கிழக்கிந்திய கம்பெனியின் கப்பல்களையும் வர்த்தகத்தையும் பாதுகாக்க 1613-ல் இங்கிலாந்தில் இந்தியன் மரைன் என்ற கடற்படை முதலில் உருவாக்கப்பட்டது. 1735-ல் அந்தப் படைக்கு மும்பையில் கப்பல் கட்டும் தளம் உருவாக்கப்பட்டது. அதன் பெயர் பாம்பே டாக்யார்டு. அங்கு வந்த பிறகு பாம்பே மரைன் என்று அது பெயர் மாறியது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பாம்பே மரைன், தி ராயல் இந்தியன் மரைன் ஆக மாறியது. 1950-ல் இந்தியா குடியரசான பிறகு, இந்தியக் கடற்படை என்று அழைக்கப்படலானது.
கி.பி. 1100-ல் இரும்புத் தாதுவால் செய்யப்பட்ட காந்தத்தை ஒரு கயிற்றில் தொங்கவிட்டால், அது எப்போதும் வடக்கு - தெற்காக நிற்பதைச் சீனர்கள் கண்டறிந்தனர். இந்த விஷயத்தை உள்வாங்கிக்கொண்ட இந்தியக் கடலோடிகள் மத்ஸ்ய இயந்திரம் என்ற கருவியை உருவாக்கினர். இரும்பாலான மெல்லிய காந்தத் தகடை மீன் வடிவத்தில் வெட்டி எண்ணெயில் மிதக்க விட்டிருப்பதே இந்தக் கருவி. இந்த மீன் எப்போதுமே வடக்கு தெற்கு நோக்கியே தலையையும் வாலையும் வைத்திருக்கும். பெருங்கடல்களில் கப்பலைச் செலுத்தும்போது, எந்தத் திசையில் செல்ல வேண்டும் என்பதை இந்த இயந்திரம் தெரிவிக்கும். இந்த இரண்டும்தான் கடலோடிகளின் திசைகாட்டிகள் உருவாகக் காரணமாக இருந்த முதல் கருவிகள்.
1919-ல் சிந்தியா நீராவிக் கப்பல் நிறுவனத்தை நரோத்தம் மொரார்ஜி, வால்சந்த் ஹிராசந்த் ஆகிய இருவரும் தொடங்கினர். 1919 ஏப்ரல் 5-ம் தேதி அந்த நிறுவனத்தின் முதல் கப்பலான எஸ்.எஸ். லாயல்டி, பயணிகளையும் சரக்கையும் ஏற்றிக்கொண்டு மும்பையில் இருந்து பிரிட்டனுக்குச் சென்றது. இதுவே இந்தியாவின் முதல் கப்பல் நிறுவனம்.
இந்தியாவின் முதல் நீராவிப் படகை ஊ பகுதியின் நவாபாக இருந்த காஸி உத்தின் ஹைதருக்கு 1819-ல் ஒரு ஆங்கிலேயர் கட்டி கொடுத்தார்.
பண்டையக் கால இந்தியர்கள் மிகப் பெரிய கப்பல்களை கட்டியிருக்கிறார்கள், தொலைவிலுள்ள தாய்லாந்து, சீனாவுக்கு அவற்றைச் செலுத்தி உள்ளனர். இலங்கை, சுமத்ரா, மலேசியா, கம்போடியா, ஜாவா, கடாரம் உள்ளிட்ட நாடுகளுக்கு ராஜேந்திர சோழன் போர் தொடுத்துக் கடற்படை மூலம் வெற்றியும் பெற்றுள்ளார்.
கடலில் செலுத்துவதற்காக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட முதல் நவீன கப்பலை ஜவாஹர்லால் நேரு 1948-ல் கடலில் செலுத்தித் தொடங்கிவைத்தார். ஜல உஷா என்ற அந்தக் கப்பல், நீராவியில் செல்லும் சரக்குக் கப்பல். விசாகப்பட்டினத்தில் சிந்தியா கப்பல் கட்டும் தளத்திலிருந்து அது செலுத்தப்பட்டது. இப்போது அது இந்துஸ்தான் கப்பல் தளம் என்றழைக்கப்படுகிறது.
ஹரப்பா நாகரிகத்திலேயே, அதாவது கி.மு.3,000-த்திலேயே கடல் போக்குவரத்து இருந்ததாக வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
கப்பலை பண்டைய தமிழில் நாவாய் என்றும் கலம் என்றும் கூறுவார்கள். கப்பல் கேப்டனை ‘கலபதி’ என்பார்கள்.
கேரளத்தில் தற்போது கரங்கனூர் என்றழைக்கப்படும் துறைமுகம் அந்தக் காலத்தில் முசிறி என்ற பெயரில் புகழ்பெற்றிருந்தது. கி.பி. முதலாம் நூற்றாண்டுக் காலத்திலேயே அரேபியா, கிரீஸ், ரோம் (இத்தாலி) ஆகிய நாடுகளில் இருந்து வணிகர்கள் அங்கே வந்தனர். அந்தக் காலத்தில் கிரேக்கர்களும் ரோமானியர்களும் தமிழில் யவனர்கள் எனப்பட்டனர். மிளகு, சந்தனம், நறுமணப் பொருட்கள், பட்டு உள்ளிட்ட பொருட்களைத் தங்கக் காசுகளைக் கொடுத்து அவர்கள் வாங்கிச் சென்றனர். தமிழகத்தின் பல பகுதிகளில் இன்றைக்கும் ரோமக் காசுகள் கிடைத்துவருகின்றன. அரேபியாவிலிருந்து குதிரைகள் கடல் வழியாகத்தான் இங்கே வந்தன. தென்கிழக்கு ஆசியாவில் இருந்து இட்லியும் கடல் வழியாகத்தான் வந்தது.
No comments:
Post a Comment