இந்தியாவின் முக்கிய விவசாய விஞ்ஞானியான பெஞ்சமின் பியாரி பால்1906-ம் ஆண்டு மே 26-ல் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள முகுந்த்பூரில் பிறந்தார். சிறுவயதில் அவர் பர்மாவில் தனது நாட்களைக் கழித்தார். பள்ளியில் படித்தபோதும் கல்லூரிக் காலத்திலும் அநேகப் பரிசுகளைப் பியாரி பால்வாரிக் குவித்துள்ளார்; கல்வி உதவித் தொகைகளும் அவருக்குக் கிடைத்துள்ளன. அவரது தந்தை மருத்துவராக இருந்தார். அவர் தனது ஆர்வம் காரணமாக ஓய்வு நேரத்தைத் தோட்டத்தில் செலவிடுவார். பூச்செடிகளை வளர்ப்பதும், காய்கறிகளைப் பயிரிடுவதும் அவரது பொழுதுபோக்கு. எனவே சிறுவயதிலேயே தந்தை மூலமாகச் செடி, கொடிகள் உள்ளிட்ட தாவர வகைகள் பியாரி பாலுக்கு அறிமுகமாயின.
பியாரி பாலின் தந்தை, தோட்டவேலையில் சோர்வடையும்போது பாலைத் தோட்டத்தைக் கவனித்துக்கொள்ளும்படி கோருவார். பியாரி பாலும் அதை விருப்பத்துடன் நிறைவேற்றிவந்தார். வெறுமனே தோட்டத்தைக் கவனிப்பதுடன் நில்லாமல் தாவரங்கள் குறித்த தனது அறிவையும் புத்தகங்கள் மூலம் பியாரி பால்வளர்த்துக்கொண்டார். இதனால் ஆயுள் முழுவதும் தாவரங்கள் பியாரி பாலுக்கு உற்ற தோழனாக விளங்கின. பியாரி பால்தனது இளங்கலை, முதுகலைப் பட்டங்களை ரங்கூன் பல்கலைக்கழகத்தில் பெற்றுள்ளார். 1929-ல் கோதுமை தொடர்பான ஆராய்ச்சிக்காக அவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்குச் சென்று பிஎச்டி பட்டம் பெற்று பர்மாவுக்குத் திரும்பினார்.
1933-ல் புதுடெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் அவருக்கு ஆய்வுப் பணி கிடைத்தது. இந்திய விடுதலைக்கு முன்னர் இந்தியாவில் அதிகமாக ஆராய்ச்சி நடந்ததில்லை என்கிறார்கள். பயிர்கள் எல்லாம் நோய்களுக்கு இரையாயின. கோதுமைப் பயிரைப் பூஞ்சை நோய் தாக்கியதால் அப்பயிர் பெருவாரியாக அழிவுற்றது. கோதுமை அதிக விளைச்சலைக் கொடுக்க முடியாமல் வதங்கியது. இதைக் கண்ட பியாரி பால்புது வகைக் கோதுமைப் பயிரைக் கண்டறிய முனைந்தார்.
என்பி 700, 800 வகைக் கோதுமைகளை அவர் உருவாக்கினார். இவை குறிப்பிட்ட ஒரு பூஞ்சை நோயைத் தான் முறியடித்தது. ஆனால் 1954-ல் அவர் என்பி 809 ரகக் கோதுமையைக் கண்டறிந்த பின்னர்தான் இந்த முயற்சியில் அவருக்கு முழு வெற்றி கிடைத்தது. இந்த ரகம் கோதுமையைத் தாக்கும் மூன்று விதப் பூஞ்சை நோய்களையும் எதிர்த்து நின்று மகசூலை அள்ளிக் கொடுத்தது. இந்தியக் கோதுமை உற்பத்தியில் அவரது பங்களிப்பு முக்கியமானது. உலகம் முழுவதும் அவரது கண்டுபிடிப்புக்கு வெகுவான பாராட்டுக் கிடைத்தது.
1965-ல் பியாரி பால்இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்தின் (Indian Council of Agricultural Research - ICAR) தலைமை இயக்குநரானார். அவர், சுமார் 40 வகைப்பட்ட ரோஜா ரகங்களையும் உருவாக்கியுள்ளார். ரோஜாச் செடிகள் தொடர்பாக அநேகப் புத்தகங்களையும் எழுதியுள்ளார். 1987-ல் இந்திய அரசு அவருக்கு பத்ம விபூஷன் விருதளித்துக் கௌரவித்தது. 1989-ம் ஆண்டு செப்டம்பர் 14 அன்று அவர் காலமானார்.
No comments:
Post a Comment