி அளிப்பதற்காக 30 மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களும் (டயட்), 9 அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களும், 41 அரசு உதவி பெறும் ஆசிரியர் பயிற்சி பள்ளிகளும், 400-க்கும் மேற்பட்ட தனியார் சுயநிதி ஆசிரியர் பயிற்சி பள்ளிகளும் இயங்குகின்றன. டயட் நிறுவனங்கள் மற்றும் 9 அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் மட்டும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கிறார்கள்.
93 காலிப்பணியிடங்கள்
டயட் கல்வி நிறுவனங்களில் மட்டும் 204 முதுநிலை விரிவுரை யாளர் பணியிடங்களும், 437 விரிவுரையாளர் பணியிடங்களும் உள்ளன. இவை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித்தேர்வு மூலமாக நிரப்பப்படுகின்றன.
இந்த நிலையில், 33 முதுநிலை விரிவுரையாளர் பணியிடங் களையும், 60 விரிவுரையாளர் பணியிடங்களையும் நிரப்பும் வகையில் காலியிடங்கள் பட்டியலை மாநில ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் 2 ஆண்டுகளுக்கு முன்னர் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு அனுப்பியது.
தேர்வுசெய்வதில் தாமதம்
இதைத்தொடர்ந்து 2010-11ம் ஆண்டுக்கான 33 முதுநிலை விரிவுரையாளர் காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டு கடந்த 2012 மார்ச் 4-ல் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வை 619 பேர் எழுதினர். தேர்வு முடிவு 2013 ஜூன் 6-ல் வெளியிடப்பட்டு 33 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டனர். அதோடு சரி, பாதியில் நிற்கிறது முதுநிலை விரிவுரையாளர் தேர்வு பணி. மேலும், 60 விரிவுரையாளர்களை தேர்வுசெய்வதற்கான போட்டித் தேர்வும் இதுவரை நடத்தப்பட வில்லை.
2 ஆண்டுகளுக்கு முன்னர் முதுநிலை விரிவுரையாளர், விரிவுரையாளர் காலியிடங்கள் பட்டியலை அனுப்பியும் ஆசிரியர் தேர்வு வாரியம் இன்னும் தேர்வு செய்து கொடுக்கவில்லையே.. என்னசெய்வது என்று தெரியாமல் கையை பிசைந்து கொண்டிருக் கிறார்கள் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன உயர் அதிகாரிகள்.
பாதியில் நிற்கும் முதுநிலை விரிவுரையாளர் தேர்வுக்கு விரைந்து முடிவு காணவும், 60 விரிவுரையாளர் காலியிடங்களை நிரப்ப விரைவில் தேர்வு நடத்த வேண்டும் என்றும் எம்.எட். பட்டதாரிகள் எதிர்பார்க்கிறார்கள்.
No comments:
Post a Comment