Thursday, 8 May 2014

கறுப்பு பண விவகாரம்: கண்காணிப்பு வளையத்தில் 100 நிறுவனங்கள்

வரி ஏய்ப்பு செய்து சுவிஸ் வங்கிகளில் பணத்தை பதுக்கி வைத்திருக்கும் நிறுவனங்கள் மற்றும் நபர்களின் பட்டியலை இந்தியா கேட்டிருந்தது. இந்த நிலைமையில் பங்குச்சந்தையில் செயல்பட்டு வரும் நிறுவனங்கள் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.
வெளிநாட்டில் இருக்கும் பணத்தை பங்குச்சந்தை வழியாக இந்தியாவுக்கு கொண்டுவரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக 700 ஸ்விஸ் வங்கி கணக்குகள் ஆராயப்படுகின்றன. இதில் 10 முதல் 15 பட்டியலிடப்பட்ட இந்திய நிறுவனங்கள், இதில் சில புளூசிப் நிறுவனங்களும் இருக்கலாம் எனத் தெரிகிறது.
இந்த நிறுவனங்கள் மற்றும் அந்நிறுவனங்களின் வாடிக்கையாளர்களின் கணக்குகள் கண்காணிக்கப்படுவதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ‘இந்த நிறுவனங்கள், கறுப்புப் பணத்தை ஐரோப்பிய வங்கிகளிடமிருந்து பல்வேறு முதலீட்டு வழிகளில் இந்திய பங்குச்சந்தைக்குள் கொண்டு வர முயற்சிக்கலாம் என சந்தேகிக்கிறோம்.
இந்தப் பட்டியலில் சில சர்வதேச வங்கிகளும் உள்ளன. வங்கியின் நிர்வாகத்துக்கு இந்த விஷயம் தெரியாமல் இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. சில உயரதிகாரிகள் தங்களது வாடிக்கையாளர்களின் நலனுக்காக இந்த வேலையில் ஈடுபடுகின்றனர்’ என அந்த அதிகாரி தெரிவித்தார்.
மேலும், ஸ்விஸ் வங்கிகளில் இருக்கும் பணத்தை சந்தேகம் ஏற்படாத சிங்கப்பூர், துபை உள்ளிட்ட நாடுகளில் இருக்கும் வங்கிகளுக்கு மாற்றுவதற்கு தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இந்த வங்கியாளர்கள் ஆலோசனை கூறுவதாகவும் அவர் தெரிவித்தார்.மொரிஷியஸ், சைப்ரஸ் உள்ளிட்ட நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு பணம் வருவதுதான் பிரபலமான வழியாக இருந்தது. ஆனால், இந்த நாடுகளில் ஏற்கெனவே கண்காணிப்பு வளையத்தை இறுக்கியதால் இந்த வழியை அவர்கள் தேர்ந்தெடுத்துள்ளதாகத் தெரிகிறது.
அரசாங்கத்தின் தகவல்படி மொரிஷியஸ் நாட்டிலிருந்து வரும் நேரடி அந்நிய முதலீடு வேகமாக குறைந்திருக்கிறது. இந்த சமயத்தில் பட்டியலிடப்பட்டிருக்கும் நிறுவனம், சம்பந்தபட்ட வங்கிகள் குறித்த தகவல்களை இப்போதைக்கு வெளியிட்டால், அது ஆரம்பகட்டத்தில் இருக்கும் விசாரணையை அழித்துவிடும் ஆபத்து இருக்கிறது. எனவே, அத்தகவல்கள் வெளியிடப்படவில்லை.
கறுப்புப் பண விவகாரத்தில் ஆரம்பத்திலிருந்து சுவிட்ஸர்லாந்து எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் பிரான்ஸ், ஹெச்.எஸ்.பி.சி. வங்கியில் இருக்கும் பட்டியலை நமக்கு தந்தது.

No comments:

Post a Comment