தமிழக அமைச்சரவை திங்கள்கிழமை திடீரென மாற்றி அமைக்கப்பட்டது. பி.வி.ரமணா, கே.டி.பச்சைமால் மற்றும் எஸ்.தாமோதரன் ஆகியோர் அமைச்சர வையில் இருந்து நீக்கப்பட்டனர். அவர்களுக்குப் பதிலாக அக்ரி கிருஷ்ணமூர்த்தி, கோகுல இந்திரா மற்றும் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் மீண்டும் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் 3 அமைச்சர்களின் துறைகளும் மாற்றப்பட்டுள்ளன.
அமைச்சரவை மாற்றம் குறித்து திங்கள்கிழமை மாலை ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
வருவாய்த்துறை அமைச்சர் பி.வி.ரமணா, தொழிலாளர் நலத் துறை அமைச்சர் கே.டி.பச்சைமால் மற்றும் வேளாண் துறை அமைச்சர் எஸ்.தாமோதரன் ஆகியோர் அமைச்சரவை யில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களுக்குப் பதிலாக அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி (கலசப்பாக்கம் தொகுதி), எஸ்.பி.வேலுமணி (தொண்டா முத்தூர் தொகுதி) மற்றும் எஸ்.கோகுல இந்திரா (அண்ணா நகர் தொகுதி) ஆகியோரை அமைச்சரவையில் சேர்க்கக் கோரும் பரிந்துரைகளுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். முதல்வர் ஜெயலலிதாவின் பரிந்துரைப்படி புதிய அமைச்சர்களுக்கும், ஏற்கெனவே இருக்கும் அமைச்சர்களுக்கும் கீழ்க்கண்ட வாறு துறைகள் ஒதுக்கப்படுகின்றன.
அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வேளாண் துறை அமைச்சராக நியமிக்கப்படு கிறார். இவர் வேளாண் பொறியியல் தோட்டக்கலை, தரிசு நில மேம்பாடு, கரும்பு செஸ் மற்றும் கரும்பு மேம்பாடு ஆகியவற்றின் பொறுப்புகளை கவனிப்பார்.
எஸ்.பி.வேலுமணி, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சட்டத்துறை அமைச்சராக நியமிக்கப்படுகிறார். இவர் நகராட்சி நிர்வாகம், பஞ்சாயத்து மற்றும் பஞ்சாயத்து யூனியன், வறுமை ஒழிப்புத் திட்டங்கள், நகர் மற்றும் ஊரக குடிநீர் விநியோகம், சட்டம், நீதி மற்றும் சிறைத்துறை, பணியாளர் நலன் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தம் ஆகிய துறைகளை கவனித்துக் கொள்வார்.
கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சராக கோகுல இந்திரா நியமிக்கப் பட்டுள்ளார். புதிய அமைச்சர்கள் 3 பேரும் ஆளுநர் மாளிகையில் செவ்வாய்க் கிழமை (இன்று) மாலை 4.40 மணிக்கு பதவியேற்கின்றனர்.
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சராக இருக்கும் கே.பி.முனுசாமி, இனி தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருப்பார். அவர், மக்கள்தொகை, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி, செய்தித்தாள் கட்டுப்பாடு, கணக்கெடுப்பு, நகர்ப்புற மற்றும் ஊரக வேலைவாய்ப்பு ஆகிய வற்றின் பொறுப்புக்களையும் கவனிப்பார்.
பி.வி.ரமணா வகித்து வந்த வருவாய்த் துறை, அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருக்கு ஒதுக்கப்படுகிறது. மாவட்ட வருவாய் நிர்வாகம், துணை ஆட்சியர்கள், எடை மற்றும் அளவைகள் ஆகியவற்றின் பொறுப்புக்களை உதயகுமார் வகிப்பார். இவர் வகித்து வந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை, தற்போதைய கைத்தறித்துறை அமைச்சர் எஸ்.சுந்தர்ராஜுக்கு மாற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் 9-ம் தேதி தமிழக அமைச்சரவை மாற்றப்பட்டது. விளையாட்டுத் துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கம் நீக்கப்பட்டு, ஆர்.பி.உதயகுமார் சேர்க்கப்பட்டார். 5 மாதங்களுக்குப் பிறகு தற்போது மீண்டும் அமைச்சரவையில் மாற்றம் நடந்துள்ளது.
No comments:
Post a Comment