Friday, 9 May 2014

கட்சிகளின் செலவுக்குக் கடிவாளம் இல்லையா?

ஒரு நல்ல மக்களாட்சியின் முக்கியமான அம்சங்களுள் ஒன்று சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள். மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான தேர்தல்கள் சுதந்திரமானவையாக மட்டும் இருப்பது போதாது என்பதால்தான் நியாயமானவையாகவும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. நியாயமான தேர்தல்கள் என்பதன் முக்கியமான அம்சங்களுள் ஒன்று, தேர்தல் பிரச்சாரங்களுக்காகச் செய்யும் செலவுக்கு வரம்புகள் விதிப்பது.
இப்போது இந்தியாவில் வேட்பாளர்கள் தங்கள் தொகுதிகளில் பிரச்சாரத்துக்காகச் செலவிடும் தொகைக்கு வரம்பிருக்கிறது. நாடாளுமன்றத் தொகுதி யைப் பொறுத்தவரை கோவா, நாகாலாந்து போன்ற சிறிய மாநிலங்களில் இது ரூ.54 லட்சமாகவும் உத்தரப் பிரதேசம், பிஹார், தமிழ்நாடு போன்ற பெரிய மாநிலங்களில் இது ரூ.70 லட்சமாகவும் நிர்ணயிக்கப் பட்டிருக்கிறது. சட்டமன்றத் தொகுதியைப் பொறுத்த வரை சிறிய மாநிலங்களுக்கு ரூ.20 லட்சமாகவும் பெரிய மாநிலங்களுக்கு ரூ.28 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், பொதுத் தேர்தல்களில் ஓர் அரசியல் கட்சி தனது நாடு தழுவிய பிரச்சாரத்துக்காக எவ்வளவு பணம் செலவிடலாம் என்பதற்கு எந்த வரம்பும் கிடையாது. இந்த முரண்பாடு எவ்வளவு விரைவில் நீக்கப்படுகிறதோ அவ்வளவுக்கு நல்லது என்பதை 2014 பொதுத் தேர்தல் காட்டுகிறது.
மோடிக்கு எங்கிருந்து வருகிறது நிதி?
2009 பொதுத் தேர்தலில் அகில இந்திய அளவில் காங்கிரஸ் ரூ.380 கோடியும் பா.ஜ.க. ரூ.448 கோடியும் செலவிட்டதாகத் தேர்தல் ஆணையத்திடம் கணக்குக் காட்டியிருக்கின்றன. ஆனால், உண்மையான தொகை இதை விட அதிகமாக இருக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. இந்த முறை தனது தேர்தல் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் காங்கிரஸ் கட்சி திண்டாடுவதாகச் செய்திகள் வெளியாகியிருக்கும் நிலையில், பா.ஜ.க. காட்டில் நிதிமழை பொழிகிறது. 2004 மக்களவைத் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் செலவிட்ட தொகை சுமார் ரூ.1,300 கோடி என்று தேர்தல் ஆணையத்தின் இணையதளம் குறிப்பிடுகிறது. ஆக, இந்த முறை மோடி தனது பிரச்சாரத்துக்காகச் செலவிடுவதாகக் கூறப்படும் தொகை, 2004 பொதுத் தேர்தல் நடத்த செலவிடப்பட்ட தொகைக்குச் சற்றொப்ப நான்கு மடங்கு அதிகம். இவ்வளவு பெரிய நிதி மோடிக்கு எங்கிருந்து வந்தது?
