ஒவ்வொரு நாள் மாலையும் சூரியன் வீட்டுக்குப் போகும்போது வானத்தை அண்ணாந்து பார்த்திருக்கிறீர்களா? பிரகாசிக்கும் தங்க மஞ்சள், சிவப்பு, ஆரஞ்சு, நீலம், சில நேரம் வேறு பல வண்ணங்கள் கலந்து ஒவ்வொரு நாளும் வானம் வரையும் ஓவியங்கள் எவ்வளவு அழகு!
கடந்த வாரமும் சாயங்கால வானத்தை அப்படி அண்ணாந்து பார்த்திருந்தால், ஒரு மாற்றத்தைக் கவனித்திருக்கலாம். வழக்கத்துக்கு மாறாக இரவு சீக்கிரமே வந்திருக்கும். பகல், சீக்கிரமே விடைபெற்று வீட்டுக்குப் போயிருக்கும். அதற்குக் காரணம் இருக்கிறது.
இரண்டும் சமம்
பிரபஞ்சத்தில் சூரியன்தான் எல்லாவற்றையும் இயக்குகிறது. பூமிப் பந்து ஒரு பக்கமாக, அதாவது 23.45° டிகிரி சாய்ந்த அச்சில் சூரியனைச் சுற்றிக் கொண்டிருக்கிறது. அதனால் பூமியின் ஒரு பகுதியில் அதிகச் சூரிய ஒளி படும், மறுபுறம் குறைவாகப் படும். சூரிய ஒளி படுவதைப் பொறுத்துப் பகலும் இரவும் நீண்டும், குறுகியும் அமைகின்றன.
இருந்தாலும் வருடத்துக்கு இரண்டு முறை மட்டும் இரவும் பகலும் கிட்டத்தட்ட சமமான அளவுக்கு இருக்கும். அதில் ஒரு நாள் செப்டம்பர் 22/23. மற்றொன்று மார்ச் 20. ஆண்டுதோறும் நடக்கும் முக்கிய வானியல் நிகழ்வுகளில் இவையும் ஒன்று. இந்த நாட்கள் சம இரவுபகல் நாள் (Equinox) எனப்படுகின்றன.
இந்த இரண்டு நாட்களில் மட்டுமே உலகிலுள்ள அனைத்து நாடுகளிலும் இரவும் பகலும் ஒரே அளவுக்கு இருக்கும். செப்டம்பர் 22/23க்குப் பிறகு இந்தியாவில் பகல் நேரம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துகொண்டே வரும்.
குறுகிய பகல்
பூமிப் பந்து சூரியனுக்கு எதிர்பக்கமாக அதிகமாகத் திரும்பியுள்ள நிலை ஆங்கிலத்தில் குளிர்காலத் திருப்புநிலை (Winter solstice) எனப்படுகிறது. அந்த நாள் டிசம்பர் 21/22. அன்றைக்குப் பூமிப் பந்தின் தெற்கு மூலையில் சூரியன் இருக்கும், அதனால் சூரிய ஒளி நீண்ட நேரம் தெரியாததால் ஆண்டிலேயே குறுகிய பகலாக இருக்கும்.
அதற்குப் பிறகு பகல் நேரம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கத் தொடங்கும். பிறகு மீண்டும் மார்ச் 20-ம் தேதி பகலும் இரவும் சமமாக இருக்கும்.
நீண்ட பகல்
பூமி சூரியனின் பக்கமாக அதிகமாகத் திரும்பியுள்ள நிலை ஆங்கிலத்தில் கோடை திருப்புநிலை (summer solstice) எனப்படுகிறது. அது ஜூன் 20/21-ம் தேதி வருகிறது. அன்றைக்குப் பூமிப் பந்தின் வடக்கு மூலையில் சூரியன் இருப்பதால், நீண்ட நேரம் சூரிய ஒளி தெரியும் அன்றைய தினத்தின் பகல் ஆண்டிலேயே நீண்டதாக இருக்கும்.
இப்போது தினசரி கவனித்துக் கொண்டே வந்தால், செப்டம்பர் 22/23க்குப் பிறகு பகல் குறுகிக்கொண்டே போவதைக் கவனிக்கலாம். அதுபோல அடுத்தடுத்து வரும் வானியல் நிகழ்வுகளையும் குறிச்சு வச்சுப் பாருங்க. ஒவ்வொண்ணையும் வருஷத்துக்கு ஒரு தடவைதான் பார்க்க முடியும்.
சீன, ஆஸ்திரேலியக் கொண்டாட்டம்
சராசரியாக ஒரு மணி நேரத்துக்கு 1,07,826 கி.மீ. வேகத்தில் சூரியனை பூமி சுற்றுகிறது.
# சூரிய ஒளி சூரியனில் இருந்து புறப்பட்டு பூமியை வந்தடைய 8 நிமிடம் 20 விநாடி எடுத்துக்கொள்கிறது.
# ஆங்கிலத்தில் equinox என்ற சொல், equinoxium என்ற லத்தீன் சொல்லில் இருந்து உருவானது. இதற்கு பகலும் இரவும் சமம் என்று அர்த்தம்.
# கிரேக்க நம்பிக்கைபடி, முந்தைய மாதங்களின் வெற்றி, தோல்விகளை திரும்பிப் பார்ப்பதற்கான நாள்தான் சம இரவுபகல் நாள்.
# ஆஸ்திரேலியாவில் உள்ள பழங்குடிகளுக்கு செப்டம்பர் மாத சம இரவுபகல் நாள் மிகவும் முக்கியமானது. ஏனென்றால், அதற்குப் பிறகுதான் ஆஸ்திரேலியாவில் வசந்த காலம் தொடங்கும்.
# சீனாவில் இலையுதிர் காலத்துக்கு இடையில் வரும் சம இரவுபகல் நாள் நிலா விழாவாகக் கொண்டாடப்படுகிறது. அப்போது, கோடை கால அறுவடையைக் கொண்டாடும் வகையில் தாமரை, எள், முட்டை, உலர்பழங்கள் சேர்க்கப்பட்ட மூன்கேக் செய்வது வழக்கம்.
No comments:
Post a Comment