என்னிடம் அதிகமாகக் கேட்கப்படும் கேள்வி இது. மட்டுமல்ல; மின்னஞ்சல்களிலும் கிட்டத்தட்ட டாப் 3 கேள்விகளில் இது ஒன்று. அதனால் இதை இந்த வாரம் பார்க்கலாம்:
“இண்டர்வியூவில் வேலை அனுபவம் இருக்கான்னு பாக்கறாங்க. வேலை கொடுத்தா தானே அனுபவம் வரும். எல்லாரும் அனுபவம் கொண்ட ஆட்கள்தான் வேணும்னா, எங்கள மாதிரி ஃப்ரெஷெர்ஸ் என்ன செய்வது?”
நியாயம்தானே? என் நண்பர் சொல்லுவார்: “முன் அனுபவம் தேவைப்படாத ஒரே இடம் திருமணம்தான்!”
அனுபவம் அனுபவம் என்று கேட்டு நல்ல ஆட்களை இழந்து விடுகிறோமோ?
மனிதவளத் துறையின் நிஜங்கள் என்ன?
அனுபவமுள்ள ஆட்கள் தேடுவதற்குக் காரணம் பயிற்சி கொடுத்துப் புதிய ஆட்களைத் தயார் செய்யப் பல சமயங்களில் நேரமோ, சூழ் நிலையோ இருக்காது. சற்று அதிகச் சம்பளம் கொடுத்தாலும் தனக்குத் தேவையான ஆட்களை உடனடியாகப் பெற்று அவர்களை உடனே பங்களிக்கச் செய்வதுதான் நிறுவனங்களின் நோக்கமும்.
ஒரு நபர் பயிற்சி பெற்று வருங்காலத்தில் எப்படிப் பங்களிப்பார் என்று கணிப்பதும் கடினம். அதற்குப் பதில் ஏற்கனவே பயிற்சி பெற்று, திறமையாகப் பணியாற்றும் ஆட்களைப் போட்டி யாளர்களிடமிருந்து பறிப்பது சுலபம்.
இதில் இன்னொரு உண்மையும் உண்டு. நாம் பாடுபட்டுப் பயிற்சி கொடுத்து அவர்களைப் பங்களிக்க வைக்கும் நேரத்தில் அவர்கள் அதிகச் சம்பளத்திற்குப் போட்டியாளர்களிடம் தாவலாம். அப்போது இதுவரை செய்த பயிற்சி மூலதனங்கள் முழுவதும் வீண். நாம் வேர் பிடிக்கும் காலம் முதல் காய் காய்க்கும் வரை வேலை செய்தால், எதிராளி பழுக்கும்போது தட்டிப் பறித்துப் போனால்? அதனால் பெரிய கம்பெனிகள் என்றுமே அனுபவசாலிகளுக்குத்தான் முதல் முன்னுரிமை தரும்.
ஆனால் வருங்காலத் தேவைக்கு, அல்லது புதிய திட்டத்திற்கு, அல்லது சந்தையில் அந்த அளவு அனுபவம் உள்ள ஆட்கள் கிடைக்க முடியாது என்கிற போது தான் புதியவர்களை நாடுவார்கள். பயிற்சிக் காலம், ஆய்வுக் காலமும்கூட. கற்றுக் கொள்ளாதவர்களையும், பங்களிக்காதவர் களையும் தொடக்க காலத்திலேயே களை எடுப்பதும் சுலபம். இதனால்தான் மொத்த விலை காய்கறிக் கடையில் அள்ளுவது போல புதியவர்களை கேம்பஸில் அள்ளுகிறார்கள். இதனால்தான் ஐ.டி. கம்பனிகள் பெரிய பெரிய பயிற்சி மையங்கள் அமைக்கின்றன. பயிற்சிகூட ஒரு இறுதித் தேர்வு போலத்தான்.
பின் என்ன பிரச்சினை? புதியவர்களைப் பணி அமர்த்துதலில் வளாகத் தேர்வின் பங்கு மிகச் சிறியது என்பதுதான் உண்மை.
அதனால்தான் எங்கே சென்றாலும் அனுபவம் இல்லை என்று கூறி நிராகரிக்கப்படுவது இயல்பாக நடக்கிறது.
அனுபவசாலிகளுக்கு விலை அதிகம். அவர்களின் போட்டியாளர் மதிப்பும் அதிகம். அவர்களைத் தக்கவைத்துக் கொள் வதற்கும் அதிக முதலீடுகளும் உழைப்பும் தேவைப் படும்.
மனிதவளத் துறையின் கவனம் என்றுமே அனுபவம் மிக்கப் பணியாளர்களைப் பராமரிப்பதிலேயே செலவிடப்படுகிறது.
இன்று பயிற்சியின் தேவையையும் புதியவர்களின் மதிப்பையும் நிறுவனங்கள் மெல்லப் புரிந்து அதற்கான செயல்பாடுகளைச் செய்யத் தொடங்கிவிட்டன.
சரி, என்ன செய்யலாம்?
