Tuesday, 20 May 2014

இப்படியும் இருந்தார்கள்...

ஆகஸ்ட் 5, 1950. அப்போது பிரிக்கப்படாத அசாம் மாநில முதல்வர் கோபிநாத் பர்தோலாய் 60-ம் வயதில் திடீரென உயிர் நீத்தார். மாநில ஆளுநர் ஜயராம்தாஸ் தௌலத்ராம் துக்கம் விசாரிக்க அவரது வீட்டிற்குச் சென்றார்.
கட்டிட வேலைகள் பாதியிலேயே நிற்கின்ற வீடு. பர்தோலாய்க்கு ஐந்து மகள்கள். நான்கு மகன்கள். மூத்த இரு மகள்களுக்குத் திருமணம் ஆகிவிட்டது. மீதமுள்ள மகள்களும் கடைசி மகனைத் தவிர மற்ற மகன்களும் பள்ளிக்கும் கல்லூரிக்கும் சென்றுகொண்டிருந்தார்கள். கடைசி மகன் இனிமேல்தான் பள்ளிக்குச் செல்ல வேண்டும். ஒரு விதவைத் தங்கையும் மற்ற மூன்று சகோதரர்களும் ஒன்றாக வசிக்கும் கூட்டுக் குடும்பம். பர்தோலாய் இறக்கும்போது அவரிடம் எந்தவிதச் சேமிப்பும் இல்லை. துக்கம் விசாரிக்க வந்த ஆளுநர் மெதுவாகத் துக்கத்தில் ஆழ்ந்திருந்த சகோதரர்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்ட தகவல் இது. அவரது இறுதிச் சடங்குகளுக்குக்கூடப் போதிய பணம் இல்லாத நிலை.
சுதந்திரப் போராட்டத்தில் முன்னணியில் இருந்தபடி ஒன்றுபட்ட அசாம் மாநிலத்தை இந்தியாவுடன் ஒன்றிணைக்கப் பாடுபட்ட மகத்தான தலைவர் அவர். அத்தகைய தலைவரின் குடும்ப நிலைதான் அவரது மறைவிற்குப் பிறகு இப்படி இருந்தது. அந்தக் குடும்பத்திற்கு ஏதாவது உதவ வேண்டுமே என்ற எண்ணத்தில் ஆளுநர் மற்ற அதிகாரிகளுடனும், அமைச்சர்களுடனும் விவாதித்தார். அதிகபட்சம் அவரது குழந்தைகளின் படிப்பிற்கு உதவித் தொகை வேண்டுமானால் அரசு வழங்க முடியும் என்று அதிகாரிகள் கூறினார்கள். சரி. அன்றாடச் செலவிற்கு அந்தக் குடும்பம் என்ன செய்யும்?
ஆளுநர் ஜயராம்தாஸ் மத்திய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேலுக்கும், பிரதமர் நேருவிற்கும் பர்தோலாய் குடும்ப நிலைமை குறித்துக் கடிதம் எழுதினார். குடும்பச் செலவைச் சமாளிக்கும் வகையில் ஓய்வூதியம் ஏதாவது கொடுக்க வகையுண்டா என்றும் அவர் வினவியிருந்தார்.
மற்ற சில மாநிலங்களில் தேச விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு உதவித்தொகை ஏற்பாடு இருக்கிறது என்றும் அதே போன்று ஏற்பாடு செய்யலாம் என்றும் உடனே தன்னால் தனிப்பட்ட முறையில் அந்தக் குடும்பத்திற்கு ரூ. 5000 கொடுக்க முடியும் என்றும் நேரு தெரிவித்தார். பட்டேலும் அசாம் மாநிலம்தான் ஓய்வூதியம் குறித்து முடிவெடுக்க வேண்டும் என்று கூறினார்.
ஆளுநர் மீண்டும் விவாதித்தார். மற்ற அமைச் சர்கள் ஓய்வூதியம் குறித்து எதிர்ப்புத் தெரிவித்தார்கள். பர்தோலாய் இறப்பதற்கு முன்பு மற்றொரு அமைச்சர் உயிர் நீத்தபோது இத்தகைய ஏற்பாடு எதுவும் செய்யப்படாத நிலையில் பர்தோலாயின் குடும்பத்திற்கு மட்டும் உதவுவது சரியாக இருக்காது என்பதுதான் அவர்களின் கருத்து.
அதிகாரிகள் தரப்பில் இருந்து ஓர் ஆலோசனை வந்தது. பர்தோலாய் நாடு விடுதலைக்கு முன்பாக அசாமின் பிரதமராகவும் பின்னர் மாநில முதல்வராகவும் இருந்தபோது அவரது மாத சம்பளமான ரூ. 2000த்தில் ரூ. 1500 மட்டுமே வாங்கிக் கொண்டு மீதத்தை அரசிடமே திருப்பிச் செலுத்தியிருந்தார். அந்த வகையில் அவருக்குச் சட்டப்படி உரிமையான தொகையாக அதுநாள் வரை சேர்ந்துள்ள தொகை ரூ 10,000 என்றும் அதை அவரது குடும்பத்திற்குக் கொடுப்பதில் சட்டப்படி எவ்விதத் தடையும் இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவ்வகையில் மாநில அரசிடமிருந்து ரூ 10,000மும், நேரு வழங்கிய ரூ 5,000மும் மட்டுமே பர்தோலாயின் குடும்பத்திற்கு வழங்கப்பட்டது. ஆளுநர் ஜயராம்தாஸ் பர்தோலாய்க்கு லோகப்ரியா (மக்கள் நேசன்) என்ற பட்டத்தையும் வழங்கினார்.
பின்குறிப்பு: விடுதலைப் போராட்டத் தியாகிகளுக்கான உதவித்தொகைத் திட்டம் 1972-ம் ஆண்டில்தான் தொடங்கப்பட்டது. கோபிநாத் பர்தோலாய்க்கு 1999-ம் ஆண்டில் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment