அமெரிக்காவில் நடந்த அறிவியல் கண்காட்சியில் 2 தமிழக மாணவர்கள் உட்பட 4 இந்திய மாணவர்களின் கண்டுபிடிப்புகளுக்கு விருது கிடைத்துள்ளது.
இது தொடர்பாக இந்திய அறிவியல் கழகத்தின் தலைவர் நாராயண் ஐயர் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:
இந்திய அறிவியல் கழகம் ஆண்டுதோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் அறிவியல் கண்காட்சியை நடத்திவருகிறது. இந்த கண்காட்சிகளில் இடம்பெறும் புதிய கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் சிறந்த இளம் விஞ்ஞானிகளைத் தேர்ந்தெடுத்து அமெரிக்காவில் ஐ-ஸ்வீப் என்ற அமைப்பு நடத்தும் அறிவியல் கண்காட்சிக்கு அனுப்புகிறோம். அதன்படி நம் நாட்டை சேர்ந்த 4 இளம் விஞ்ஞானிகளின் 3 புதிய கண்டுபிடிப்புகள் அமெரிக்காவில் கடந்த 5-ம் தேதி நடந்த அறிவியல் கண்காட்சியில் இடம்பெற்றது. இந்த கண்டுபிடிப்புகளுக்கு ஒரு தங்க விருதும் 2 வெள்ளி விருதுகளும் கிடைத்துள்ளன. மொத்தம் 80 நாடுகளை சேர்ந்த 400 புதிய கண்டுபிடிப்புகள் இந்த கண்காட்சியில் இடம் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் தங்க விருது பெற்றுள்ள டென்னித் ஆதித்யா, தமிழகத்தின் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர். இந்து மேல்நிலை பள்ளியில் பதினோராம் வகுப்பு படிக்கும் இவர், புதுமை தொழில்நுட்பத்தின் மூலம் வாழை இலையை ஒரு வருட காலம் வாடாமல் பசுமையாக வைக்கும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளார்.
சென்னை செட்டிநாடு வித்யாஸ்ரம் பள்ளி மாணவரான டி.அஞ்சானி கார்பன்டை- ஆக்சைடில் இருந்து பயோ-டீசல் தயாரிக்கும் முறையை கண்டுபிடித்துள்ளார். இவருக்கு வெள்ளி விருது கிடைத்துள்ளது. மேலும், குஜராத்தை சேர்ந்த மான்சி டல்சானை மற்றும் கைரவி ரட்சியா ஆகியோர் கூட்டு சேர்ந்து கழிவு பிளாஸ்டிக்கை பயன்படுத்தி செங்கல்கள் தயாரிக்கும் புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர். இதனால், இவர்களுக்கு வெள்ளி விருது வழங்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
அமெரிக்க அறிவியல் கண்காட்சியில் தங்க விருது பெற்ற மாணவர் டெனித் ஆதித்யா கூறுகையில், “நான் கண்டுபிடித்துள்ள தொழில்நுட்பத்தின் மூலம், வாழை இலை ஒரு வருடத்துக்கு பசுமை மாறாமல் இருக்கும். இதை 3 வருடங்கள் வரை பயன்படுத்தலாம். மத்திய அரசின் அனுமதியை பெற்று, இந்த கண்டுபிடிப்பை மக்கள் பயன்படுத்த வசதியாக விரிவுபடுத்தவுள்ளேன். எனது தொழில்நுட்பம் நம் நாட்டு மக்களுக்கு பயன்பெற வேண்டுமென்பதே எனது விருப்பம்’’ என்றார்.
மாணவர் டி.அஞ்சானி கூறுகை யில், “கடந்த 4 ஆண்டுகளாக இந்த ஆராய்ச்சியில் நான் ஈடுபட்டேன். அடுத்ததாக கடல்பாசி மூலம் மருந்துகளை கண்டுபிடிக்க உள்ளேன். புற்றுநோய்க்கு மருத்து கண்டுபிடிப்பதே என லட்சியம். இதற்கான பணியில் நான் தொடர்ந்து ஈடுபடவுள்ளேன்.’’ என்றார்.
அமெரிக்காவில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் இந்தியாவைச் சேர்ந்த 4 இளம் விஞ்ஞானிகளின் 3 புதிய கண்டுபிடிப்புகளுக்கு ஒரு தங்கம் உட்பட 3 விருதுகள் கிடைத்துள்ளன.
No comments:
Post a Comment