Tuesday, 20 May 2014

ஆட்சி மாற்றத்தால் 12 ஆளுநர்களுக்கு ஆபத்து: முட்டுக்கட்டையாக நிற்கும் உச்ச நீதிமன்ற உத்தரவு

மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட உள்ளதால் சிவராஜ் பாட்டீல், பரத்வாஜ், ஷீலா தீட்சித் உள்ளிட்ட 12 மாநில ஆளுநர்களின் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதற்கு உச்ச நீதிமன்ற உத்தரவு முட்டுக்கட்டையாக உள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 336 இடங்களைப் பிடித்து ஆட்சியைக் கைப்பற்றி உள்ளது. ஆட்சி மாற்றம் ஏற்படும்போது, தங்களுக்கு ஏற்ப ஆளுநர்களை நியமிப்பது நடைமுறை.
இந்த மரபில் புதிய அரசும் 12 மாநில ஆளுநர்களின் பட்டியலை தயாரித்துள்ளது. இதில் கர்நாடகா வில் முந்தைய பாஜக ஆட்சிக்கு அதிக இடையூறு ஏற்படுத்தியதால் பரத்வாஜ் பெயர் முதலில் இடம்பெற்றுள்ளது. பஞ்சாப் மாநில ஆளுநர் சிவராஜ் பாட்டீல் அடுத்த இடத்தில் உள்ளார்.
கடந்த 2004-ல் ஆட்சி மாற்றம் நடந்தபோது, பாஜக அரசால் நிய மிக்கப்பட்ட நான்கு ஆளுநர்களை நீக்க உள்துறை அமைச்சர் என்ற முறையில் அதிக அக்கறை எடுத்த வர் சிவராஜ் பாட்டீல். தற்போது, அவரே அந்த மரபில் பதவியிழக்கும் நிலையில் உள்ளார்.
அடுத்த இடத்தில் குஜராத் மாநில ஆளுநர் கமலா பெனிவல் உள்ளார். இவரது பதவிக்காலம் வரும் நவம்பரில் முடிகிறது. இருந்தாலும், லோக் ஆயுக்தா அமைத்தல் உள்ளிட்ட பல விவ காரங்களில் நரேந்திர மோடிக்கு நேரடியாக தொந்தரவு கொடுத்தவர் என்ற முறையில் இவரது பெயர் இடம்பெற்றுள்ளது.
கேரள - ஷீலா தீட்சித், ஹரியாணா - ஜகன்னாத் பகாடியா, ஒடிசா - எஸ்.சி.ஜமீர், ராஜஸ்தான் - மார்கரெட் ஆல்வா, மத்திய பிரதேசம் - ராம் நரேஷ் யாதவ், தமிழகம் - ரோசய்யா, ஜார்க்கண்ட் - சையது அகமது, பிஹார் - டி.ஒய்.பாட்டில், உத்தரகாண்ட் - ஆசிஷ் குரேஷி ஆகியோரும் நீக்கப்பட உள்ள ஆளுநர்களின் பட்டியலில் உள்ளனர்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பு முட்டுக்கட்டை
ஆனால், புதிதாக அமையும் அரசு இதற்கு முந்தைய அரசுகள் எடுத்த நடவடிக்கையைப் போல், எளிதில் ஆளுநர்களை நீக்க முடியாதபடி உச்ச நீதிமன்றத் தீர்ப்பு முட்டுக்கட்டையாக உள்ளது. கடந்த 2004-ல் உத்தர பிரதேசம், குஜராத், ஹரியாணா, கோவா ஆளுநர்கள் மாற்றப்பட்டபோது, அதை எதிர்த்து பி.பி.சிங்கால் என்பவர் தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்தது.
அப்போதைய தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் எஸ்.எச்.கபாடியா, ஆர்.வி.ரவீந்திரன், பி.சுதர்சன ரெட்டி, பி.சதாசிவம் அடங்கிய அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்பில், "அரசியல் சாசன சட்டப் பிரிவு 156(1)ன் கீழ், ஆளுநர்களை நீக்க குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உண்டு. அதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை.
இருந்தாலும் மத்தியில் ஆட்சி மாற்றம், மத்திய அரசின் கொள்கைகளுக்கு இணக்கமாக இல்லாதது, மத்திய அரசு ஆளுநர் மீது நம்பிக்கை இழத்தல் ஆகியவற்றை காரணம் காட்டி ஆளுநரை நீக்க முடியாது" என்று உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவு வெளிவந்த பின் நடக்கும் முதல் ஆட்சி மாற்றம் என்பதால், இந்த உத்தரவுக்கு இணங்க புதிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
எனவே, இந்த உத்தரவையும் கணக்கில் கொண்டு ஆளுநர்கள் தாங்களே முன்வந்து ராஜினாமா செய்யும் வகையில் அவர்களுக்கு புதிய அரசு நெருக்கடி தரும் என்று கூறப்படுகிறது.
தார்மீக அடிப்படையில் பதவி விலக வேண்டும்
சிபிஐ-க்கு தன்னிச்சை அதிகாரம் தருவது, ஹவாலா ஊழல் உள்ளிட்ட பல்வேறு பொதுநல வழக்குகளைத் தொடர்ந்த வினீத் நாராயண் கூறியதாவது: ஆட்சி மாற்றத்தால் ஆளுநர்களை நீக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், தன்னிச்சையாக நீக்க முடியாது. இருந்தாலும், ஆளுநர்கள் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் பாலமாக இருப்பவர்கள். அவர்கள் மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பது சுமூகமான ஆட்சிக்கு அவசியம். எனவே, தார்மீக அடிப்படையில் கடந்த ஆட்சியில் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் தாங்களே பதவி விலக வேண்டும் என்பதே என் கருத்து. இவ்வாறு அவர் கூறினார்

No comments:

Post a Comment