Tuesday, 2 September 2014

இந்திய எல்லையில் 150 மீட்டர் நீள சுரங்கப்பாதை: ராணுவம் முறியடித்தது

பாகிஸ்தானிலிருந்து இந்திய எல்லைக்குள் தீவிரவாதிகள் ஊடுருவும் விதமாக 150 மீட்டர் நீள சுரங்கப்பாதை கட்ட இருப்பது இந்திய ராணுவத்தால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் ஜம்மு மாவட்டத்தின் புல்வாமாவில், தீவிரவாதிகள் ஊடுருவும்விதமாக, 150 மீட்டர் நீளத்தில் தோண்டப்பட்டிருந்த சுரங்கம் இந்திய ராணுவத்தால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் கூறும்போது, "இந்திய எல்லைக்கட்டுப்பாட்டுப் பகுதியை மீறி நுழைய முடியாத தீவிரவாதிகள் இது போல, சுரங்கம் அமைத்து தங்கள் திட்டங்களை நிறைவேற்ற நினைத்துள்ளனர்.
150 மீட்டர் நீளத்திற்கு தோண்டப்பட்டிருந்த சுரங்கம், ஆகஸ்ட் 22-ம் தேதி ராணுவ சோதனையின்போது கண்டுபிடிக்கப்பட்டது. பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்குள் நுழையும் விதமாக தரையிலிருந்து 20 அடி ஆழத்தில், 2.5 அடி விட்டத்தில் இது தோண்டப்பட்டுள்ளது.
இந்த சுரங்கத்தின் பணிகள் முடிவடையும் முன்பு கண்டுபிடிக்கப்பட்டதால், தீவிரவாதிகளின் ஊடுருவலும் மிகப்பெரிய சதி வேலையும் முறியடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து எல்லைப்பகுதி முழுவதும் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். வேறு ஏதேனும் பாதைகள் உள்ளதா என்று தேடப்பட்டு வருகிறது" என்றார்.
கடந்த 2008- ஆம் ஆண்டு, இதே பல்லன்வாலா பகுதியில் சுரங்கம் இருப்பதை ராணுவம் கண்டுபிடித்து அழித்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment