Friday, 2 May 2014

உழைக்கும் மக்கள் யாவரும்...

தொழிற்சாலைகள் என்ற நவீன உற்பத்தி முறைக்குள் மனிதர்கள் வேலை செய்ய வைக்கப்பட்டபோது, ஒரு நாளைக்கு 20 மணி நேரம் கூட அவர்கள் வேலை செய்யும்படியான சூழல் ஏற்பட்டது. குழந்தைகள், பெண்கள் என்று உரிமைகள் எதுவும் தனியாகப் பிரித்துப் பார்க்கக்கூடிய காலம் இல்லை அது. எல்லோரும் கசக்கிப் பிழியப்பட்டனர். 10 மணி நேரம்தான் வேலை செய்வோம் என்று முதலில் எதிர்ப்பு ஆரம்பித்தது. பல போராட்டங்களுக்குப் பிறகு, 8 மணி நேர வேலை என அவர்களின் கோரிக்கை உயர்ந்தது.
கடுமையான போராட்டங்களின் விளைவால், அமெரிக்காவில் 1856 முதல் சில இடங்களில் 8 மணி நேர வேலை அளிக்கப்பட்டது. ஆனாலும், அனைவருக்கும் அந்த உரிமை கிடைக்கும் வகையில் சட்டமாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை கார்ல் மார்க்ஸ் தலைமையிலான சர்வதேசத் தொழிலாளர் இயக்கம் எழுப்பியது. 1867-ல் தான் வெளியிட்ட மூலதனம் நூலின் முதல் தொகுதியில் 8 மணி நேர வேலையை மார்க்ஸ் விவாதித்துள்ளார்.
1886 மே 4-ம் தேதி அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடந்த மோதல்கள், தொழிலாளர்கள் படுகொலைக்குப் பிறகு, 8 மணி நேர வேலையை அறிவிக்க வேண்டிய நெருக்கடி தீவிரமானது. 8 மணி நேர வேலை நேர உரிமையை அனுபவிக்கிற தொழிலாளர்களின் எண்ணிக்கை படிப்படியாக விரிவடைந்தது.
1916-ல் அமெரிக்க ரயில்வே தொழிலாளர்களுக்கு 8 மணி நேர வேலை எனச் சட்டம் இயற்றப்பட்டது.1938-ல் அமெரிக்கா வாரத்துக்கு 44 மணி நேர வேலையை (சராசரியாக 8 மணி நேரத்துக்கும் குறைவாக) சட்டப்படியான வேலை நேரமாக அறிவித்தது. இவ்வாறு நியாயமான வேலை நேரத்தை அனுபவிக்கிற தொழிலாளர்களின் எண்ணிக்கை படிப்படியாக விரிவடைந்துவந்துள்ளது. 1914-ல் அமெரிக்க ஃபோர்டு மோட்டார் கம்பெனி 8 மணி நேர வேலையை அறிவித்தது.
இந்தியாவில் 8 மணி நேரம்
1923-ல் சென்னையில் தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் சிங்காரவேலர் நீதிமன்றம் அருகிலும், திருவல்லிக்கேணியிலும் மே தின நிகழ்ச்சிகளை நடத்தி, 8 மணி நேர வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வெளியிட் டார். கம்யூனிஸ்ட் தலைவர் வி. சுப்பையா புதுச்சேரியில் 8 மணி நேர வேலைக்காக நடத்திய போராட்டத்தால், 1936 ஜூலை 30-ல் 12 ஜவுளித் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். அதன் தொடர்ச்சியாக புதுச்சேரியில் 8 மணி நேர வேலைக்கான சட்டத்தை ஃபிரான்ஸ் இயற்றியது. இந்தியாவில் 1948 முதல் சட்டரீதியாக 8 மணி நேர வேலை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலை நாடுகளில் அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே இந்தியாவின் டாடா ஸ்டீல் நிறுவனம் 1912-ல் தனது தொழிலாளர்களுக்குத் தானாக முன்வந்து 8 மணிநேர வேலையை அளித்ததை நல்லெண்ணச் செயலாகவே பார்க்க வேண்டும்.
இன்றைய மேற்கத்திய தொழிலாளர் வர்க்கம் 8 மணி நேர வேலை கோரிக்கையைத் தாண்டி சில துறைகளில் 6 மணி நேர வேலையையும் அனுபவிக்கிறது. அது தொடர்பான சமூகப் பாதுகாப்புச் சட்டங்களும் வளர்ச்சியடைந்துள்ளன. ஆனால், தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளிலோ நேரம் காலம் பார்க்காமல் உழைத்தாக வேண்டிய வகையில் பழைய கால வேலை நேரங்கள் எட்டிப்பார்க்கவும் செய்கின்றன.
அமைப்புசாராத் தொழிலாளர்கள்
இந்தியா ஏறத்தாழ 49 கோடி தொழிலாளர்களைக் கொண்டிருக்கிறது. சீனாவுக்கு அடுத்தபடியாக உலகிலேயே அதிகமாகத் தொழிலாளர்கள் இந்தியாவில் உள்ளனர். ஒவ்வொரு வருடமும் 50 லட்சம் தொழிலாளர்கள் அதிகரிக்கின்றனர். அவர்களில் 94% பேர் அமைப்புசாராத் தொழில்களில் தான் வேலை செய்கிறார்கள். அரசு ஊழியர்களாக ஒரு கோடியே 70 லட்சம் பேர் உள்ளனர். அவர்களையும் சேர்த்து ஏறத்தாழ இரண்டு கோடியே 70 லட்சம் பேர்தான் ஒழுங்கமைக்கப்பட்ட, அமைப்பு சார்ந்த தொழில்களில் உள்ளனர். அவர்கள்தான் பெரும்பாலும் 8 மணி நேர வேலையை அனுபவிக்கின்றனர் என்று சொல்லலாம். மற்ற 47 கோடித் தொழிலாளர்களில் பெரும்பாலானோருக்கு 8 மணி நேர வேலை என்பது இன்னமும் கனவாகவே இருக்கிறது.
