ரத்ததானத்தில் தமிழகம் தன்னிறைவு அடைந்திருப்பதாக தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் தெரிவித்துள்ளது.
விபத்துகளைத் தடுக்க முடியாமல் தவித்து வருகிறோம். நோயால் உயிர் இழப்போரைவிட விபத்துகளால் உயிர் இழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
விபத்தில் படுகாயம் அடை வோர் முதலில் சந்திப்பது ரத்த இழப்பைத்தான். மேலும் தற்போது அறிவியல் வளர்ச்சி காரணமாக ரத்த அணுக்கள் பிரிக்கப்பட்டு டெங்கு மற்றும் புற்று நோயால் பாதிக்கப்பட்டோருக்கு அளிக்கப்பட்டு வருகிறது. மேற்கூறிய அனைவருக்கும் முதல் தேவையாக இருப்பது ரத்தம் தான். அறிவியல் வளர்ச்சியால் வியத்தகு சாதனைகளைப் படைத்த மனிதன் இன்றுவரை செயற்கையாக ரத்தத்தை உண்டாக்க முடியவில்லை. அதனால் ஒருவர் உடலில் இருந்து எடுத்து மற்றவர்களுக்கு ரத்தத்தை பயன்படுத்த வேண்டியுள்ளது. முதலில் பணத்திற்கு ரத்தம் விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதன் பிறகு ரத்த தானம் செய்வது உருவானது. இதன் முக்கியத்துவத்தை அறிந்த உலக சுகாதார நிறுவனம் கடந்த 2004-ம் ஆண்டு ஜூன் 14-ம் தேதி முதல் உலக ரத்த தானம் செய்வோர் தினத்தை அறிவித்து ரத்த தானம் குறித்து ஆண்டுதோறும் ஒரு வாசகத்துடன் கொண்டாடி வருகிறது. கடந்த ஆண்டு `ரத்த தானம் செய்து பயனாளிக்கு வாழ்க்கையைப் பரிசாகத் தாருங்கள்’ என்ற வாசகத்தை அறிவித்தது. இந்த ஆண்டு `தாய்மார்களைப் பாதுகாக்க பாதுகாப்பான ரத்தம் வழங்குவோம்’ என்ற வாசகத்தை அறிவித்துள்ளது. மேலும் 2020-ம் ஆண்டு உலகம் முழுவதும் 100 சதவீத ரத்தம் தன்னார்வ மற்றும் கட்டணம் பெறாத நபர்கள் மூலமாக பெறும் வகையில் உலக சுகாதார நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
கடந்த 2011-12-ம் ஆண்டில் இந்திய மாநிலங்களில் தமிழகத்தில் தன்னார்வ ரத்ததானம் 99 சதவீதமாக முதலிடத்தில் இருந்தது. இந்த தகவலை தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு கழகம் (நேக்கோ) வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் ரத்த தானம் தன்னிறைவு பெற்றுள்ளதா? தன்னார்வ ரத்த தானம் எந்த நிலையில் உள்ளது என்று தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் தன்னார்வ ரத்ததான பிரிவு ஆலோசகர் டி.சம்பத்திடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
தற்போது தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளுக்குத் தேவையான ரத்தம் தட்டுப்பாடின்றி தன்னார்வ ரத்த தானம் மூலம் கிடைத்து வருகிறது. ரத்த தானத்தில் தமிழகம் தன்னிறைவு அடைந்துள்ளது. 2011-12 நிதியாண்டில் 6.50 லட்சம் யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டது. இது 2012-13-ல் 7.5 லட்சமாகவும், 2013-14 ஆண்டில் 8 லட்சமாகவும் உயர்ந் துள்ளது. தமிழகம் தன்னார்வ ரத்த தானத்தில் கடந்த 3 ஆண்டுகளாக 99 சதவீதத்தை தக்கவைத்து வருகிறது. ரத்த தானம் செய்வோர் ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையில் ரத்த தானம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்” என்றார் அவர்.
No comments:
Post a Comment