நிதிமூலம்
இடதுசாரிக் கட்சிகள் மற்றும் ஆம் ஆத்மி கட்சியைத் தவிர்த்து, மற்ற அனைத்துக் கட்சிகளும் தங்களுக்கான நிதியின் பெரும் பகுதியைப் பணக்காரர்களிடமிருந்தே பெறுகின்றன. குறிப்பாக, பெருநிறுவனங்களிடமிருந்து. இடதுசாரிகள் மற்றும் ஆ.ஆ.க. தாங்கள் யாரிடமிருந்து எவ்வளவு நிதிபெறுகிறோம் என்பதற்கான கணக்கு களை வெளிப்படையாக வைத்திருக்கின்றன. ஆனால், காங்கிரஸ், பா.ஜ.க., மற்றும் தி.மு.க., அ.தி.மு.க., சிவசேனா, சமாஜ்வாதி போன்ற மாநிலக் கட்சிகள் தங்களது நிதியாதாரங்கள்குறித்து வெளிப்படையாக இருப்பதில்லை. இவர்களது நிதியாதாரங்களின் பெரும்பகுதி பெருமுதலாளிகள் மற்றும் பெருநிறுவனங் களிடமிருந்து வருவதே இதற்குக் காரணம். ஒரு தனி மனிதர் எந்தக் கட்சிக்கு நிதி தருகிறார் என்பதிலிருந்து அவரது அரசியல் அடையாளத்தை நாம் அறிந்துகொள்ளலாம் என்றால், ஓர் அரசியல் கட்சி யார் யாரிடமிருந்து எவ்வளவு நிதி பெறுகிறது என்பதிலிருந்து அதன் வர்க்க அடையாளத்தை அறிந்துகொள்ளலாம். இதன் காரணமாகவே காங்கிரஸ், பா.ஜ.க. உட்பட எந்த முதலாளித்துவக் கட்சியும் தாங்கள் பெறும் நிதிகுறித்த தகவல்களை வெளிப்படையாகத் தெரிவிப்பதில்லை. ரிஷிமூலத்தையும் நதிமூலத்தையும் மட்டுமல்ல, நிதிமூலத்தையும் பார்க்கக் கூடாது என்பது இந்தக் கட்சிகளின் கோட்பாடு.
இது அமெரிக்க மாடல்
வேட்பாளருக்காகட்டும், அரசியல் கட்சிக்காகட்டும் தேர்தல் பிரச்சாரத்துக்காகச் செலவிடப்படும் தொகைக்கு வரம்பு விதிப்பது கருத்துச் சுதந்திரத்துக்குக் கட்டுப்பாடு விதிப்பதாகாதா? ஒரு வகையில் அப்படித்தான் என்றது அமெரிக்க உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு. அந்தத் தீர்ப்பை அமெரிக்க உச்ச நீதிமன்றம் வழங்கிய 2010, ஜனவரி 21-ம் தேதியை “அமெரிக்க மக்களாட்சி வரலாற்றில் ஒரு கருப்பு நாள்” என்கிறார் மொழியியல் மேதையும் சர்வதேச அரசியல் அறிஞருமான நோம் சோம்ஸ்கி. 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பெருநிறுவனங்களின் நிதி வலிமை உச்சத்தை அடைந்தபோது, அவை தேர்தல் பிரச்சாரத்துக்காக அளிக்கும் நிதிக்கு வரம்பு விதிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்ந்த அமெரிக்க நாடாளுமன்றம் அவ்வாறே செய்தது. ஆனால், இந்த வரம்பு, கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானது என்று கூறி அமெரிக்க உச்ச நீதிமன்றம் 2010-ல் ரத்துசெய்தது. இதன்படி, இனி ஒரு பெருநிறுவனமோ அல்லது தொழிற்சங்கமோ தனக்கு வேண்டிய வேட்பாளருக்காக அல்லது கட்சிக்காக விளம்பரம் செய்ய எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவிடலாம். அதே போன்று தனக்கு வேண்டாத வேட்பாளருக்கு அல்லது கட்சிக்கு எதிரான பிரச்சாரத்துக்காக எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவிடலாம். இந்தத் தீர்ப்பின் மூலம் அமெரிக்க அரசியலை 19-ம் நூற்றாண்டில் நிலவிய கொள்ளைக்கார முதலாளிகளின் (ராபர் பேரன்) காலகட்டத்துக்குக் கொண்டுசென்றிருக்கிறது உச்ச நீதிமன்றம் என்றும் இது அவமானகரமான தீர்ப்பு என்றும் கடுமையாக விமர்சித்தது ‘நியூயார்க் டைம்ஸ்’ நாளிதழின் தலையங்கம். பெருநிறுவனங்களைப் போலவே தொழிற்சங்கங்களும் எவ்வளவு வேண்டுமானாலும் செலவழிக்கலாம் என்ற உரிமையைப் பெற்றிருப்பது கோடீஸ்வரர்களைப் போலவே ஏழைகளும் ஐந்து நட்சத்திர விடுதிகளில் தங்கிக்கொள்ளலாம் என்ற உரிமையைப் பெற்றிருப்பதைப் போன்றது. பயன்படுத்தப்பட முடியாத உரிமை. இந்தத் தீர்ப்பை வழங்கிய 9 நீதிபதிகளைக் கொண்ட பெஞ்சில் நான்கு நீதிபதிகள் முரண்பட்டனர். அவர்களுள் ஒருவர் ‘‘இந்தத் தீர்ப்பு மக்களாட்சிக்கு அச்சுறுத்தலாக அமைவதுடன் நீதித் துறைக்கும் பாதகமான விளைவை உண்டாக்கும் என்று அஞ்சுகிறேன்’’ என்று குறிப்பிட்டார்.
