Monday, 26 May 2014

மதிப்பெண்களுக்கு அப்பால்...

சுந்தருக்கு வயது 22. புத்திசாலி. பி.எஸ்.சி. பட்டப் படிப்பு முடித்திருக்கிறான் தற்போது மேற்கொண்டு படிக்க அவனுக்கு விருப்பமில்லை. வேலைக்கு விண்ணப்பித்தான்.
சாந்தியும் பி.எஸ்.சி. அவளுக்கும் மேற்கொண்டு படிக்க விருப்பமில்லை. சாந்திக்கு உடனடியாக வேலை கிடைத்துவிட்டது. சுந்தருக்குக் கிடைக்கவில்லை. இருவருக்கும் மதிப்பெண்களிலோ புத்திசாலித்தனத்திலோ பெரிய வித்தியாசம் இல்லை. ஆனால் சாந்திக்குக் கிடைத்தது சுந்தருக்குக் கிடைக்கவில்லை.
சுந்தர் படித்தான். நன்றாகப் படித்தான். ஆனால் வேறு எதையும் அவன் கற்றுக்கொள்ளவில்லை. ஆனால் சாந்தி அப்படி அல்ல. படிக்கும்போதே கணினிப் பயிற்சி முடித்தாள். கார் ஓட்டக் கற்றுக்கொண்டாள், மக்கள் தொடர்பிலும் குறுகிய காலப் பயிற்சியை முடித்தாள்.
இதுதான் இருவருக்குமிடையே வித்தியாசம். இதுதான் வேலை கிடைப்பதற்கும் வேலை கிடைக்கத் தாமதமாவதற்கும் காரணம்.
சாந்தி வேலை என்னும் உலகத்திற்குள் நுழையும்போது, அந்த உலகத்திற்குத் தேவையான திறன்களுடன் உள்ளே நுழைந்தாள். சுந்தரோ, அனுபவமற்ற பட்டதாரியாக வேலை தேடத் தொடங்கிவிட்டான். வேலைக்கான நேர்காணலில், சாந்தியின் கணினித் திறன், மக்கள் தொடர்புத் திறன் போன்றவை, அத்தகைய திறமைகள் அற்ற இன்னொரு பட்டதாரியைவிட அவளை முன்னணியில் நிறுத்தின.
நமது நாட்டில் வேலையற்ற, தகுதிக்குக் குறைவான வேலையில் உள்ள ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு இதுதான் நடக்கிறது.
திறமை வளர
அறிவை வளர்த்துக்கொள்வது என்பது வேறு, திறமையை வளர்த்துக்கொள்வது என்பது வேறு. மதிப்பெண்கள் முக்கியம்தான். ஆனால் அவை மட்டும் எல்லாவற்றையும் முடிவுசெய்துவிடுவதில்லை.
சுந்தர் வேலை என்ற உலகத்தில் நுழைந்தபோது, அது சார்ந்த சில திறன்களுக்கு முன்னால், அவன் படிப்பு ஒன்றுமில்லை என்று ஆகிவிட்டது. அவனது திறமைகள் மிகவும் குறைவு. அவனைப் போன்ற பலர், வேலை உலகத்தில் போட்டியிடத் தேவையான, கூடுதல் தகுதிகள் இல்லாமலேயே வேலை உலகத்தில் நுழைய நினைக்கிறார்கள்.
கல்லூரிகள் பாடத்தை மட்டும் சொல்லித் தருகின்றன. வேலை உலகத்திற்கான பிற திறன்களைக் கற்றுக் கொடுப்பதில்லை. பிற திறமைகள் குறைவாக இருந்தால் வேலை கிடைக்கத் தாமதமாகும். நல்ல வேலை கிடைப்பது கடினமாகும். தகுதிக்குக் குறைவான வேலையைச் செய்ய வேண்டியிருக்கும்.
