நடப்பு நிதி ஆண்டில் அரசு வங்கிகளின் மொத்த வாராக் கடன் விகிதம் 4.4 சதவீதமாக இருக்கும் என்று நிதி ஆய்வு நிறுவனமொன்று வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஐசிஆர்ஏ நிதி ஆய்வு நிறுவனம் வெளியிட்டிருக்கும் பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவித்திருக்கும் விவரம்:
இந்த நிதி ஆண்டின் இறுதியில் பொதுத் துறை மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த அனைத்து வங்கிகளின் மொத்த வாராக் கடன் விகிதம் 4 சதவீதம் முதல் 4.2 சதவீதம் வரை இருக்க வாய்ப்புள்ளது. கடந்த நிதி ஆண்டின் முடிவில் இது 3.9 சதவீதமாக இருந்தது.
அளித்த கடன்களைத் திரும்பப் பெறுவதில் சிக்கல் நீடிக்கிறது. இதனால் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் வங்கிகளின் நிதிச் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. முதல் காலாண்டு அளவில் வாராக் கடன் விகிதம் 4 சதவீதமாக உள்ளது.
நடப்பு நிதி ஆண்டின் முடிவில் பொதுத் துறையைச் சேர்ந்த வங்கிகளின் மொத்த வாராக் கடன் 4.4 சதவீதம் முதல் 4.7 சதவீதம் வரை இருக்க வாய்ப்புள்ளது. கடந்த நிதி ஆண்டு இறுதியில் இது 4.4 சதவீதமாக இருந்தது.
வங்கிகளின் கடன் அளிப்பு, வைப்புத் தொகை வளர்ச்சி திருப்திகரமாக உள்ளது. மறுசீரமைப்புக்குப் பரிந்துரைக்கப்படும் வாராக் கடன்களின் விகிதம் குறைந்துள்ளது. மொத்த கடன்களில் 0.6 சதவீத அளவு எஃகு துறைக்கு அளிக்கப்பட்டுள்ளது. நிலக்கரிச் சுரங்க உரிமங்களை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. வங்கிகள் அளித்துள்ள கடன்களைத் திரும்பப் பெறுவதில் இந்த விவகாரம் எவ்விதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 5.7 சதவீதமாக இருந்தது. முந்தைய இரு காலாண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 4.6 சதவீதமாக இருந்தது. தொழிலக உற்பத்தி அதிகரித்ததைத் தொடர்ந்து மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் உயர்வு பெற்றது.
நடப்பு நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 5.3 சதவீதம் முதல் 5.5 சதவீதம் வரை இருக்க வாய்ப்புள்ளது. கடந்த ஆண்டு இது 4.7 சதவீதமாக இருந்தது என அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment