மரண தண்டனையை நிறைவேற்றுவதில், மனிதர்கள் விதவிதமான பரிசோதனைகளை நிகழ்த்தியிருக்கிறார்கள். அவற்றில் ஒன்றுதான் கில்லட்டின். பிரெஞ்சுப் புரட்சியின்போது மரண தண்டனை அளிப்பதில் இது பரவலாகப் பயன்படுத்தப்பட்டது. அயர்லாந்து மற்றும் பிரிட்டனில் ஏற்கெனவே இதுபோன்ற தலை வெட்டும் கருவிகள் பயன்பாட்டில் இருந்தன. எனவே, இதுபோன்ற கருவியைப் பயன்படுத்தினால் விரைவாக வேலை முடிந்துவிடும் என்று ஜோசப் இக்னேஸ் கில்லட்டின் என்ற பிரெஞ்சு மருத்துவரும் அவரது ஆதரவாளர்களும் கருதினார்கள்.
ஆன்டனி லூயி என்ற பிரெஞ்சு மருத்துவர் இந்தக் கருவியை உருவாக்கினார். எனினும் இதைப் பரிந்துரைத்த ஜோசப் இக்னேஸ் கில்லட்டினின் பெயரே இந்தக் கொலைக் கருவிக்கு நிலைத்துவிட்டது.
முதலில் பிணங்களை வைத்து இதன் செயல்படும் திறன் சோதிக்கப்பட்டது. 1792 முதல் இது பயன்பாட்டுக்கு வந்தது. பிரெஞ்சுப் புரட்சியின்போது, ஆயிரக் கணக்கானோர் இந்தக் கருவி மூலம் கொல்லப்பட்டனர். பிரெஞ்சு மன்னர் பதினாறாம் லூயியும் அவரது மனைவியும் இந்தக் கருவி மூலம்தான் கொல்லப்பட்டனர்.
அதன் பிறகும் இந்தக் கருவி தொடர்ந்து பயன்படுத்தப்பட்டது. யூதர்கள் உள்ளிட்ட பலரைக் கொல்ல நாஜிப் படைகளும் இந்தக் கருவியைப் பயன்படுத்தின. பிரான்ஸின் மர்சேய் நகரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஹமிதா ஜான்தோபி என்ற துனிஷியா நாட்டைச் சேர்ந்த கொலைக் குற்றவாளிதான் கில்லட்டின் மூலம் கொல்லப்பட்ட கடைசி நபர். 1977-ல் இதே நாளில் அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
1981-ல் மரண தண்டனையை பிரான்ஸ் முற்றிலும் தடைசெய்தது. எனவே, இந்தக் கருவியும் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டது.
No comments:
Post a Comment