முதலில், படிக்கும் காலத்தில் ஏதாவது ஒரு பகுதி நேர வேலை பார்த்தல் உதவும். அது உங்கள் துறை சார்ந்து இருத்தல் முக்கியம். அது சிறிய அனுபவமாக இருந்தாலும் இரண்டு விஷயங்களை உறுதி செய்யும். உங்களுக்கு வேலை செய்யும் திறமை உள்ளது என்பதைக் காட்டும். கண்டிப்பாக மற்ற புதியவர்களைவிட நீங்கள் சற்று அதிகம் தெரிந்தவர் என்பதை நம்பவைக்கும். இதனால் நாளை செல்ல வேண்டிய வேலைக்கு இன்றே பகுதி நேரப் பணி அனுபவம் கொள்ளுதல் நல்லது.
இரண்டாவதாக, நேரடித் தொடர்பில்லாவிட்டாலும் நீங்கள் செய்த மற்ற பணிகளைக் காட்டுங்கள். அது தந்த பாடங் களைச் சொல்லுங்கள். இதையும் உங்களால் செய்ய முடியும் என்று நம்பவையுங்கள். மற்ற பணியில் சிறப்பாகச் செய்து நீங்கள் பெற்ற சான்றிதழ்கள், பரிந்துரைகள் இவற்றை எடுத்துச் செல்லுங்கள்.
இந்த அனுபவம் சார்ந்த கேள்வியை ஒரு கட்டாயக் கேள்வியாக நினைத்து அதன் பதிலையும் அதற்கான ஆவணங்களயும் தயாராக எடுத்துச் செல்லுங்கள்.
மூன்றாவதாக, உங்களிடம் எந்தப் பணி அனுபவமும் பகுதி நேர அனுபவமும் இல்லாத நிலையில் இந்த வேலைக்குத் தேவைப்படும் திறன்கள் உங்களிடம் உள்ளன எனப் புரியவையுங்கள். உதாரணத்திற்கு அது ஒரு விற்பனை சார்ந்த வேலை என்றால் உங்களிடம் நல்ல பேச்சுக் கலை, விடா முயற்சி, பேரம் பேசும் திறன், ’ எதிராளியை நம்பவைக்கும் சாதுர்யம் யாவும் உள்ளன என்று விவரமாகச் சொல்லுங்கள்.
கடைசியாக நீங்கள் உணர்த்த வேண்டியது உங்களின் தயார் நிலையை. “வாய்ப்பு கொடுங்கள். சம்பளம் இல்லாமல்கூட வேலை செய்கிறேன். என்னை நிரூபிக்கிறேன்!”. உங்கள் தன்னம்பிக்கைதான் நேர்காணல் எடுப்பவரை முடிவு எடுக்க வைக்கும்.
தொழில் மாறியோ புது வேலைக்கோ செல்லும்போது, இந்த ‘அனுபவம்’ பற்றிய குறைபாடு நடுத்தர வயதினருக்கும் வரலாம். அனுபவம் என்பது யார் வேண்டுமானாலும் தேடிப் பெறக்கூடியது. ஆனால் அதற்கான விலையை நீங்கள் கொடுத்தாக வேண்டும்.
சரி, நீங்கள் ஒரு அனுபவம் இல்லாத ஆளை ஏற்றுக் கொள்வீர்களா?
இப்படித்தான் ஒருவர் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டு, முதல்முறையாக அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள இருந்தார். பயத்தில் சர்வ நாடியும் ஒடுங்கிப் போயிருந்தவரை டாக்டர் தேற்றினார்:
“முதல் ஆபரேஷன்னு பயப்படாதீங்க. ஒண்ணும் ஆகாது. தைரியமா இருங்க! இப்ப நான் எப்படித் தைரியமா இருக்கேன்? எனக்கும் இதுதானே நான் பண்ற முதல் ஆபரேஷன்!”
நாயகன் ஓர் அசந்தர்ப்ப சூழ்நிலையில் காவல்துறைக் கண்காணிப்பில் இருந்து வெளியே வந்து நேரே இண்டர்வியூவிற்கு வர வேண்டிய சூழ்நிலை. உடையும் கலைந்து சுண்ணாம்புக் கறைகளுடன் அவசர அவசரமாக ஓடி நுழைகிறார்.
பேனலில் உள்ள பலரும் இவரை நம்பிக்கை இல்லாமல் பார்க்கின்றனர். இவர் தகுதிகளையும் மற்ற பணி அனுபவத்தையும் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் கேள்விகள் கேட்கப்படுகின்றன. அப்போது நாயகன் சொல்லும் ஒரு வசனம் அவருக்கு அந்த வாய்ப்பைப் பெற்றுத்தருகிறது.
“எனக்குத் தெரியாதுன்னா தெரியாதுன்னு சொல்லுவேன். ஆனா அதைத் தெரிஞ்சுக்கணும்னா தலையை அடகு வச்சாவது எப்படியாவது அதைக் கத்துப்பேன். இதுதான் தகுதி!”
No comments:
Post a Comment