சமூக அந்தஸ்து, கூடவே கைநிறைய சம்பளம் போன்ற அம்சங்களால் ஐ.ஏ.எஸ். பணி நோக்கி இளைஞர்கள் ஈர்க்கப்படுகிறார்கள். பி.இ, பி.டெக். முடித்துவிட்டுத் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் லட்சத்தைத் தொடக்கூடிய அளவுக்குச் சம்பளம் வாங்கும் இளம் பொறியியல் பட்டதாரிகளும் தற்போது அதிக எண்ணிக்கையில் ஐ.ஏ.எஸ் தேர்வெழுத முன்வருகின்றனர்.
ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு முடித்தால் போதும். இதற்கான முதல்நிலை, மெயின் தேர்வுகளிலும் சரி பொது அறிவு, பொது நிர்வாகம், நாட்டு நடப்புகள், இந்திய அரசியல் அமைப்பு சட்டம் போன்ற பகுதிகளில் இருந்தே அதிகமான கேள்விகள் கேட்கப்படுகின்றன. இந்தப் பகுதிகளில் சிறந்த அறிவு பெற்றிருப்பது நேர்முகத் தேர்விலும் பெரிதும் துணைபுரியும். இதைக் கருத்தில் கொண்டுதான் சிவில் சர்வீசஸ் தேர்வு பாடத்திட்டத்தை உள்ளடக்கிய பி.ஏ. பொது நிர்வாகப் பணி (சிவில் சர்வீஸ்) என்ற புதுமையான பட்டப் படிப்பை வழங்கிறது கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம். அதன் உறுப்பு கல்லூரியில்தான் இந்தப் பட்டப் படிப்பு வழங்கப்படுகிறது. இது மகளிருக்கான கல்லூரி. குறைந்த கட்டண விடுதி வசதியும் இருக்கிறது. கல்விக்கட்டணமும் குறைவு. அரசு வழங்கும் பல்வேறு கல்வி உதவித்தொகைகளும் கிடைக்கும்.
பி.ஏ. பப்ளிக் சர்வீஸ் பட்டப் படிப்பில் 60 இடங்கள் உள்ளன. பிளஸ்-2-வில் எந்தப் பாடப் பிரிவை எடுத்துப் படித்த மாணவிகளும் இதில் சேரலாம். பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். 3 ஆண்டுக் காலத்தில் ஐ.ஏ.எஸ். தேர்வுக்கான பாடங்களைப் படித்து முடித்து விடுவதுடன் ஓர் இளங்கலைப் பட்டமும் பெற்றுவிடலாம். சிவில் சர்வீசஸ் தேர்வு மட்டுமின்றி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் குரூப்-1 தேர்வு எழுதவும் இந்தப் படிப்பு பெரிதும் உதவிகரமாக இருக்கும்.
“கிட்டத்தட்ட சர்வீசஸ் தேர்வுக்கான பாடத்திட்டம்தான் பி.ஏ. பள்ளிக் சர்வீஸ் படிப்புக்கான பாடத்திட்டம் என்பதால் எதிர்காலத்தில் ஐ.ஏஎஸ்., ஐபிஎஸ் அதிகாரி ஆக விரும்பும் மாணவிகளுக்கு இது ஓர் அருமையான படிப்பு” என்கிறார் கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியின் முதல்வர் பேராசிரியை டி.எம்.எஸ்.ஜெபராணி.
பி.ஏ. பப்ளிக் சர்வீஸ் (சிவில் சர்வீஸ்) உள்படப் பல்வேறு இளங்கலைப் பட்டப் படிப்புகளுக்கு 2014-2015-ம் கல்வி ஆண்டில் சேர அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் விண்ணப்பங்கள் வழங்கி வருகிறது. விண்ணப்ப கட்டணம் ரூ.60 (எஸ்.சி, எஸ்டி மாணவிகளுக்கு விண்ணப்பம் இலவசம். இந்தச் சலுகையைப் பெற சான்றொப்பம் பெறப்பட்ட சாதிச் சான்றிதழ் நகலைச் சமர்ப்பிக்க வேண்டும்). விண்ணப்பக் கட்டணத்தைப் ‘பதிவாளர், அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்’ என்ற பெயரில் கொடைக்கானலில் செலுத்தக்க பாரத ஸ்டேட் வங்கி டிமாண்ட் டிராப்டாகப் பல்கலைக்கழகத்தில் நேரில் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பத்தைத் தபால் மூலம் பெற, எஸ்சி, எஸ்டி மாணவிகள் ரூ. 30-க்கான டி.டி.யையும், மற்ற வகுப்பு மாணவிகள் ரூ.90-க்கான டி.டி.யையும் ‘பதிவாளர், அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம், கொடைக்கானல்’ என்ற முகவரிக்கு ஒரு கோரிக்கை கடிதத்துடன் அனுப்பிப் பெறலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மே 26-ம் தேதிக்குள் பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
அட்மிஷன் தொடர்பாகக் கூடுதல் விவரங்கள் அறிய 04542-244116, 241122 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம். மேலும், பல்கலைக்கழகத்தின் இணையதளத்தையும் www.motherteresawomenuniv.ac.in பார்க்கலாம்.
No comments:
Post a Comment