இந்தியாவில் பெரும்பாலும் விவசாயம் சார்ந்த பணிகளில்தான் அமைப்புசாராத் தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களைத் தவிர்த்து, வேலைக்காக இடம்பெயர்ந்து செல்லும் தொழிலாளர்களாக மூன்று கோடிப் பேர் இருப்பதாக அறியப்பட்டுள்ளது. அவர்களில் மத்தியக் கிழக்கு நாடுகளில் 40 லட்சம் பேர் வரை பணியாற்றுகின்றனர். பெரும்பாலும் கட்டிடப் பணிகளை அவர்கள் அங்கு செய்கின்றனர். அந்த நாடுகளில் தொழிலாளர்களுக்கான உரிமைகள் மிகவும் குறைவு. உள்நாட்டுக்குள்ளேயே வேலைக்காக இடம்பெயர்பவர்கள் 42 லட்சம் பேர் எனக் கணிக்கப் பட்டுள்ளது. இவர்களுக்காக இயற்றப்பட்ட சட்டங்கள் பெயரளவில்தான் இருக்கின்றன.
வேலைப் பாதுகாப்பு எதுவும் இல்லாத ஒப்பந்தத் தொழிலாளர்களாக மூன்று கோடியே 60 லட்சம் இருப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 8 மணி நேர வேலை நேரம் உள்ளிட்ட எந்த ஒரு உரிமையையும் இவர்கள் அனுபவிப்பதில்லை. ஒப்பந்தத் தொழிலாளர் முறையே ஒழிக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரைகள் ஒரு பக்கம் இருந்தாலும், அவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கவும் செய்கிறது.
இந்தியாவில் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைத் தொழிலாளர்கள் ஒரு கோடியே 26 லட்சம் பேர்; அவர்களில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் ஆபத்தான தொழில்களில் இருப்பதாகத் தெரிகிறது. குழந்தைகளை வேலைக்கு வைப்பது சட்டப்படி தடைசெய்யப்பட்டிருந்தாலும்கூட நடைமுறையில் அது இயல்பாக இருப்பதுதான் வேதனை.
நவீன அடிமைத்தனம்
அடிமைத்தனத்தின் இன்னமும் நீடிக்கிற வடிவமாக, கையால் மலம் அள்ளும் வேலையை ஐ.நா. சபை அறிவித்துள்ளது. இந்தியாவில் இந்த வேலையில் ஈடுபட்டிருப்பவர்கள் ஏறத்தாழ ஒரு லட்சம் என்று அரசு சொல்கிறது. ஆனால், ஐ.நா-வின் சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு, இந்தியாவில் ஏழு லட்சம் பேர் இந்த இழிவில் சிக்கிக்கொண்டிருப்பதாகச் சொல்கிறது. இவர்களில் பெரும்பாலானவர்கள் தலித் பெண்கள்தான்.
இந்தியாவில் 50 லட்சம் பேர் கொத்தடிமை நிலையில் இருப்பதாக சேவை அமைப்புகளின் கணக்குகள் தெரிவிக் கின்றன. அவர்களில் தலித் மக்களும் பழங்குடிகளும் அதிகமாக உள்ளனர் என்று மத்திய திட்டக்குழுவின் கொள்கை உருவாக்கக் குழுக்களின் தலைவராக இருந்த பி.எஸ். கிருஷ்ணன் கூறுகிறார். இந்தியாவில் இந்தத் தொழி லாளி வர்க்கம் சாதிகளாக உடைந்து நொறுங்கியுள்ளது. சுகாதாரப் பணி போன்ற சேவைப் பணிகளில் தாழ்த்தப்பட்ட மக்கள்தான் அதிகம் ஈடுபடுகின்றனர் என்பது இந்த உண்மையை எடுத்துக்காட்டும். இந்தியத் தொழிலாளிகளில் மிகச் சிறுபான்மையோருக்குத்தான் 8 மணி நேர வேலை உள்ளிட்ட உரிமைகள் கிடைக்கின் றன என்ற நிலைமையில், அவையும் கூடப் புதிய பொருளா தாரக் கொள்கை, தாராளமயமாதல், உலகமயமாதல் ஆகியவற்றின் பெயரில் மீண்டும் பறித்துக்கொள்ளப்படும் அபாயங்கள் உருவாகின்றன. தொழில் வளர்ச்சிக்கான புதிய பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்படும்போது, அங்கே தொழிலாளர் நலச் சட்டங்கள் எதுவும் செயல்படாது எனத் தொழில் முனைவோருக்கு உறுதி யளித்துத் தொழிலாளர் உரிமைகளைக் கைவிடுகிற நிலைமைகளும் இன்று உள்ளன.
8 மணி நேரப் பணி என்பது தொழிலாளரை ஒரு மனிதராகக் கருதி அவருக்குரிய மாண்பை அங்கீகரிப்பதாகும். மனித உரிமைகள் பல மீட்டெடுக்கப்பட்ட இந்தக் காலத்திலும் 8 மணி நேர வேலை என்ற உரிமை இல்லாத தொழிலாளர்கள்தான் உலகில் அதிகம் என்ற நிலை நீடிக்கிறது. இந்த நிலையை மாற்றுவதற்கு அனைவரும் ஒன்றுசேர்ந்து போராடுவதுதான் ஒரே வழி.
தொடர்புக்கு: neethirajan.t@kslmedia.in

No comments:

Post a Comment