Friday, 9 May 2014

அவசியம் பார்க்க வேண்டிய 5 வீடுகள்

எப்போதுமே வீடுகளுக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. ஒரு மனிதனைப் பற்றி அவன் வெளியே கட்டமைக்கும் பிம்பங் களுக்கும் அவனுடைய தனிப்பட்ட வாழ்வுக்கும் எந்த அளவுக்கு நெருக்கம் இருக்கிறது என்பதை வெளிப்டையாக நமக்குக் காட்டுபவை அவை. இந்தப் பயணத்தில் அரசியல் தலைவர்கள் உள்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களின் வீடுகளைப் பார்ப்பதையும் ஒரு பகுதியாக வைத்திருந்தேன்.
இன்றைய அரசியல்வாதிகளை வீடுகளின் வழியே பார்க்க வேண்டும் என்றால், அவர்களுக்கு இடையே எந்த வேறுபாடும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். முதல்வர் ஜெயலலிதாவின் படாடோபமான போயஸ் கார்டன் வீட்டையும் பரந்து விரிந்த கொடநாடு எஸ்டேட்டையும் நமக்குத் தெரியும். பகுஜன் சமாஜ் கட்சித் தலைவி மாயாவதியின் பாதல்பூர் வீடு அதையும் தூக்கிச் சாப்பிடக் கூடிய மாளிகை. லக்னோ விக்ரமாதித்யா மார்கில் உள்ள சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் வீடும் மாளிகைதான். மும்பையை மிரட்டும் மஹாராஷ்டிர நவநிர்மாண் கட்சித் தலைவர் ராஜ் தாக்கரேவின் சிவாஜி பார்க் வீடு கனத்த இரும்புக் கதவுகள் அடங்கிய கான்கிரீட் சுவர்களோடு அவருடைய அச்சத்தை வெளிக்காட்டுகிறது. மும்பை, பாந்த்ரா கலா நகரில் உள்ள சிவசேனைக் கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேயின் வீடும் ஏகப்பட்ட பாதுகாப்புக்கு இடையே அதே கதியில்தான் இருக்கிறது. டெல்லி அரசியல்வாதிகள் அரசு கொடுத்திருக்கும் மாளிகைகளில் அல்லது அவர்களே உருவாக்கிக்கொண்ட மாளிகைகளில் குடியிருக்கிறார்கள்.
ஆட்சியில் இருக்கும் அரசியல்வாதிகளின் வீடுகளில் ஒரே விதிவிலக்கு மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியினுடையது. கொல்கத்தா ஹரீஷ் சாட்டர்ஜி தெருவே மிகச் சாதாரணமான ஒரு தெருதான். அங்கே உள்ள சுமாரான வீடுகளில் ஒன்றில் தன் சகோதரர்களோடு இருக்கிறார் மம்தா. வீட்டுக்கு வெளியே நான்கு போலீஸ்காரர்கள். அவ்வளவுதான் பந்தோபஸ்து. “தீதி பிரச்சாரத்துக்காக வெளியூர் போயிருக்கிறார். இரண்டு நாட்கள் தங்கினீர்கள் என்றால், ஊர் திரும்பிவிடுவார்; சந்திக்கலாம்” என்றார்கள். இதைத் தாண்டி பகிர்ந்துகொள்ள இன்றைய தலைவர்களின் வீடுகளில் ஏதும் இருப்பதாகத் தோன்றவில்லை. அதேசமயம், நம்முடைய முன்னோடிகளின் வீடுகளில் ஐந்து பேரின் வீடுகளைப் பற்றிக் கொஞ்சம் பகிர்ந்துகொள்ளலாம் என்று நினைக்கிறேன். ஏராளமானோர் வீடுகளைப் பார்த்தேன் என்றாலும் இங்கே ஒரு தலைவர், ஒரு போராளி, ஒரு படைப்பாளி, ஒரு ஆன்மிக குரு, ஒரு வழிகாட்டி ஆகியோரின் வீடுகளை மட்டும் தருகிறேன்.
தீன் மூர்த்தி பவன்
நேரு குடும்பத்தின் வீடு அலகாபாத் ஆனந்த் பவன்தான் என்றாலும், தீன் மூர்த்தி பவனுக்கு வேறு எந்த இல்லத்துக்கும் இல்லாத சிறப்பு உண்டு. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் வாழ்ந்த வீடு அது. நேரு காலமாகும் வரை இங்குதான் வாழ்ந்தார். டெல்லியின் கன்னாட்ப்ளேஸ், ஜன்பத் சாலையை உருவாக்கிய கட்டிடக்கலை நிபுணர் ராபர்ட் டோர் ரஸ்ஸலால் வடிவமைக்கப்பட்ட இந்த இல்லம் பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதிக்காகக் கட்டப்பட்டது. சுதந்திரத்துக்குப் பின் இந்தியப் பிரதமருடையதானது. இப்போது நேருவின் நினைவில்லமாக இருக்கிறது. அருமையான இந்தோ சார்சனிக் பாணிக் கட்டிடம் இது.
