Thursday, 11 September 2014

அரசு பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் நியமனத்துக்கு வயது வரம்பு நீக்கம்: ஆசிரியர் தேர்வு வாரியம் விரைவில் அறிவிக்கிறது

அரசு பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் நியமனத்துக்கான வயது வரம்பை நீக்க ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிகளில் 139 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஜூலை மாதம் 16-ந்தேதி அறிவிப்பு வெளியிட்டது. சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் உள்ளிட்ட பொறியியல் பாடப்பிரிவுகளிலும், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பொறியியல் அல்லாத பாடப்பிரிவுகளிலும் காலிப் பணியிடங்கள் இடம்பெற்றன.
இதுவரையில் அரசு பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் தேர்வுக்கு எவ்வித வயது வரம்பு கட்டுப்பாடும் கிடையாது. ஆனால், முதல்முறையாக, கடந்த மாதம் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பில் இடஒதுக்கீட்டுப் பிரிவினர் உள்பட அனைத்து வகுப்பினருக்கும் வயது வரம்பு 35 ஆக நிர்ணயிக்கப்பட்டது. அரசு கலைக்கல்லூரி உதவி பேராசிரியர் தேர்வுக்கும், பள்ளி ஆசிரியர் தேர்வுக்கும் 57 வயது வரை விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
வயது வரம்பு நீக்கம்
பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் தேர்வுக்கான விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 20-ந் தேதி முதல் வழங்கப்பட்டுவந்த நிலையில், எம்.இ. பட்டதாரிகளும், முதுகலை பட்டதாரிகளும் வயது வரம்பை நீக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி கடந்த 5-ந் தேதி முடிவடைந்தது.
இந்த நிலையில், ஏற்கெனவே நடைமுறையில் இருந்து வந்ததைப் போன்று அரசு பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் தேர்வுக்கு வயது வரம்பை நீக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக தொழில்நுட்பக் கல்வி இயக்கக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதற்கிடையே, பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் தேர்வு பணிகள் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் உத்தரவை தொடர்ந்து, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருக்கிறது.
பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் நியமனத்தைப் போன்று அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் நியமனத்துக்கும் வயது வரம்பு கட்டுப்பாடு கொண்டுவர ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டிருந்தது. பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் நியமனத்துக்கு வயது வரம்பு நீக்கப்பட உள்ள நிலையில், பாலிடெக்னிக் விரிவுரையாளர் நியமனத்துக்கும் எவ்வித வயது வரம்பும் விதிக்கப்படாது என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment