Thursday, 8 May 2014

முடிவுக்கு வருமா முல்லைப் பெரியாறு போராட்டம்?

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக விவசாயிகளுக்கு நம்பிக்கை ஒளி கொடுத்திருக்கிறது உச்ச நீதிமன்றம்.
கேரளத்தின் திருவிதாங்கூர் சமஸ்தானமும் பிரிட்டிஷ் அரசின் சென்னை மாகாண கவர்னரும் 29-10-1886-ல் எழுதிக் கொண்ட ஒப்பந்தத்தில் பிறந்ததுதான் முல்லைப் பெரியாறு அணை. 1895-ல் கட்டி முடிக்கப்பட்ட இந்த அணையின் மொத்த கொள்ளளவு 158 அடி.
அணையில் தேக்கப்படும் தண்ணீர் தமிழகத்துக்குச் சொந்தம். அணைக்குள் கிடைக்கும் கனிமங்கள் கேரளத்துக்குச் சொந்தம். அணை அமைந்துள்ள சுமார் எட்டாயிரம் ஏக்கருக்காக திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கு சென்னை மாகாண நிர்வாகம் ஆண்டுக்கு 42,963 ரூபாய் குத்தகைக் கட்டணம் செலுத்த வேண்டும். அணையில் மீன் பிடிக்கும் உரிமை குத்தகைதாரருக்கு உண்டு. அணையை பராமரிப்பது தமிழகத்தின் பொறுப்பு. அணைக்கட்டு பணிகளுக்கு தவிர, வேறு எதற்காகவும் அணைப் பகுதியில் உள்ள மரங்களை குத்தகைதாரர் வெட்டக்கூடாது. 999 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் 999 வருடங்களுக்கு குத்தகையை புதுப்பித்துக் கொள்ள குத்தகைதாரருக்கு உரிமை உண்டு.
குத்தகை சம்பந்தமாக இரு தரப்புக்கும் தாவா ஏற்பட்டால் இரண்டு நடுவர்களைக் கொண்டு தீர்வு காணலாம். இரண்டு நடுவர்களும் இருவிதமான தீர்ப்புகளை தந்தால் மூன்றாவதாக இன்னொரு நடுவரின் தீர்வை நாடலாம். இப்படி பல முக்கிய அம்சங்கள் முல்லைப் பெரியாறு ஒப்பந்தத்தில் எழுதப்பட்டுள்ளது.
1966-ம் ஆண்டு வரை இதில் எந்தச் சிக்கலும் எழவில்லை. அதுவரை அணையில் 152 அடி தண்ணீர் தேக்கப்பட்டு வந்தது. 1966-ல் கேரள அரசு, அணை ஒப்பந்தத்தில் சில திருத்தங்களை முன்வைத்தது. அணை பகுதியில் சுற்றுலா வளர்ச்சிக்காக தமிழக அரசின் அனுமதி இல்லாமலேயே கேரள அரசு படகுகளை விடலாம். மீன் பிடிக்கும் உரிமை கேரளாவுக்கு மட்டுமே உண்டு. அணை தண்ணீரை மின் உற்பத்திக்கும் தமிழக அரசு பயன்படுத்திக் கொள்ளலாம் என திருத்தங்களை கொண்டு வந்தது கேரளா.
தண்ணீருக்கு பங்கம் ஏதுமில்லை என்பதால் தமிழக அரசும் இதற்கு இசைவு கொடுத்தது. இதையடுத்து பெரியாறு நீர் மின் திட்டத்தை செயல்படுத்தி, மின் உற்பத்தியை தொடங்கியது தமிழகம். 1900-லிருந்து 1962 வரை இடையில் சில ஆண்டுகள் தவிர மற்ற ஆண்டுகளில் அணையில் 152 அடி தண்ணீர் தேக்கப்பட்டிருக்கிறது. ஆனால், 1963-லிருந்து இதுவரை நான்கு முறை மட்டுமே அணையின் நீர்மட்டம் 142 அடியை தொட்டிருக்கிறது.
1979-ல் ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய அணையான இடுக்கி அணையை கேரளா கட்டியது. அதன்பிறகுதான் முல்லைப் பெரியாறு அணைக்கு தலைவலி. மின் உற்பத்திக்காகத்தான் இடுக்கி அணையை கட்டியது கேரளா. ஆனால், எதிர்பார்த்த அளவில் மின் உற்பத்தி செய்ய அணையில் தண்ணீரை தருவிக்க முடியவில்லை. அந்த சமயத்தில்தான், முல்லைப் பெரியாறு அணையில் பழுது ஏற்பட்டுவிட்டது. ஓட்டை விழுந்து விட்டது என சிலர் திட்டமிட்டு வதந்தி பரப்பினர்.
பீர்மேடு தொகுதி எம்எல்ஏவாக இருந்த பி.சி.குரியன், சட்டமன்றத்திலேயே இதை பதிவு செய்தார். உடனே, மத்திய நீர்வள ஆணையம் நிபுணர் குழுவை அனுப்பி அணையின் உறுதியை சோதித்தது. நிபுணர் குழுவும், ‘அணையில் 136 அடி தண்ணீரை தாராளமாக தேக்கலாம். மராமத்து பணிகளை செய்துமுடித்த பிறகு 142 அடிக்கு உயர்த்தலாம்’ என அறிக்கை கொடுத்தது. இதன்படி, ரூ.17 கோடி செலவில் 1997-ல் அணையில் மராமத்து பணிகளை செய்து முடித்தது தமிழக அரசு. ஆனால், அதன்பிறகும் அணை நீர்மட்டத்தை உயர்த்த மறுத்தது கேரளா.
இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது தமிழகம். 2000-ம் ஆண்டில் இந்தப் பிரச்சினையை இரு மாநில அரசுகளும் பேசித் தீர்த்துக்கொள்ளும்படி அறிவுரை வழங்கியது உச்ச நீதிமன்றம். பேச்சுவார்த்தைகள் தோல்வியைச் சந்தித்ததால் மீண்டும் உச்ச நீதிமன்றத்தை அணுகியது தமிழகம். மீண்டும் நிபுணர் குழுவை அனுப்பியது நீதிமன்றம். ‘அணையில் 142 அடி தண்ணீரைத் தேக்கலாம்’என 2006 பிப்ரவரியில் அறிக்கை கொடுத்தது நிபுணர் குழு. அதையே தீர்ப்பாகவும் சொன்னது நீதிமன்றம்.
இதை ஏற்க மறுத்த கேரளா, 2006 மார்ச்சில் அவசரமாக சட்டமன்றத்தைக் கூட்டி, முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருப்பதால் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாமல் நிறுத்தி வைப்பதாகச் சொல்லி அணை பாதுகாப்புச் சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றியது. இதை எதிர்த்து மீண்டும் உச்ச நீதிமன்றம் சென்றது தமிழக அரசு. இதையடுத்து, அணையின் ஸ்திரத் தன்மையை சோதிக்க 2010 பிப்ரவரியில், உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையில் மூன்று பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்தது உச்ச நீதிமன்றம்.
இந்தக் குழுவில் கேரளம் தரப்பில் இடம்பெற்றிருந்த நீதிபதி தாமஸ் அணையில் 142 அடி தண்ணீரை தேக்கலாம் என தைரியமாக தனது கருத்தைப் பதிவு செய்தார். கேரளத்தின் அட்வகேட் ஜெனரல் தண்டபாணியே, முல்லைப் பெரியாறு அணை பலமாக இருப்பதாக கேரள உயர் நீதிமன்றத்தில் அஃபிடவிட் தாக்கல் செய்தார். இத்தனையையும் மீறி தனது நிலையில் பிடிவாதமாகவே இருந்தது கேரளம். முல்லைப் பெரியாறு அணையை உடைக்க வேண்டும் என கேரளத்தில் தொடர் போராட்டங்களும் நடந்தன; இன்னமும் நடந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் இந்த வழக்கை விசாரித்த ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை எழுதி இருக்கிறது. முல்லைப் பெரியாறு அணையில் 142 அடிக்கு தண்ணீரை தேக்க உத்தரவிட்டிருக்கும் நீதிமன்றம், கேரள அரசு கொண்டு வந்த அணை பாதுகாப்புச் சட்டத் திருத்தத்தையும் ரத்து செய்திருக்கிறது.
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் வசிக்கும் 92 லட்சம் மக்களின் குடிநீர் ஆதாரம், ஆறரை லட்சம் விவசாயிகளின் வாழ்வாதாரம் அனைத்தும் முல்லைப் பெரியாறு அணையை நம்பித்தான் இருக்கிறது. இந்த அணைக்கான இத்தனை வருட போராட்டத்தில் தமிழகம் இழந்தது எவ்வளவு தெரியுமா?
அணையில் முழுமையான கொள்ளளவுக்கு தண்ணீர் தேக்கி இருந்தால் 2.17 லட்சம் ஏக்கருக்கு பாசனம் கிடைத்திருக்கும். 136 அடியாக குறைந்து போனதால் இப்போது 73 ஆயிரம் ஏக்கர் மட்டுமே பாசனம் பெறுகிறது. மீதி எல்லாம் தரிசாகிக் கிடக்கிறது. 57 ஆயிரம் மெட்ரிக் டன் உணவு உற்பத்தியும் 47 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தியும் பாதிக்கப்பட்டிருக்கிறது. மேலும் 14 ஆயிரம் மெட்ரிக் டன் கால்நடை தீவன உற்பத்தியும் இதனால் 10 ஆயிரம் டன் பால் பொருள் உற்பத்தியும் பாதிக்கப்பட்டிருக்கிறது.
1.65 கோடி மனித உழைப்பு நஷ்டம், 40 லட்சம் மக்களுக்கு குடிதண்ணீர் தட்டுப்பாடு போன்றவையும் முல்லைப் பெரியாறு அணையில் தமிழகத்துக்கான உரிமை மறுக்கப்பட்டதால் ஏற்பட்ட எதிர் விளைவுகள்தான். அரசியல் சாசன அமர்வு அளித்துள்ள இந்தத் தீர்ப்பையாவது கேரள அரசு மதித்து நடக்க வேண்டும் என்பதே தமிழகத்தின் எதிர்பார்ப்பு.
அணையில் முழுமையான கொள்ளளவுக்கு தண்ணீர் தேக்கி இருந்தால் 2.17 லட்சம் ஏக்கருக்கு பாசனம் கிடைத்திருக்கும். 136 அடியாக குறைந்து போனதால் இப்போது 73 ஆயிரம் ஏக்கர் மட்டுமே பாசனம் பெறுகிறது. மீதி எல்லாம் தரிசாகிக் கிடக்கிறது. 57 ஆயிரம் மெட்ரிக் டன் உணவு உற்பத்தியும் 47 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தியும் பாதிக்கப்பட்டிருக்கிறது.

No comments:

Post a Comment