நேதாஜி பவன்
கொல்கத்தாவில் உள்ள நேதாஜி பவன், இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கிய நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பூர்வீக வீடு. நகரின் முக்கியமான பகுதியில் இருக்கும் இந்தப் பெரிய வீட்டில்தான் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், அவருடைய சரத் சந்திர போஸ் இருவரும் வசித்திருக்கின்றனர். 1941-ல் பெர்லினுக்குத் தப்பிச் செல்லும் முன் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருந்ததும் இங்கேதான். நேதாஜி அன்றைக்கு நீர்மூழ்கிக் கப்பல்கள் மூலம் தப்பிச் சென்ற பாதையின் வரைபடங்கள், இந்திய தேசிய ராணுவத்தின் அறிக்கைகள், வீரர்களின் புகைப்படங்கள், நேதாஜி வீரர்களுக்கு எழுதிய கடிதங்கள்… ஒருவகையில் இந்திய தேசிய ராணுவத்தின் அருங்காட்சியகம் என்றும் இதைச் சொல்லலாம். பிரிட்டிஷ் இந்தியாவின் வசதியான நவீன பாணி வங்காளிக் கட்டிடம் இது.
ஜொரசன்கோ தாகூர் பாரி
வடக்கு கொல்கத்தாவிலுள்ள ஜொரசன்கோவில் இருக்கிறது தாகூர்களின் வீடு. கவிஞர், கதாசிரியர், நாடகாசிரியர், ஓவியர் என்று பன்முக ஆளுமையாகத் திகழ்ந்த ரவீந்திரநாத் தாகூரின் பூர்வீக வீடு இது. தாகூர் இங்கேதான் பிறந்தார். இங்கேதான் தன் இளமைப் பருவத்தின் பெரும்பான்மைக் காலத்தைக் கழித்தார். பின் எங்கெங்கோ சென்று வாழ்க்கையைக் கழித்தாலும் இங்குதான் மறைந்தார். தாகூரின் படங்கள், கவிதைகள், ஓவியங்களால் நிறைந்திருக்கும் இந்த நினைவில்லத்தைச் சுற்றும்போது, தாகூரின் படைப்புகளின் ஊடே அவருடைய வாழ்வின் வெவ்வேறு காலகட்டங்களில் நுழைய முடிகிறது. வீடு என்று சொல்ல முடியாது. மாளிகை. அரண்மனை.
விவேகானந்தர் இல்லம்
கொல்கத்தாவின் குருமோகன் முகர்ஜி தெருவில் இருக்கும் விவேகானந்தர் இல்லம்தான் அவருடைய பூர்வீக வீடு. நரேந்திரனாத் தத்தா பிறந்ததும் அவர் விவேகானந்தராக உருமாறியதும் இங்குதான். விவேகானந்தரின் தந்தையின் மரணத்துக்குப் பிறகு, விவேகானந்தரின் அத்தை இந்தச் சொத்து முழுவதும் தன்னுடையது என்று வழக்குத் தொடர்ந்திருக்கிறார். இந்த வழக்கில் விவேகானந்தருக்கு ஆதரவாக இறுதித் தீர்ப்பு வந்த கொஞ்ச நாட்களில் அவர் இறந்தார். காலப்போக்கில் சிதிலமடைந்துவிட்ட இந்த வீட்டை 1962-ல் ராமகிருஷ்ணா மிஷன் தனதாக்கிக்கொண்டு, 1999-ல் சுற்றியுள்ள இடத்தையும் வாங்கிப் புனரமைத்திருக்கிறது. இதுவும் பிரிட்டிஷ் இந்தியாவின் நவீன பாணி வங்காளிக் கட்டிடத்தை ஒத்தே இருக்கிறது.
சபர்மதி ஆசிரமம்
தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பிய காந்தி, முதலில் 1915-ல் தன் ஆசிரமத்தைத் தொடங்கிய இடம் ஆமதாபாதின் கொச்ராப். விவசாயம், கால்நடை வளர்ப்பு, கதர் நெய்தல் ஆகியவற்றில் சில பரிசோதனைகளை மேற்கொள்ள விரும்பியதன் விளைவாக 1917-ல் அதை சபர்மதி ஆற்றங்கரைக்கு மாற்றினார். ஒரு சிறைக்கும் மயானத்துக்கும் இடைப்பட்ட பகுதிதான் இந்த ஆசிரமம். ஒரு சத்தியாக்கிரகி தன் வாழ்வில் எப்போதும் செல்வதற்குத் தயாராக இருக்க வேண்டிய இடங்கள் இவை இரண்டும் என்பதால், இவை இரண்டுக்கும் இடைப்பட்ட இந்தப் பகுதி தேர்ந்தெடுக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள். நாட்டு ஓடுகள் வேயப்பட்ட ஆசிரமத்தின் ஒரு பகுதியாக சின்னதாக காந்தியின் வீடு. ஏனையோர் வீடுகளுக்கும் காந்தியின் வீட்டுக்கும் இடையே முக்கியமான ஒரு வேறுபாடு இருக்கிறது. ஏனையோர் வீடுகளில் எந்தப் பகுதியில் நுழைந்தாலும் ஓர் அருங்காட்சியகத்தில் இருக்கும் உணர்வே நம்மை ஆக்கிரமிக்கிறது. காந்தியின் வீடுதான் ஒரு வீட்டில் இருக்கும் உணர்வைத் தருகிறது. எளிமைதான் முக்கியமான காரணம் என்று நினைக்கிறேன். வீட்டின் முன்பகுதியில் ஒதுக்கப்பட்டிருக்கும் ஒரு சின்ன அறை காந்தியினுடையது. ஒரு சின்ன மேஜை, சுவரில் சாய்ந்துகொள்வதற்கேற்ப ஒரு முண்டு, ஒரு ராட்டை, ஒரு ஓரமாக அவர் பயன்படுத்திய கைத்தடி - இவ்வளவுதான் அந்த அறையில் இருக்கின்றன. ஒரு மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை இங்கிருந்துதான் அந்த மனிதர் அசைத்தார் என்பதை நம்ப முடியவில்லை.
காந்தியின் கனவு இந்தியா
இந்தப் பயணத்தின் அற்புதமான செய்தி சபர்மதி ஆசிரமத்தில்தான் கிடைத்தது. ஆசிரமத்தில் காந்தி எழுதிய புத்தகங்கள் ஏராளமாகக் கிடைக்கின்றன. ஒரு புத்தகத்தை எடுத்தேன். ‘எனது கனவு இந்தியா'. காந்தி தான் கனவு காணும் இந்தியாவைப் பற்றி எழுதுகிறார்:
“இந்தியாவில் உள்ள ஒவ்வொன்றும் என்னைக் கவர்கின் றன. மிக உயர்ந்த எண்ணப்போக்கு உள்ள ஒவ்வொரு மனிதனும் விரும்பும் எல்லாமும் அதனில் நிறைந்திருக் கின்றன. இந்தியா எனக்கு போக பூமியல்ல; கர்ம பூமி…
பிற நாடுகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கடமைகளிலிருந்து இந்தியாவுக்கு விதிக்கப்பட்டுள்ள கடமைகள் வித்தியாச மானவை… வாளெடுப்பதுதான் உலகை வெல்லும் ஒரே வழி என்று இந்தியாவும் முடிவுசெய்தால், அந்தக் கணத்துக்கு இந்தியாவுக்கு வெற்றி கிடைக்கும். அதன் பிறகு என்னுடைய மனதில் இந்தியா பற்றிய பெருமை, கர்வம் ஒடுங்கிவிடும். நான் இந்தியாவுடன் இரண்டறக் கலந்திருக்கிறேன். ஏனென்றால், என்னுடையவை என்று நான் நினைப்பவையெல்லாம் நான் அவளிடமிருந்து பெற்றவையே! உலகம் அனைத்துக்கும் வழிகாட்டும் கடமை அவளுக்கு இருக்கிறது. ஐரோப்பிய நாடுகளைக் கண்மூடித்தனமாக அவள் பின்பற்றத் தேவையில்லை. இந்தியா வாளைக் கையிலெடுக்கும் நேரம்தான் என்னுடைய வாழ்க்கையின் சோதனையான காலமாக இருக்கும். அந்த நேரத்தில் நான் உண்மையைப் பேசத் தயங்க மாட்டேன் என்று நம்புகிறேன். என்னுடைய மதத்துக்கு நில எல்லைகள் கிடையாது. என்னுடைய மதத்தின் மீது எனக்கு நிரந்தர நம்பிக்கை இருப்பது உண்மை என்றால் அது இந்தியாவைக் கடந்து எல்லா இடங்களுக்கும் பரவும். அகிம்சை என்ற என்னுடைய மதத்தின் மூலம் இந்தியாவுக்குத் தொண்டாற்றவே என்னுடைய வாழ்க்கை அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது. வன்முறைதான் தன்னுடைய மதம் என்று இந்தியா முடிவெடுத்துவிட்டால் அப்போது நான் உயிரோடிருந்தால் இந்தியாவில் வசிக்க நான் விரும்ப மாட்டேன். ஒரு குழந்தை தன்னுடைய தாயின் மார்பைப் பற்றியிருத்தல்போல நானும் இந்தியாவைப் பற்றிக் கொண்டிருக்கிறேன். ஏனென்றால், அவள் தரும் ஆன்மிக ஊட்டம் எனக்கு அவசியப்படுகிறது. என்னுடைய உயர்ந்த குறிக்கோள்களுக்கு உகந்த சூழல்கள் அவளிடத்திலே நிரம்ப இருக்கின்றன. அந்த நம்பிக்கை வற்றிவிட்டால், இனியொரு புரவலர் கிடைப்பார் என்ற நம்பிக்கையே இன்றி நான் அநாதையாகிவிடுவேன்!”

No comments:

Post a Comment