எப்போதுமே பலவித பதில்களிலிருந்து ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற வகையில்தான் சைகோமெட்ரிக் தேர்வுகள் இருக்க வேண்டும் என்பதில்லை. சில சமயம் open ended questions எனப்படும் கேள்விகளும் கேட்கப்படலாம்.
இந்த வகைக் கேள்விகளில் ஒரு நன்மை உண்டு. தேர்வாளர் சிறிதும் எதிர்பாராத கோணத்தில் நீங்கள் பதிலளித்து அவரைத் திருப்திப்படுத்த முடியும். (அல்லது “நீங்கள் அவர்கள் நிறுவனத்துக்கு வேண்டவே வேண்டாமென்று தீர்மா னிக்க வைக்கவும் முடியும்”).
நான் எழுதிய தொடர் ஒன்றில் ஒரு கேள்வி கேட்டிருந்தேன். “ஒரு பேருந்து தன் கடைசி நிறுத்தத்தை அடைந்துவிட்டது. ஓட்டுநர் உட்பட எல்லோரும் இறங்கி விட்டார்கள். ஆனால் ஒரு பயணி மட்டும் இருபது நிமிடங்களுக்குப் பிறகுதான் அந்தப் பேருந்திலிருந்து இறங்குகிறார். என்ன காரணமாக இருக்கும்?’’.
வாசகர்கள் விதவிதமாகப் பதிலளித்திருந்தார்கள். அவர்கள் அளிக்காத சில விடைக ளையும் இ ங்கே சில உதாரணங்களாகச் சேர்த்திருக்கிறேன். அவற்றைப் பார்ப்பதற்கு முன்னால் மேற்கூறிய கேள்விக்கான விடையை, முழுமையாகக் கண்களை இரண்டு நிமிடங்கள் மூடிக்கொண்டு யோசியுங்கள்.
இப்போது உங்கள் விடை களையும், பிறர் அளித்திருக்க வாய்ப்புள்ள விடைகளையும் ஒரு நிறுவனத்தின் கோணத்தில் அலசுவோமா?
“அவர் ஒரு வேளை தூங்கி இருப்பார், அவர் குடித்துவிட்டு உணர்வில்லாமல் இருப்பார்” என்பது போன்ற பதில்கள் சாதாரணமானவை. இதைத் தாண்டி உங்களால் யோசிக்க முடியவில்லை என்றோ, ஒரு பிரச்சினைக்கு ஏதோ ஒரு தீர்வை யோசித்துவிட்டால், அதைத் தாண்டி மேலும் யோசிக்க நீங்கள் தயாராக இருக்க மாட்டீர்கள் என்றோ, இதைக் கொள்ளலாம்.
“பேருந்தில் ஒரு அணுகுண்டை வைக்கத் திட்டமிட்டிருக்கும் ஒரு தீவிரவாதியாக அவன் இருக்க வேண்டும். எல்லோரும் இறங்கிய பிறகு சரியான நேரம் பார்த்து வைத்திருக்கிறான்” என்பது உங்கள் பதிலானால், உங்களை வேலைக்குத் தேர்ந்தெடுக்க வாய்ப்பு உண்டா? இல்லையா? அது எது போன்ற வேலைக்கு விண்ணப்பித்திருக்கிறீர்கள் என்ப தைப் பொறுத்தது. மனிதவளத் துறை என்றால் எல்லோரையும் எதிர்மறைச் சிந்தனையோடு பார்க்கக் கூடாது. பாதுகாப்புத் துறை என்றால் சந்தேகங்களை எழுப்பிக்கொண்டிருந்தால்தான் அவற்றைத் தடுப்பதற்கான வழிமுறைகளைச் சிந்திக்க முடியும்.
கீழே இரண்டு விதமான பதில்களை அளித்திருக்கிறேன். இரண்டு வித கோணங்களுக்கும் மனநிலைகளுக்கும் எவ்வளவு வித்தியாசம் என்பதை உங்களால் உணர்ந்துகொள்ள முடியும்.
(1) அந்தப் பயணி தன்னுடைய பொருள் எதையோ தொலைத்துவிட்டார். இருபது நிமிடங்களுக்கு அதைத் தேடிவிட்டுப் பிறகு கீழே இறங்குகிறார்.
(2) யாரோ ஒருவர் தன் விலை உயர்ந்த பொருளைப் பேருந்தில் தவற விட்டுவிட்டு இறங்கிச் சென்றுவிட்டார். பிறருக்குத் தெரியாமல் அந்தப் பொருளை எடுத்துச் செல்வதற்காக, இருபது நிமிடங்கள் காத்திருந்துவிட்டு அதை எடுத்துக்கொண்டு சத்தமில்லாமல் இறங்குகிறார் அந்தப் பய ணி.
“உங்களுக்கு நகைச்சுவை உணர்வு உண்டு என்பதைக்கூட உங்கள் விடைகள் மூலம் வெளிக்காட்ட முடியும். மேலே குறிப்பிட்ட கேள்விகளுக்குக் கீழ்க்கண்ட மாதிரிகூட விடை அளிக்கலாம் இல்லையா?’’ “வெளியே கடன்காரர் நிற்கிறார். அவர் போன பிறகு மெதுவாக இறங்குகிறார் பயணி”, “அவர் ஒரு தொலைக்காட்சி சீரியல் இயக்குநர். எதையும் மெதுவாகச் செய்துதான் அவருக்குப் பழக்கம்”.
ஒரே கேள்வியின் மூலம் ஒருவரை முழு மையாக எடைபோட முடியாதுதான் (அதற்காகத்தான் பலவித கேள்விகளும் நேர்முகமும்). ஆனால் ஒரு கேள்விக்கான விடையின் மூலம் ஓரளவு ஒருவரை எடைபோட்டு அதைப் பிற வழிகளின் மூலம் உறுதிப் படுத்திக் கொள்ள முடியும். இதற்கு சைகோமெட்ரிக் தேர்வுகள் உதவுகின்றன.
தொடர்புக்கு: aruncharanya@gmail.com
No comments:
Post a Comment