வட இந்தியாவில் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள தமிழ்மொழித் துறைகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
துணைக் குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர்.இராதாகிருஷ்ணன் முயற்சியால் நவீன இந்திய மொழிகள் துறை என ஒன்று உருவாக்கப்பட்டு அதன் கீழ், அனைத்து இந்திய மொழி களும் உத்தரப்பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் டெல்லி பல்கலைக் கங்களில் அறிமுகப்படுத்தப்பட்டன.
இதில், உத்தரப்பிரதேசத்தின் ஆக்ரா, மீரட், கான்பூர், அலகாபாத் மற்றும் பஞ்சாபின் பட்டியாலா, சண்டீகர் உட்பட பெரும்பாலான பல்கலைக் கழகங்களில் இத்துறைகள் மூடப்பட்டுவிட்டன. மற்றவைகளும் பல்வேறு காரணங்களால் மூடப்படும் தருவாயில் உள்ளன.
இவற்றில் முக்கிய இடம் வகிப்பது, காசியில் உள்ள பனாரஸ் இந்து பல் கலைக்கழகம் ஆகும். இதில், டாக்டர்.இராதாகிருஷ்ணன், துணைவேந்தராக இருந்தபோது 1945 ஜனவரி 2-ல் தொடங்கப்பட்ட பழமையான தமிழ்த் துறையில், இரு பேராசிரியர்கள் பணியிடங்களும் காலியாக உள்ளன.
காழ்ப்புணர்ச்சி காரணம்
பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் கடைசியாக பணியாற்றி ஓய்வு பெற்ற பேராசிரியர் என்.அருண் பாரதி ‘தி இந்து’விடம் கூறும்போது, “எனது ஓய்வுக்குப் பின் அந்தப் பதவியை மாற்றுத்திறனாளிகளுக்கு என பல்கலைக்கழக நிர்வாகம் ஒதுக்கீடு செய்துள்ளது. ஒன்றுக்கும் அதிகமான இடங்கள் இருந்தால்தான் இவ்வாறு ஒதுக்கீடு செய்ய முடியும். தமிழ்மொழியின் மீது இருக்கும் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக பணியில் யாரும் சேரக் கூடாது என அவர்கள் விரும்புகிறார்கள் என்றார்.
நிதி முறைகேடு
கடந்த 1978-ல் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சிக் கழகம் சார்பிலும் சில லட்சங்கள் நிதியுதவி அளிக்கப்பட்டு அதன் வட்டித் தொகையில் பனாரஸ் பல்கலைக்கழகத்தில் தமிழுக்காக ஓர் ஆசிரியர் பணியிடம் அமைக்கப்பட்டது. 1986-ல் சென்னை பிரஸிடென்ஸி கல்லூரியின் பேராசிரியர் ரபிசிங், இரு வருட விடுமுறையில் பனாரஸ் சென்று அங்கு பணியாற்றய பின் திரும்பிவிட்டார். அதற்குப் பிறகு, அத்தொகையின் வட்டி வேறு மொழிக்கு திருப்பிவிடப்பட்டுவிட்டது.
இதுபற்றி அருண் பாரதி மேலும் கூறும்போது, “இந்த பிரச்சினை தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்ட பின் 2006-ம் ஆண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில், சென்னை விவேகானந்தா கல்லூரியில் தற்காலிகமாக பணியாற்றி வந்த சரவணன் என்பவர் உதவிப் பேராசிரி யராக அமர்த்தப்பட்டார். இவரும் தற் போது சுமார் ஏழு வருடங்களாக சட்ட விரோத விடுப்பை பெற்று சென்னை யில் ஒரு கல்லூரியில் பணியாற்றி வருகிறார். இதனால், வேறு யாரையும் அந்தப் பணியில் அமர்த்த முடியாமல் உள்ளது’’ என்றார்.
காசியின் சம்ஸ்கிருத மொழிக்காக உள்ள சம்பூர்ணானந்தா சம்ஸ்கிருத பல்கலைக்கழகம் மற்றும் காசி வித்யா பீடத்தில் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை அளித்த தொகையில் தமிழுக்காக பேராசிரியர்கள் அமர்த்தப்படவில்லை.
அசாம், கொல்கத்தா
அதேபோல், அசாம் மாநிலத்தின் குவாஹாட்டி பல்கலைக்கலை கழகத்தில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றி வந்த க.மகாலிங்கம் பத்து மாதங்களுக்கு முன் இறந்து விட்டார். அவரது பணியிடத்திலும் இன்னும் யாரையும் குவாஹாட்டி பல்கலைக் கழக நிர்வாகம் அமர்த்தவில்லை. மிகவும் பழமையானதாகக் கருதப்படும் கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையிலும் நான்கு பேராசிரி யர்களுக்கானப் பணியிடங்கள் பல வருடங்களாக காலியாக உள்ளன.
ராஜஸ்தானின் ஜெய்பூர் மற்றும் உதய்பூரில் தமிழ்த்துறை தொடங்கு வதற்காக பல ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்ட விளம்பரத்துடன் பேராசிரியர் அமர்த்தும் பணி பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது.
தலைநகரும் விதிவிலக்கல்ல
டெல்லியில், உள்ள, ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழக அரசால் அளிக்கப்பட்ட ரூ. 50 லட்சத்தின் உதவியால் கடந்த 2007-ல் தொடங்கப்பட்ட தமிழ்த்துறையில் 32 ஆய்வு மாணவர்கள் இருந்தும், இரண்டு பேராசிரியர்கள் மட்டுமே உள்ளனர். இதேநிலையில், டெல்லி பல்கலைக்கழகத்திலும் உள்ளது. அதன் கீழ் உள்ள கல்லூரிகளிலும் நான்கு பேராசிரியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இது குறித்து அங்கிருந்து ஓய்வு பெற்ற பேரசிரியரான அ.மாரிமுத்து ‘தி இந்து‘விடம் கூறும்போது, “இங்கு தமிழக அரசு சார்பில் வருடந்தோறும் ஒரு சொற்பொழிவை நடத்த முயற்சி செய்யப்பட்டது. இதற்காக என்னிடம் கருத்து கேட்கப்பட்ட போது, அதற்கு பதிலாக அந்த தொகையை இங்கு பயிலும் ஆய்வு மாணவர்களுக்கு உதவித்தொகையாக அளிக்கலாம் என அளித்த யோசனை இன்னும் அமல்படுத்தவில்லை’’ என்றார்.
டெல்லிக்கு 130 கி.மீ தொலைவில் உள்ள அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்திலும், லக்னோ பல்கலைக் கழகத்திலும் உள்ள தமிழ்த்துறைகளின் பயன்பாடுகளும் மிகக் குறைவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கு அந்த பல்கலைக்கழகங்களில் உள்ள தமிழ்த்துறைகள் பற்றிய விழிப்புணர்வு குறைவாக இருப்பது காரணமாக உள்ளது. இதேநிலை நீடித்தால், இங்குள்ள தலா ஒரு பேராசிரியர்களின் ஓய்விற்கு பின் அவைகளும் விரைவில் இழுத்து மூடப்படும் நிலைக்கு தள்ளப்படும் அபாயம் உள்ளது.
No comments:
Post a Comment