Thursday, 8 May 2014

திஹார் சிறைக் கைதிகள் 66 பேருக்கு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு

திஹார் சிறையில் தனியார் நிறுவனங்கள் நடத்திய வேலைவாய்ப்பு முகாமில் கைதிகள் 66 பேருக்கு வேலை கிடைத்துள்ளது. இதில், ஒரு கைதிக்கு அதிகபட்சமாக ரூ.35,000 மாத ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 31 நிறுவனங்கள் பங்கேற்ற இந்த முகாமில், வேதந்தா குழுமமும், ஐடிஇஐஎம் இந்தியா என்ற தனியார் நிறுவனமும் பெரும்பாலானவர்களுக்கு வேலை வாய்ப்பளித்துள்ளன.
இந்த முகாமில் மொத்தம் 66 கைதிகளுக்கு வேலை கிடைத்துள்ளன. இதில், ராஜூ பரஸ்நாத் என்ற கைதிக்கு ரூ.35,000 மாத ஊதியத்துடன் தாஜ் மஹால் குழுமம் வேலை வழங்க முன்வந்தது.
திஹார் சிறையில் எட்டு ஆண்டுகளாக உள்ள ராஜூ, இக்னோ பல்கலைக்கழகத்தில் சமூக பணியில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "நான் 18 வயதில் ஒரு கொலை வழக்கில் சிறைக்கு வந்தேன். நான் சிறையில் நல்லொழுக்கத்துடன் நடந்துக்கொண்டதால் என்னுடைய தண்டனைக் காலம் குறைக்கப்பட்டது. இங்கிருந்தே என்னுடைய பட்டப்படிப்பையும் முடித்தேன். தற்போது எனக்கு வேலையும் கிடைத்துள்ளது. நிச்சயமாக, நான் என் நிறுவனத்திற்கு விசுவாசமாக இருப்பேன்" என்றார் நெகிழ்ச்சியுடன்.
வேலை கிடைத்துள்ள பெரும்பாலான கைதிகளின் தண்டனைக் காலம் விரைவில் நிறைவடைய உள்ளதாகவும், தண்டனைக் காலம் முடிந்தவுடன் வேலையில் அமர்த்தப்படுவார்கள் எனவும் சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
படிப்பு, நல்லொழுக்கம், திறமை ஆகியவற்றை கருத்தில்கொண்டே இந்த 66 கைதிகளுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதில், பெண் கைதிகள் யாரும் இடம்பெறவில்லை.
இதுகுறித்து சிறை அதிகாரி விமலா மெஹரா கூறுகையில், "வேலைவாய்ப்பு கிடைத்துள்ள அனைவரும் நல்ல வாழ்வு பெற வாழ்த்துகிறேன். சிறையிலுள்ள பிற கைதிகள் நல்லொழுக்கத்தையும் அமைதியும் கடைபிடிக்க இந்தச் செய்தியை பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன்" என்றார்.

No comments:

Post a Comment