வெறும் கோட்பாட்டை (தியரி) மட்டும் படிப்பது போதாது. உங்கள் அறிவைப் பயன்படுத்தக் கற்றுக்கொண்டால்தான் நல்ல வேலை கிடைக்கும். ஆகையால், நீங்கள் சேர இருக்கும் துறைசார்ந்த திறமைகளை வளர்த்துக்கொள்வதென்பது மிகவும் முக்கியம். எந்தத் துறைக்கும் பொருந்தும் சில திறமைகளை வளர்த்துக்கொள்வதும் முக்கியம்.
வேலை கொடுக்கும் முதலாளிகள், வரும் விண்ணப்பதாரர் வெறும் கல்லூரிப் படிப்புச் சான்றிதழை மட்டும் வைத்திருக்காமால், அது தவிர வேறு என்ன செய்திருக்கிறார் என்றே பார்க்கிறார்கள்.
பிற விஷயங்கள் என்பவை என்ன?
இலக்கியச் செயல்பாடுகளில் கலந்துகொள்வது, சமூக சேவை, என்.சி.சி., சாரணர் இயக்கம் என்பன போன்ற எந்தச் செயல்பாடாக இருந்தாலும் சரி. அது கூடுதல் தகுதியாக அமையும். விளையாட்டில் சற்றே ஆழமாக ஈடுபடும் ஒரு விண்ணப்பதாரர், வெறுமனே படித்துக்கொண்டிருக்கும் விண்ணப்பதாரரைவிட வேலை உலகத்தில் முன்னணியில் இருப்பார். பேச்சுத் திறன், கலைத் துறைகளில் விசேஷ ஈடுபாடு, இரண்டுக்கு மேற்பட்ட மொழிகளை அறிந்திருத்தல், புகைப்படம் எடுத்தல், புத்தகங்கள் வாசித்தல் போன்றவை பணி உலகில் கூடுதல் திறன்களாகக் கருதப்பட வாய்ப்புள்ளது. உதாரணமாக, ஒரு நிறுவனத்துக்குத் தமிழகத்தில் மட்டுமல்லாமல் உத்தரப் பிரதேசத்திலும் டெல்லியிலும் கிளைகள் இருக்கின்றன என்று வைத்துக்கொள்வோம். தமிழ், ஆங்கிலம் தவிர இந்தியும் தெரிந்த விண்ணப்பதாரருக்கு நிறுவனம் முக்கியத்துவம் கொடுக்கும் அல்லவா?
வெட்டுவது, வரைவது, குறிப்பது, ட்ரில் செய்வது, லேத் மிஷினைக் கையாள்வது போன்ற திறன்கள் இயந்திரங்கள் சார்ந்த தொழில்நுட்ப வேலைகளோடு சம்பந்தப்பட்டவை.
தட்டச்சுத் திறன், கணினித் திறன், மக்கள் தொடர்பு, அலுவலகப் பராமரிப்பு, கோப்புகளைச் சரியாக வைப்பது, மொழித் திறன், கணக்கு தொடர்பான திறன்கள் போன்றவை தொழில்நுட்பம் சாராத வேலைகளோடு தொடர்புடையவை. விண்ணப்பதாரர்கள் இந்தத் திறன்களைக் கொண்டிருந்தால், அவர்களுக்கு வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.
இப்படிப்பட்ட திறமைகளை எப்போது வளர்த்துக்கொள்ள வேண்டும்? நீங்கள் வேலைக்கு விண்ணப்பிப்பதற்குச் சற்று முன்பு அல்ல. உயர்நிலைப் பள்ளியை முடித்த கையோடு இதற்கான முயற்சிகளைத் தொடங்கிவிட வேண்டும். இது குறித்த சில யோசனைகள்:
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு ஒன்றைப் பழக்கிக்கொள்ளுங்கள். இளைஞர்கள் சிலர் தங்களுக்குப் பொழுதுபோக்கு என்று ஒன்றுமில்லை என்று சொல்லிக்கொள்கிறார்கள். பெரும்பாலானோர், படிப்பு, படிப்பு என 24 மணி நேரமும் படித்துக்கொண்டிருக்கிறார்கள். மதிப்பெண்கள் முக்கியம்தான். ஆனால் அதிக மதிப்பெண் பெறுபவர்கள் மத்தியில் தனித்து நிற்க வேண்டுமானால் சிறப்புத் திறமைகள் தேவை. வேலை கிடைப்பதற்கு மட்டுமல்ல. கிடைத்த வேலையில் சிறப்பாகச் செயல்படவும் இந்தத் திறமைகள் உதவும்.
