நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை தனது முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே வெளிநாடுகளில் பதுக்கி இருக்கும் கறுப்புப் பணத்தை மீட்டு இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கான சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்துள்ளது. பாஜக-வின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை இந்தியாவுக்குக் கொண்டு வருவோம் என்ற அறிவிப்பை முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே செயல்படுத்தியுள்ளார் மோடி. இதனால் கறுப்புப் பணம் மீண்டும் தலைப்புச் செய்தியாகியுள்ளது.
ஓய்வுபெற்ற நீதிபதி எம்.பி. ஷா தலைவராகவும் ஓய்வுபெற்ற நீதிபதி அரிஜித் பசாயத் இணைத் தலைவராகவும் இருப்பர். இக்குழுவில் வருவாய்த்துறைச் செயலர், ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர், நேரடி வரி வருவாய் ஆணையத்தின் தலைவர், புலனாய்வுத்துறை டிஐஜி, அமலாக்கத்துறை இயக்குநர், சிபிஐ இயக்குநர், வருவாய் புலனாய்வுத்துறை இயக்குநர், நிதித்துறை புலனாய்வுப் பிரிவு, ரா பிரிவின் தலைவர்களும் உறுப்பினர்களாக உள்ளனர்.
இக்குழு கறுப்புப் பணம் தொடர்பான விசாரணை, புலனாய்வு, அது தொடர்பான மேல் நடவடிக்கை, வழக்கு தொடர்வது உள்ளிட்டவற்றை மேற்கொள்ளும்.
இந்தியர்கள் வெளிநாடுகளில் பதுக்கியுள்ள கறுப்புப் பணத்தின் அளவைக் கேட்டால் அனைவருக்குமே ரத்தக் கொதிப்பு வந்துவிடும். தோராயமான கணக்குப்படி 40 லட்சம் கோடி ரூபாய். 1970-ம் ஆண்டிலிருந்தே ஸ்விஸ் வங்கியில் கறுப்புப் பணம் போடப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் வழி யாக பெரும்பாலும் ஸ்விட்சர்லாந்துக்கு கறுப்புப் பணம் செல்வதாகக் கூறப் படுகிறது.
வழக்கு
கறுப்புப் பணத்தை இந்தியாவுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை பல தரப்பில் வலியுறுத்தப்பட்ட போதிலும் இது தொடர்பான பொது நல வழக்கு 2009-ம் ஆண்டுதான் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. மூத்த வழக்கறிஞர் ராம் ஜேத்மலானி உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கில் 2011-ம் ஆண்டு ஜூலை 4-ம் தேதி உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது.
அதன்படி வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை மீட்க அரசு என்ன நடவடிக்கை எடுத்தது எனக் கேட்டது. மூன்று ஆண்டுகளாக இதற்கு எவ்வித பதிலும் அளிக்கப்படாமல் மௌனம் காத்தது அப்போதைய மத்திய அரசு. கடந்த ஏப்ரலில் இந்த வழக்கு மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, தேர்தலை காரணம் காட்டியது மத்திய அரசு. ஆனால் உச்ச நீதிமன்றமோ சிறப்புப் புலனாய்வுக் குழு அமைப்பதற்கான காலக்கெடுவை விதித்தது. இந்நிலையில் புதிதாக பதவியேற்ற மோடி தலைமையிலான அரசு உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தும் விதமாக சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்தது.
முதலிடம்
கறுப்புப் பணத்தை பதுக்கி வைத்துள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. அடுத்ததாக பட்டியலில் இடம்பிடித்திருப்பது ஒரு காலத்தில் கம்யூனிஸ்டுகளின் ஆதிக்கத்தில் இருந்த தோழமை நாடான ரஷியாதானாம். ஸ்விஸ் வங்கியில் கறுப்புப் பணத்தைப் பதுக்கி வைத்துள்ள நாடுகளின் முதல் ஐந்து நாடுகளில் அமெரிக்கா இடம்பெறவில்லை.
சர்வதேச நெருக்குதல்
ஒவ்வொரு நாட்டிலும் கறுப்புப் பண விவகாரம் பூதாகரமாக உருவெடுத்ததால் அனைத்து நாடுகளும் கறுப்புப் பணத்துக்கு புகலிடம் அளிக்கும் ஸ்விட்சர்லாந்துக்கு நெருக்குதல் அளித்தன. இதைத் தொடர்ந்து விவரம் தேவைப்படும் நாடுகள் கேட்டுக் கொண்டால் தங்கள் நாட்டில் பணத்தை வைத்துள்ளவர்களின் பட்டியலைத் தரத் தயார் என்று ஸ்விட்சர்லாந்தும் சர்வதேச நெருக்கடிக்குப் பணிந்து அறிவித்தது. 2011-ம் ஆண்டிலேயே ஸ்விட்சர்லாந்து இந்த அறிவிப்பை வெளியிட்டது. ஆனாலும் இந்திய அரசு எந்த கோரிக்கையும் வைக்கவில்லை. இது ஏன் என்பது அப்போதைய ஆட்சியாளர்களைத்தான் கேட்க வேண்டும்.
இந்தியா ஏழை நாடு என்று ஸ்விட்சர்லாந்து அரசிடம் கூறினால் நம்புவார்களா? அந்த நாட்டு வங்கியில் இந்தியர்கள் சேமித்து வைத்துள்ள தொகை இந்தியாவின் வெளிநாட்டுக் கடனை விட 13 மடங்கு அதிகமாகும்.
