குட்டிப் பெண் அஞ்சனாவை அம்மா மழலையர் பள்ளி ஒன்றுக்கு அழைத்துச் சென்றிருந்தார். அவளை அங்கே சேர்க்கலாமா என்று பார்ப்பதற்காக அழைத்துச் சென்றார்.
வாசலிலிருந்து உள்ளே எட்டிப் பார்த்த அஞ்சனாவுக்கு ஒரே ஆச்சரியம். வித விதமான பொம்மை கள், விளையாட்டுப் பொருள்கள், க்ரையான் பென்சில்கள், ஸ்கெட்ச் பேனாக்கள், வண்ணங்கள், ஊஞ்சல், சறுக்கு மரம், சீசா பலகை, வரைவதற்கான பலகை, வாட்டர் பாட்டில்கள் என்று பார்க்கப் பார்க்கப் பரவசமாக இருந்தது.
“செருப்பைக் கழட்டிட்டு உள்ள வா” என்றார் அம்மா.
அஞ்சனா செருப்பைக் கழற்றும்போது கவனித்தாள். வாசலில் போட்டிருந்த கோலம் தாறுமாறாகக் கலைந்திருந்தது.
உள்ளே நுழைந்தவள் அம்மாவின் துப்பட்டாவைப் பிடித்து இழுத்து, “அம்மா, கோலத்தை யாரோ கலச்சிருக்காங்க” என்றாள்.
அம்மா அவளைப் பார்த்துச் சிரித்தார். அஞ்சனாவின் கண்ணில் இன்னொரு விஷயம் பட்டது. ஒரு பொம்மை உடைந்திருந்தது. “இந்தப் பொம்மையை யாரு உடைச்சது?” என்று கேட்டாள்.
அதைக் கேட்டுக்கொண்டே வந்த சாவித்திரி டீச்சர் அவளைப் பார்த்துச் சிரித்தார். “இந்த ஸ்கூல்ல பொம்மயை உடைச்சா யாரும் திட்ட மாட்டாங்க” என்றார்.
அஞ்சனா கேட்டது என்ன, டீச்சர் சொன்னது என்ன? அவள் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல் டீச்சர் வேறு ஏதோ சொல்கிறாரே என்கிறீர்களா?
டீச்சர் சரியாகத்தான் பதில் சொன்னார். அஞ்சனாவுக்கு, பொம்மையை யார் உடைத்தது என்பது முக்கியமல்ல. உடைத்தால் திட்டு அல்லது உதை கிடைக்குமோ என்பதுதான் அந்தக் குழந்தையின் கவலை. அதைப் புரிந்துகொண்டு டீச்சர் பதில் சொல்லியிருக்கிறார்.
சாவித்திரி டீச்சரின் இந்தத் திறமை மனிதர்களைப் புரிந்துகொண்டு செயல்படும் திறமை. பிறரது நுட்ப மான உணர்வுகளைத் துல்லியமாக உணர்வதே இதன் அடிப்படை.
சாவித்திரி டீச்சரைப் போன்றவர் கள் பிறரது உணர்வுகளையும் மனநிலைகளையும் நன்கு புரிந்துகொள்வார்கள். ஒருவர் என்ன செய்கிறார் என்பதை மட்டுமில்லாமல் ஏன் செய்கிறார் என்பதையும் இவர்கள் யோசிப்பார்கள். என்ன கேட்கிறார் என்பதுடன் ஏன் கேட்கிறார் என்பதையும் சிந்திப்பார்கள்.
ஒவ்வொரு மனிதரின் நடத்தையையும் பல காரணிகள் தீர்மானிக்கின்றன. அவர்கள் சுபாவம், பின்னணி, பழக்கம், அப்போதைய மனநிலை, சுயநலம், பொதுநலம், அச்சம், தயக்கம், துணிச்சல் எனப் பல காரணிகள் ஒவ்வொரு நடவடிக்கைக்குப் பின்னாலும் உள்ளன. மனித நடத் தையைத் தீர்மானிக்கும் அம்சங்கள் இவை. இவற்றைக் குறித்த விழிப்புணர்வும் அக்கறையும் யாருக்கு இருக்கிறதோ அவரால் நிகழ்வுகளை அவற்றின் பின்னணி யோடு புரிந்துகொள்ள முடியும்.
மனித உணர்வுகளையும் தேவைகளையும் புரிந்து கொள்பவர்கள் மனித நடத்தைக்குப் பின்னால் உள்ள காரணங்களைத் தர்க்கபூர்வமாக அறியக் கூடியவர்களாக இருப்பார்கள். அந்த நடத்தையில் மாற்றம் ஏற்படுத்தும் திறமையும் அவர்களுக்கு இருக்கும்.
மனித வளம்
19 வயதாகும் பார்த்திபனுக்குத் தனித் திறமை எதுவும் இல்லை. ஆனால் அவனால் பிறரது உணர்வு களைப் புரிந்துகொள்ள முடிகிறது. யாரைப் பற்றியும் உடனே எந்த முடிவுக்கும் வராமல் கொஞ்சம் ஆழமாக யோசிக்கும் பழக்கம் இருக்கிறது. ஆனால், இதற்கு ஏற்ற தொழில் எதுவும் தனக்குக் கிடைக்காது என்று அவன் நினைக்கிறான்.
இந்தியாவில் இன்று இது போன்ற வேலைகள் நிறைய உருவாகி யுள்ளன என்பது அவனுக்குத் தெரியவில்லை. மனிதர்களுடன் உறவாடும் தொழிலுக்குப் பிறரது உணர்வுகளையும் சிந்தனை முறைகளையும் புரிந்துகொள்ளும் தன்மை வேண்டும். தனி நபர்களிடையே காணப்படும் வித்தியாசங்களைப் புரிந்துகொண்டு அதற்கு ஏற்ப அவர்களிடம் நடந்துகொள்ளும் திறமை வேண்டும்.
தொழிலைத் தேர்ந்தெடுக்கும் போது தங்களிடமுள்ள இதுபோன்ற திறமைகளைப் பலரும் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. இன்றைய காலகட்டத்தில் மனித வளம், மனித உறவுகள் ஆகியவை மிகவும் உயர்வாக மதிக்கப்படுகின்றன. தொழிற்சாலைகளில் இயந்திரம் ஒழுங்காக இருக்கிறதா என்று மட்டும் பார்ப்பதில்லை. இயந்திரத்தை இயக்கும் மனிதர் நன்றாக இருக்கிறாரா என்பதையும் பார்ப்பதே நவீன அணுகுமுறை.
தொழில்கள்
கைக்குழந்தை மற்றும் குழந்தை களில் தொடங்கி, இளைஞர்கள், நடுத்தர வயதுடையோர், முதியோர், ஊழியர், நிர்வாகிகள், விளையாட்டு வீரர்கள், உடல் ஊனமுற்றோர், நோயாளிகள் ஆகியோர் மத்தியில் வேலை பார்ப்பதுவரையிலும் மனித வளம் / உறவுகள் சார்ந்த தொழில்கள் நிறைய இருக்கின்றன. மனநலம் பாதிக்கப்பட்டு உணர்வுபூர்வமான கொந்தளிப்புக்கு ஆளானவர்களுக்காக மனநல மருத்துவர்கள் பலவிதமான சிகிச்சைகளை அளிக்கிறார்கள். இது தவிர, குழந்தைகள் நலன், கல்வி, தொழில் துறை ஆகியவற்றில் கவனம் செலுத்தும் உளவியல் பிரிவுகளும் உள்ளன.
சமூக சேவை:
சமுதாயத்திற்கு நன்மை செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் செய்யப்படும் பணிகளும் மனித உறவுகள் தொடர்பான தொழில்களில் அடங்கும். இப்போதெல்லாம் சமூக நல ஊழியர்கள் பட்ட மேற்படிப்புப் படித்தவர்களாக இருக்கிறார்கள். மனித இனத்தின் பிரச்சினைகளைக் கையாளும் திறன் இவர்களுக்கு இருக்கிறது. பள்ளி, மருத்துவமனை, தொழிற்கூடம், அலுவலகம், சிறைச்சாலைகள் என்று பல இடங்களிலும் இவர்களது பணிகள் தேவைப்படுகின்றன.
மக்கள் தொடர்பு அதிகாரி:
ஒரு நிறுவனம் அல்லது அமைப்புக்கும் அதனுடன் தொடர்புகொண்ட மக்களுக்கும் இடையே பாலமாக இவர்கள் செயல்படுகிறார்கள். வர்த்தக நிறுவனங்கள், பல்கலைக் கழகங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள், அரசுத் துறைகள், பல்வேறு கல்வி மற்றும் பொது நிறுவனங்கள் ஆகியவற்றில் இவர்களது பணி தேவைப்படுகிறது.
விருந்தோம்பல் துறை:
வீட்டை விட்டு வெளியே வந்து தங்கும் மக்களுக்கு வேண்டிய வசதிகளைச் செய்துதர வேண்டியிருக்கிறது. தங்கும் விடுதிகள், சுற்றுலாத் துறை, விமானப் போக்குவரத்துச் சேவை ஆகியவை இதில் அடங்கும்.
மக்களோடு சுமுகமாக உறவாடும் தொழில்கள் இப்படிப் பல துறைகளைத் தழுவியபடி விரிந்து பரவியிருக்கின்றன. ஆசிரியப் பணி, நிர்வாகம், செயலர் பணி, விற்பனை, சிறப்புக் கல்வி போன்றவையும் மக்கள் தொடர்பை அடிப்படையாகக் கொண்டவைதாம்.
நீங்கள் எப்படிப்பட்டவர்? இதுபோன்ற தொழில் உங்களுக்குப் பொருத்தமானதாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா? உங்களைச் சுற்றியுள்ள மனிதர்களின் உணர்வுகள், தேவைகள் ஆகியவை பற்றி உங்களுக்கு அக்கறையும் கவனமும் இருக்கின்றனவா? உங்களுக்கான தொழில் வாய்ப்புகள் நிறைய உள்ளன.
தங்கள் இதயங்களில் சக மனிதருக்கும் இடம் உண்டு என்று சொல்பவர்களுக்கு எண்ணற்ற வேலைகள் காத்திருக்கின்றன.
No comments:
Post a Comment