உங்கள் விருப்பத்தை அடிப்படையாகக் கொண்டு, பொழுதுபோக்கு ஒன்றைப் பழக்கிக்கொள்ளுங்கள். அது உங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ள உதவும். உங்கள் திறன்களை வளர்க்கவும் உதவும்.
கருவிகளைக் கையாளுதல்
கருவிகளைப் பயன்படுத்தக் கற்றுக்கொள்ளுங்கள். ஸ்க்ரூ டிரைவர், ஸ்பேனர், சுத்தியல் இவை நமது அன்றாட வாழ்க்கையின் பகுதிகள். இவை எந்தச் சமயத்தில் நமக்குக் கைகொடுக்கும் என்று சொல்லவே முடியாது. ஆண்கள் மட்டுமே கருவிகளைப் பயன்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று பொதுவாக நம்பப்படுகிறது. ஆண்கள், பெண்கள் அனைவருமே உபகரணங்கள், இயந்திரங்கள், மற்றும் கருவிகளைப் பயன்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும், அது நமது வாழ்க்கையை எளிதாக்கும்.
புதிய வாய்ப்புகள்
வேலை அனுபவத்தை உருவாக்கும் வாய்ப்புகளைத் தேடுங்கள். ஒரு நிறுவனத்தில் தன்னார்வலராக வேலை பார்த்தால் வேலைக்கான அடிப்படைத் திறன்களை அது உங்களுக்கு அறிமுகப்படுத்தும். தொலைபேசியைக் கையாள்வது, அலுவலக விஷயங்கள், மற்றும் அலுவலகத்தின் அன்றாடச் செயல்பாடுகளைப் புரிந்துகொள்ளுதல் போன்றவை திறமைகளைக் கற்பதற்கான அம்சங்கள்.
நேர்காணலின்போது, ஏற்கனவே ஒரு நிறுவனத்தில் வாலன்டியராக வேலை செய்திருக்கிறேன் என்று சொன்னால் அது உங்கள் அனுபவம் குறித்த நல்லெண்ணத்தை ஏற்படுத்தும். கூடவே, நீங்கள் வேலை தொடர்பான திறனை அறிந்திருக்கிறீர்கள் என்ற செய்தியையும் வேலை தருபவர்களுக்குத் தெரிவிக்கும்.
அனுபவமே இல்லாமல் சில வேலைகள் கிடைக்காது. ஆனால் தன்னார்வலராகப் பணிபுரிந்தவர்களுக்கு அனுபவம் கிடைத்திருக்கும். அந்த அனுபவம் வேலைச் சந்தையில் நுழைய உதவும்.
இன்று இந்திய முதலாளிகள் கவர்ச்சிகரமான பட்டப் படிப்புகளைப் படித்தவர்களை மட்டும் தேடுவதில்லை. உண்மையில், பல பட்டப் படிப்புகள், வேலை உலகத்திற்குத் தேவையான திறன்களைக் கற்றுத் தருவதில்லை என்பதை முதலாளிகள் அறிந்திருக்கிறார்கள். எனவே, திறமைகளை அதிகரிக்கும் முயற்சியை இன்றே தொடங்குங்கள். புதிய கல்வி நிறுவனத்தில் சேரும்போதோ, வேலைக்கு விண்ணப்பிக்கும்போதோ அது உங்களை முன்னணியில் நிறுத்தும்.
அதிகத் திறமைகள் உங்களுக்கு இருந்தால் அது வேலை என்னும் உலகில் உள்ள தடைகளைத் தகர்த்தெறியும். மிகச் சிறந்த வேலையிலும் உங்களைக் கொண்டு போய்ச் சேர்க்கும்.

No comments:

Post a Comment