ஸ்விட்சர்லாந்துக்கு ஆண்டுதோறும் 80 ஆயிரம் பயணிகள் செல்கின்றனர். இவர்களில் 25 ஆயிரம் பேர் அடிக்கடி பயணம் மேற்கொள்கின்றனர். அடிக்கடி பயணம் மேற்கொள்பவர்களை விசாரித்தாலே அவர்கள் சென்று வந்ததன் நோக்கத்தைத் தெரிந்துகொள்ள முடியும்.
யாரிடம் அதிகம் இருக்கும்: பொதுவாக தொழில்துறையினர், வர்த்தகர்கள், அரசியல் தரகர்கள், அரசியல்வாதிகள், வழக்கறிஞர்கள், ஆடிட்டர்கள், சினிமாத்துறையினர் ஆகியோர் கறுப்புப் பணத்தை வைத்துள்ளனர். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வோரும் பணத்தை பதுக்குகின்றனர். ஊழல் புரியும் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் அதிகாரிகளும் லஞ்சப் பணத்தை வெளிநாட்டு வங்கிகளில் முடக்குகின்றனர். இந்தப் பட்டியலில் சில கிரிக்கெட் வீரர்களும் உள்ளனர்.
2006-ம் ஆண்டு ஸ்விட்சர்லாந்து அரசு பட்டியலை வெளியிட்டது. அதில் இந்தியா போட்டுள்ள தொகை 1,45,600 கோடி டாலர். ரஷியா - 47,000 கோடி டாலர், இங்கிலாந்து - 39,000 கோடி டாலர், உக்ரைன்- 10,000 கோடி டாலர், சீனா - 9,600 கோடி டாலர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஸ்விட்சர்லாந்து வங்கியில் போடப்பட்ட தொகையே இவ்வளவு எனில் பிற நாட்டு வங்கிகளில் போடப்பட்ட தொகையைக் கணக்கிட்டால் தலை சுற்றுவது நிச்சயம். பங்குச் சந்தையில் முறையற்ற பங்கு வைத்திருப்பது, போதை மருந்து கடத்தல், போலியான திட்டப் பணிகள் மூலம் கிடைக்கும் பணம் ஆகியவையும் வெளிநாட்டு வங்கிகளில் போடப்படுகின்றன.
ஹவாலா
கறுப்புப் பண பரிவர்த்தனை பெரும் பாலும் ஹவாலா முறையில் மேற்கொள்ளப்படுகிறது. வெளிநாடு களுக்கு ஏற்றுமதி செய்வோர் மற்றும் முறையற்ற தொழில் புரிவோர் இத்தொழிலில் ஈடுபடுகின்றனர்.
கறுப்புப் பணம் வைத்துள்ள இந்தியர்களின் பட்டியலை விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டது. ஆனால் அரசு இதுகுறித்து விசாரணை நடத்தவில்லை.
ஜெர்மனியும் தங்கள் நாட்டில் பணத்தை போட்டவர்கள் பட்டியலைத் தர தயாராக இருந்தது. இவ்விதம் தங்கள் நாட்டில் உள்ள லெச்டென்ஸ்டீன் எல்ஜிடி வங்கியில் போட்ட 26 பேரின் பட்டியலை அளித்தது. இதில் 18 பேரின் விவரத்தை கடந்த ஏப்ரலில் மத்திய அரசு வெளியிட்டது. இந்தப் பட்டியலில் இருப்பவர்களில் பெரும்பாலோர் அறக்கட்டளைகள் பேரில் பணத்தை வெளிநாட்டு வங்கியில் முடக்கியுள்ளனர். இவர்கள் அனைவருமே தொழிலதிபர்களாவர்.
பயன்தருமா?
குழுவில் அதிக எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் இருப்பதால் நடவடிக்கை முடிய கால தாமதம் ஆகும் என்று கூறப்படுகிறது. ஆனால் முக்கியத் துறைகளின் தலைவர்கள் இருப்பதால் விசாரணை வலுவாக இருக்கும் என்று அரசு தரப்பு கூறுகிறது.
எச்சரிக்கை
அரசின் இந்த நடவடிக்கை கறுப்புப் பணத்தை பதுக்குவோருக்கு எச்சரிக்கையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
அமெரிக்கா வழியில்
இந்த விஷயத்தில் அமெரிக்க வழியை பின்பற்றினாலும் தப்பில்லை. வெளிநாட்டிலிருந்து பெறப்பட்ட பட்டியலில் இடம்பெற்றிருந்த கறுப்புப் பணத்தை பதுக்கிய தங்கள் நாட்டவர் களுக்கு அவர்கள் பதுக்கிய காலத்தி லிருந்து செலுத்த வேண்டிய வரி, அபராத வரியை விதித்து வசூலித்துள் ளது. இந்தியாவும் அத்தகைய நடைமுறையைப் பின்பற்றலாம்.
எப்படியிருப்பினும் இது நல்ல தொடக்கமே. இதன் சாதகமான பலன் நமக்கு நிச்சயம் வளம் சேர்க்கும் என்பதில் சந்தேகமில்லை.
அரசின் இந்த நடவடிக்கையை அண்ணா ஹசாரே போன்ற சமூக ஆர்வலர்கள் மட்டுமின்றி இடதுசாரி களும் வரவேற்றுள்ளனர். இந்த விஷயத்தில் அரசு எவ்வித சமரசமும் செய்துகொள்ளாமல் உறுதியாக செயல்பட்டால் சர்வதேச அளவில் இந்தியாவைப் பற்றிய மோசமான பிம்பம் மறைந்து பெருமை மேலோங்கும்.
ramesh.m@thehindutamil.co.in