Thursday, 8 May 2014

கூடங்குளம் அணுஉலைக்கு தடையில்லை: பாதுகாப்பு விதிமுறைகள் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

கூடங்குளம் அணுமின் நிலைய பாதுகாப்பு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கடந்த ஆண்டு, கூடங்குளம் அணுமின் நிலைய பாதுகாப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றம் 15 விதிமுறைகளை வழங்கியது.
இந்த விதிமுறைகளை பின்பற்றாமல் கூடங்குளத்தில் அணுமின் நிலையம் செயல்படத் தொடங்கியிருப்பதாகவும் எனவே கூடங்குளம் அணு உலை செயல்பாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தலைமையிலான அமர்வு முன்பு நடைபெற்று வந்தது.
கடைசியாக இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, பூவுலகின் நண்பர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆஜரானார்.
அப்போது அவர், நிலநடுக்கம் போன்ற பேரிடர்கள் ஏற்படும்போது புகுஷிமாவில் நிகழ்ந்தது போன்ற பேரிடர் கூடங்குளத்திலும் நடைபெறுவதற்கு வாய்ப்புகள் மிகவும் அதிகமாக உள்ளன என வாதிட்டார். மேலும் கூடங்குளத்தில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்ய ஒரு குழுவை நீதிமன்றம் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தார்.
இதற்கு பதிலளித்த இந்திய அணுசக்தி கழகத்தின் இயக்குனர் டாக்டர் அஷோக் சவுகான், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. கூடங்குளம் திட்டத்தின் பாதுகாப்பு குறித்து அச்சம் தேவையில்லை என்று கூறினார்.
இருதரப்பு வாதத்தையும் கேட்ட உச்ச நீதிமன்றம் மனுவின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் இந்த வழக்கின் மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று வழங்கியது.
அதில்: பாதுகாப்பு தொடர்பான பெரும்பாலான வழிமுறைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறி பூவுலகின் நண்பர்கள் தொடர்ந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மேலும், ஒரு சில விதிமுறைகளை நிறைவேற்ற கால அவகாசம் வேண்டும் என்ற மத்திய அரசின் கோரிக்கையையும் உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.

No comments:

Post a Comment