பெருநிறுவனங்களின் தயவு
ஒரு கட்சிக்காக எவ்வளவு தொண்டர்கள் வேண்டுமானாலும் களத்தில் இறங்கி வீதிவீதியாக, வீடூவீடாகச் சென்று பிரச்சாரம் செய்யலாம் என்கிறபோது, ஊடகங்களில் விளம்பரம் செய்வதற்கும், தலைவர்களின் பிரச்சாரப் பயணங்களுக்காகவும் செலவிடப்படும் தொகைக்கு ஏன் வரம்பு விதிக்கப்பட வேண்டும்? அரசியலில், தேர்தலில் குடிமக்கள் ஒவ்வொருவரும் நேரடியாகப் பங்குகொள்வது என்பது விரும்பத் தகுந்தது மட்டுமல்ல, ஒரு நல்ல மக்களாட்சிக்கு அடிப்படையானதும் அவசியமானதும்கூட. ஆனால், அமெரிக்க உச்ச நீதிமன்றத்தைப் போல பெருநிறு வனங்களைத் தனிமனிதர்களாகக் கருதுவது பெரும் தவறு. பெருநிறுவனங்களுக்கு இத்தகைய உரிமையை வழங்குவது என்பது அரசியல் அதிகாரத்தை அவற்றுக்குத் தாரைவார்த்துக் கொடுப்பதற்குச் சமம்.
ஒரு கட்சி, தனது பிரச்சாரத்துக்காக, விளம்பரத்துக்காக வரம்பின்றிச் செலவிட முடியும் எனில், எந்தக் கட்சி செல்வந் தர்களின் மற்றும் பெருநிறுவனங்களின் ஆதரவை அதிக மாகப் பெற்றிருக்கிறதோ அது வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு பல மடங்கு அதிகரிக்கிறது. இதன் விளைவாக, கட்சிகளும் தங்கள் கொள்கைகளை அதற்கேற்பத் தீர்மானிக்கும். ஆக, தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படுபவர் கள் மக்கள் பிரதிநிதிகளாக இல்லாது மக்கள்தொகையில் ஒரு சதவீதம்கூட இல்லாத செல்வந்தர்களின் மற்றும் பெருநிறுவனங்களின் பிரதிநிதிகளாக இருப்பார்கள். இப்போதே இந்தியாவில் ஏறக்குறைய அப்படித்தான் இருக்கிறது. நிலைமை மோசமாகக் கூடாது என்றால், தேர்தல் பிரச்சாரத்துக்காக அரசியல் கட்சிகள் செலவிடும் பணத்துக்கு வரம்பு விதிப்பது மிகவும் அவசியம்.
க. திருநாவுக்கரசு, சமூக-அரசியல் விமர்சகர், தொடர்புக்கு: kthiru1968@gmail.com

No comments:

Post a Comment