Monday, 19 May 2014

மக்கள் மனநிலை மாறினால்தான் பணப்பட்டுவாடாவை தடுக்க முடியும்: பிரவீண்குமார் பேட்டி

கடந்த தேர்தலில் வாக்காளர் களுக்கு பணப்பட்டுவாடா வெளிப்படையாக நடந்தது. ஆனால் அதை இம்முறை பெருமளவில் தடுத்து நிறுத்தினோம். எனினும், மக்களாய் பார்த்து திருந்தாவிட்டால் தேர்தலின்போது பணப்பட்டுவாடாவை முழுவதுமாக தடுத்து நிறுத்த முடியாது என்று தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கூறினார்.
பதினாறாவது நாடாளுமன்றத்தை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அமைதியாக நடந்து முடிந்துள்ளது. தேர்தல் பரபரப்பில் இருந்து தேர்தல் ஆணையம் மெல்ல மெல்ல விடுபட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலை நடத்தியது பற்றி ‘தி இந்து’வுக்கு தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் அளித்த சிறப்புப் பேட்டி:
2011 சட்டமன்ற தேர்தலுக்கும், நடந்து முடிந்திருக்கும் 2014 மக்களவை தேர்தலுக்கும் என்ன வித்தியாசம்?
தலைமை தேர்தல் அதிகாரியாக நான் சந்தித்திருக்கும் முதல் மக்களவைத் தேர்தல் இது. கடந்த தேர்தலுக்கும், இதற்கும் ஒரு மிகப் பெரிய வித்தியாசமாக பாதுகாப்புப் படையினரின் எண்ணிக்கையை குறிப்பிட்டுச் சொல்லலாம். கடந்த சட்டப்பேரவை தேர்தல் நடந்தபோது, தமிழகத்துடன் சேர்த்து 4 மாநில சட்டப்பேரவை தேர்தல்கள் மட்டுமே நடந்தன. அதனால் அதிக அளவில் மத்திய பாதுகாப்புப் படையினரை பாதுகாப்புப் பணிக்கு வரவழைக்க முடிந்தது. ஆனால் இம்முறை நாடு முழுவதும் தேர்தல் நடந்ததால் அந்த அளவுக்கு மத்தியப் படையினரைப் பெற முடியவில்லை. இருப்பினும் சிறப்பாகவே தேர்தல் நடந்தது.
2011 சட்டப்பேரவைத் தேர்தலில் வெளிப்படையாகவே பணம் கொடுத்தார்கள். ஆனால், இம்முறை மறைமுகமாகவே பணப்பட்டுவாடா நடந்தது. நாங்கள் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து, நடவடிக்கைகளை மட்டுமே எடுக்கமுடியும். மக்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டாலொழிய தேர்தல் நேரத்தில் பண விநியோகத்தை முழுவதுமாக கட்டுப்படுத்த முடியாது.
இந்தத் தேர்தலில் பணப் பட்டுவாடாவை கட்டுப்படுத்தும் உத்தி பலன் தந்ததா?
கடந்த தேர்தலில் பணம் தரக்கூடாது என்று விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டோம். இம்முறை உத்தியை மாற்றி, பணம் வாங்க வேண்டாம் என்று வாக்காளர்களைக் குறிவைத்து பிரச்சாரம் செய்தோம். அது ஓரளவுக்கு பலனும் தந்தது. சில இடங்களில், பணம் வேண்டாம் என்று அரசியில் கட்சியினரை திருப்பி அனுப்பிய சம்பவங்களும் நடந்திருக்கின்றன.
144 தடை உத்தரவு போட்டதற்கு கடும் விமர்சனங்கள் எழுந்தன. அது உண்மையாகவே பயன் தந்ததா?
அந்த உத்தரவு அமலில் இருந்த இரு நாள்களில் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் வாக்காளர்களுக்குத் தரப்படவிருந்த ரூ.55 லட்சம் ரொக்கம் மற்றும் ஏராளமான மதுபாட்டில் பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. பணப் பட்டுவாடாவை ஓரளவு கட்டுப்படுத்த முடிந்ததுடன், எவ்வித வன்முறை சம்பவங்களும் இன்றி தேர்தலை அமைதியாகவும் நடத்த முடிந்தது.
இந்த தேர்தலில் ஏதேனும் ஒரு புதிய பாடத்தை கற்றுக் கொண்டிருக்கிறீர்களா?
ஒவ்வொரு தேர்தலின்போதும் ஒரு பிரச்சினை உருவெடுக்கும். அதனை அடுத்தடுத்த தேர்தல்களில் சரி செய்வோம். இம்முறை, வாக்காளர் பட்டியலில் சில குழப்பங்கள் ஏற்பட்டன. அடுத்த தேர்தலில் அவ்வாறு நிகழாமல் பார்த்துக் கொள்வோம்.
வாக்காளர் பட்டியலில் சொந்த ஊரில்தான் பெயர் இருக்க வேண்டும் என்பது தவறான எண்ணம். நாம் எங்கு பணிபுரிகிறோமோ, எங்கு செட்டில் ஆகிவிட்டோமோ அங்கு பெயர் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். அதுவே பல குளறுபடிகளைத் தவிர்க்கும்.
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி எப்போது தொடங்கும்?
வாக்காளர் பட்டியல் தொடர் திருத்தப் பணி வரும் திங்கள் முதலே தொடங்கும். வழக்கம்போல் பெயர் சேர்ப்பு, பெயர் திருத்தம், முகவரி மாற்றம் போன்றவற்றுக்காக மக்கள் மீண்டும் மனு செய்யத் தொடங்கலாம்.
தேர்தல் நடத்தை விதிகள் எப்போது தளர்த்தப்படும்?
ஓரிரு நாளில் தேர்தல் நடத்தை விதிகள் தளர்த்தப்படும் என்று எதிர்பார்க்கிறேன்.
இவ்வாறு பிரவீண்குமார் பதில் அளித்தார்.

No comments:

Post a Comment